திங்கள், 19 ஆகஸ்ட், 2019

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட கோட்டைச் சுவர்!

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட கோட்டைச் சுவர்!மின்னம்பலம் : கீழடியில் தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்டுள்ள அகழாய்வில் கோட்டைச் சுவர் ஒன்று தென்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறையால் கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. அகழாய்வின் மூலம் பெறப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள், 2500 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரீகம் அங்கிருந்ததை உறுதி செய்தன.
தமிழரின் தொண்மையை பறைசாற்றும் விதமாக அந்த ஆய்வு அமைந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் கீழடி அகழாய்வுக்கு கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
மத்திய தொல்லியல் துறை மூன்றுகட்ட அகழாய்வுகளுடன் நிறுத்திக்கொண்டது. இந்நிலையில் நான்காம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக ஐந்தாம் கட்ட அகழாய்வு ஜூன் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்காக தமிழக அரசு 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் நடைபெறும் இந்த அகழாய்வு 5 பேரின் நிலங்களில் 27 இடங்களில் நடத்தப்பட்டுவருகிறது.
அந்த வகையில், வித்தியாசம் போதகுரு என்பவரது நிலத்தில், அகழாய்வு நடந்த போது, சுவர் ஒன்று தென்பட்டது. தொடர்ந்து நடந்த அகழாய்வில், அந்த சுவர், முருகேசன் என்பவரது நிலம் வழியாக, கிழக்குப்பகுதி வரை நீண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுவரை முழுமையாக கண்டறிய, ஒரு வாரமாக அகழாய்வு நடைபெற்றுள்ளது. இது நீண்ட கோட்டைச் சுவராக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கண்டறியப்பட்ட சுவரை விட, இந்த சுவர் வித்தியாசமாக உள்ளது. நவீன கட்டுமானம் படுக்கை வசத்தில், செங்கற்களை ஒரு வரிசையாகவும் உயரவாக்கில், ஒரு வரிசையாகவும் வைத்து, கட்டடம் கட்டியுள்ளனர். மேலும், சுவர் சாயாமல் இருக்க, உயர வரிசை செங்கற்களுக்கு நடுவே, படுக்கை வசத்திலும், செங்கற்கள் வைக்கப்பட்டுள்ளன. சுவரின் தன்மையை காணும் போது, படைக்கலன் தங்கியிருக்கும் இடத்தின் பாதுகாப்பு சுவராக இருக்க வாய்ப்புள்ளதாக, தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.
இந்த சுவர், முருகேசன் நிலத்தில் இருந்து, கிழக்கு பகுதி வரை நீண்டுள்ளது. எனவே, அந்த நிலத்திலும், அகழாய்வை தொடரும் பட்சத்தில், சுவற்றின் முழு பரிமாணத்தையும் கண்டறிய வாய்ப்பு உள்ளது. சுவரின் முழு அளவையும் கணக்கெடுத்து, தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளனர்.
மேலும் இந்த அகழாய்வில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை உள்ளிட்ட 675க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிகளவில் பலவகை சுவர்களும் கண்டறியப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக