திங்கள், 9 செப்டம்பர், 2019

இந்தியாவின் டாப் 10 பள்ளிகளில் 8 பள்ளிகள் சென்னையில்...

tamil.indianexpress.com : எஜுகேஷன் வேர்ல்ட் 2019 – 20 ஆம் ஆண்டு சர்வேவில்,
இந்தியாவில் பள்ளிகள் தரவரிசையில், நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் இடம்பெற்ற முதல் 10 பள்ளிகளில் 8 பள்ளிகள் சென்னையில் இடம் பெற்றுள்ளன.
எஜுகேஷன் வேர்ல்ட் மற்றும் சி ஃபோர் டெல்லி என்ற அமைப்புடன் இணைந்து 13வது ஆண்டு பள்ளிகளின் தரவரிசை சர்வேவை முடித்துள்ளது. இந்த சர்வேவுக்காக இந்தியா முழுவதும் 28 கல்வியியல் மையங்களில், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், கல்வியாளர்கள் என 12,213 பேர்களிடம் கள ஆய்வில் பல்வேறு பின்னணிகளில் நேர்காணல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நேர்காணலில் பதில் அளித்தவர்களிடம் உள்கட்டமைப்பு, பணியாளர்களின் திறன், அகாடமிக் கௌரவம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய 14 அளவீடுகளின் அடிப்படையில் இந்தியாவின் 1000 சிறந்த பள்ளிகளுக்கு மதிப்பீடு அளிக்க கேட்கப்பட்டது. .

இந்த சர்வேயில் நாடு முழுவதும் பகல் நேர ஆண்கள், பெண்கள், இருபாலர், சர்வதேச பள்ளிகள், அரசு பள்ளிகள், உண்டு உறைவிடப் பள்ளிகள் ஆகிய வகைகளில் 1000 பள்ளிகளை தரவரிசை செய்துள்ளது. இதற்காக தமிழகத்தில் 141 பள்ளிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
இந்த தரவரிசையில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக சென்னை ஐஐடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி அரசின் பகல் நேர பள்ளிகள் பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதே போல, பகல் நேர இருபாலர் பள்ளிகள் பிரிவில் அடையாரில் உள்ள கே.எஃப்.ஐ. பள்ளி 7வது இடத்தையும் சிஷ்யா பள்ளி 10வது இடத்தையும் பிடித்துள்ளன.
நாடு முழுவதும் உள்ள ஆண்கள் பகல் நேரப் பள்ளிகள் பிரிவில் கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி ஆண்கள் சீனியர் மேல்நிலைப்பள்ளி 5வது இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டில் உள்ள சிறப்பு பள்ளிகளில் சென்னையில் உள்ள சங்கல் பள்ளி 10வது இடத்தைப் பிடித்துள்ளது. பகல் நேர சர்வதேச பள்ளிகள் பிரிவில் நாவலூரில் உள்ள கே.சி ஹைக் சர்வதேச பகல் நேர பள்ளி 5வது இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளி பிரிவில் கோவூரில் உள்ள லாலாஜி மெமொரியல் சர்வதேச பள்ளி 8வது இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச இருபாலர் உறைவிடப் பள்ளி பிரிவில் கோவையில் உள்ள சின்மயா சர்வதேசப் பள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பள்ளிகள் தரவரிசையில் நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் இடம்பெற்ற முதல் 10 பள்ளிகளில் 8 பள்ளிகள் சென்னையில் இடம் பெற்றுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக