சனி, 28 செப்டம்பர், 2019

BBC : சீனா - வங்கதேச கூட்டணியால் திருப்பூர் தொழிலாளர்களுக்கு இழப்பு?


எந்தத் தொழிலும் தெரியாமல், உள்ளூர் மொழியான தமிழும் தெரியாமல் திருப்பூர் நகரத்துக்கு காலையில் வந்திறங்கியவர்கள், ஐந்து தெருக்களில் அலைந்து திரிந்து, பத்து பின்னலாடை நிறுவனப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால் அன்றைய பொழுது சாய்வதற்குள் அவர்களுக்கு வேலை கிடைத்துவிடும். இது ஒருவேளை மிகையாக தெரியலாம். ஆனால், கடந்த இரண்டு - மூன்று ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் இதுதான் உண்மை நிலவரம். இப்போது அப்படி இல்லை.
'வேலைக்கு ஆட்கள் தேவை' என்று எழுதப்பட்ட பதாகைகளால் நிரம்பியிருந்த ஊரில், தொழில் நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டதால், 'கட்டடம் வாடகைக்கு விடப்படும்' என்ற பதாகைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
சுமார் 10 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் இந்த நகரின் போக்குவரத்து நெரிசல் இந்தியாவின் மெட்ரோ நகரங்களுக்கு இணையானதாகவே இருந்தது. அவற்றில் பெரும்பாலான வாகனங்கள் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான பட்டன்கள் முதல் துணி மூட்டைகள் வரை சுமந்து சென்றவை.
"முன்பெல்லாம் இங்கு வாகனப் போக்குவரத்தால் உண்டாகும் இரைச்சலால் கடைக்குள் அமர்ந்திருக்கவே முடியாது.
கடந்த ஐந்து - ஆறு மாதங்களாக இங்கு ஆள் நடமாட்டமே இல்லை" என்கிறார், திருப்பூரின் பிரபலமான 'பனியன் பஜாரில்' 15 ஆண்டுகளாக கடை வைத்திருக்கும் தேவி.

;மதிய நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கூட பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான மாதிரிகளைக் கொண்டு செல்பவராகவோ, தொழில் தொடர்பான பரிமாற்றத்துக்காக வங்கிக்குச் செல்பவராகவோ இருக்கவே அதிக வாய்ப்புண்டு.
சமீப மாதங்களில் நல்ல மழை பொழிந்து, வெப்பம் தணிந்து ரம்மியமான சூழல் இருக்கும்போதும் மக்கள் கூட்டமும் வாகன நெரிசலும் நிறைந்த சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சாலைகள் முதல் மக்கள் முகங்கள் வரை பொருளாதார சரிவின் வாட்டம் தெரிகிறது.
"ராஜஸ்தானில் வேலை இல்லை என்றுதான் இங்கு வந்தேன். ஜி.எஸ்.டி வரி அமலானபின் இங்கும் அதிகம் வேலை இல்லை. எங்கள் கடையில் வியாபாரம் நடந்தே மூன்று நாட்கள் ஆகின்றன," என்கிறார் பின்னலாடை மொத்த வணிகக் கடை ஒன்றில் வேலை பார்க்கும் கிருஷ்ணா.
"என்னை நம்பிக்கொண்டு என் அம்மாவும் அப்பாவும் ராஜஸ்தானில் இருக்கிறார்கள். நானோ இங்கு வருவாய் இல்லாமல் சிரமப்படுகிறேன்," என்கிறார் 21 வயதாகும் அந்தத் தொழிலாளி.

சிறு தொழில்களைச் சார்ந்துள்ள பெரும் தொழில்கள்

சீனா, வங்கதேசம் போன்ற பின்னலாடை உற்பத்தி செய்யும் நாடுகளில் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் உற்பத்தி செய்யப்படும் வகையிலேயே பெரும்பாலான நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், திருப்பூரில் நிலைமை அப்படியல்ல. துணிக்கு சாயமிடப்படுவது ஓர் இடத்தில் நடக்கும், துணிகளில் அச்சிடப்படுவது ஓர் இடத்தில் நடக்கும், பட்டன் வைப்பது முதல் லேபிள் ஓட்டுவது வரை நிறுவனத்தில் அல்லாமல் 'ஜாப் வொர்க் யூனிட்' எனப்படும், நிறுவனத்துக்கு வெளியில் அமைத்துள்ள சிறு தொழில் கூடங்களில் நடக்கும்.
இதன் காரணமாக இயந்திரங்களைவிட மனிதர்களை நம்பியே அதிகம் தொழில் நடக்கும். இப்போது பொருளாதார மந்தநிலை உண்டாக்கிய பாதிப்பு அதிகமாகவும் பரவலாகவும் இருக்க அதுதான் காரணம்.
வெளிமாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் திருப்பூர் வந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கே மெல்ல மெல்லத் திரும்பத் தொடங்கிவிட்டனர்.
நூற்றுக்கணக்கானவர்கள் வடமாநிலங்கள் செல்லும் ரயில்களில் ஏறிச் செல்வது இப்போதெல்லாம் திருப்பூர் ரயில் நிலையத்தில் இயல்பான காட்சியாகிவிட்டது.

திருப்பூரில் பிரச்சனை என்ன?

பல நூறு கோடி ரூபாய் முதல் சில ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதி செய்யும் பின்னலாடை நிறுவனங்கள்கூட சிறு சிறு 'ஜாப் வொர்க் யூனிட்'கள் துணையுடன் இயங்குவது திருப்பூரில் இயல்பான ஒன்று.
சொந்த ஊர் திரும்பும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு திரும்பவும் வருவதற்கான உத்தரவாதம் இல்லாவிட்டாலும் நம்பிக்கை மட்டுமே உள்ளது. e>இந்த சிறு நிறுவனங்கள் பெரும்பாலும் பணத்தை ரொக்கமாகவே புழங்கி வந்தன. 2016-இல் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டபின் இவை அனைத்தும் நிலைகுலைந்தன. அடுத்த சில வாரங்களுக்கு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவே முடியாத நிலை இருந்தது.
பின்னர் ஜி.எஸ்.டி என்று பரவலாக அறியப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலானபின் அதிகமான வரி விகிதம், வரி விகிதத்தில் அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், கூடுதலாக செலுத்திய வரியைத் திரும்பப் பெறுவதில் உண்டான தாமதம், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தம் உள்ளிட்ட சிக்கல்கள் அடுத்த அடியாக விழுந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக