வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

கல்வித்துறையில் பெரும் சரிவு .. களவாணித்துறையாக மாற்றிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு!

சாவித்திரி கண்ணன் : : சத்தமில்லாமல் ஒரு மிகப் பெரும் சரிவு
அரங்கேறிவருகிறது..! அந்த சரிவின் விளைவு ஒரு கட்டத்தில் இந்த சமுகத்தையே சவக்குழிக்குள் தள்ளீவிடும்..!
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கிடுகிடுவென்று குறைந்து வருகிறது. பத்தாம் வகுப்பில் இருந்து 300 மாணவர்கள் படித்து வெளியேறுகிறார்கள் என்றால், முதலாம் வகுப்பில் சேர்பவர்கள் வெறும் ஐம்பதாகத் தான் உள்ளனர்!
கடந்த இருபதாண்டுகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் குறைந்துள்ளனர்.- அரசு பள்ளிகளில்! பத்தாண்டுகளுக்கு முன்பு 3000 த்திற்கு அதிகமான மாணவர்கள் படித்த ஒரு அரசு பள்ளியில் தற்போது 700 த்து சொச்சம் மாணவர்கள்! 500 க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்த அரசு பள்ளிகளில் அறுபது,எழுபது மாணவர்கள்!
மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு குறைந்தாலும் தங்கள் சம்பளம் குறையப் போவதில்லை!
பள்ளிகூடமே மூடப்பட்டாலும் தாங்கள் பணியிடமாற்றம் செய்ய்யப்படுவோமேயன்றி வேலைக்கு ஒரு போதும் பாதிப்பு வராது என்ற எண்ணத்தில் பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள்!
எந்தெந்த பள்ளிகளில் அர்பணிப்புள்ள தலைமை ஆசிரியரும், நல்லாசிரியர் குழாமும் அமைந்துவிடுகிறதோ, அப்படிபட்ட அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கே சவால்விடுகின்றன...!

தமிழக அரசு பள்ளிகள் பலவற்றில் குடிக்க தண்ணீர் கிடையாது,கழிவறைகளில் கால் வைக்கவே முடியாது.சுகாதாரம் இல்லாத பாதுகாப்பற்றச் சூழல்...!
இப்படிபட்ட அவல நிலைக்கு தீர்வு காணாமல் கல்வித்துறையை களவாணித்துறையாக மாற்றிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு!
14 விதமான இலவசங்கள்....! இத்தனை இலவசங்கள் சாத்தியப்படாத கால கட்டத்தில் தான் அரசு பள்ளிகளில் மிக ஆர்வத்துடன் மாணவர்கள் சேர்ந்து படித்தனர்.
ஒவ்வொரு இலவசத்திலும் ஊழல் கரைபுரண்டு ஒடுகிறது. காசு பார்ப்பதற்காகவே இன்னும் என்னவெல்லாம் தர வாய்ப்புண்டு என்று தேடித் தேடி ஆராய்கிறார்கள்..!
ஆனால், அடிப்படை தேவைகள் கூட இல்லாத அலங்கோல சூழல் பற்றிய அக்கரையே கிடையாது.
உண்மையில் தேவைப்படுவது தரமான கல்வி,தகுதிவாய்ந்த ஆசிரியர்கள்,சுகாதாரமான சூழல்!
அரசு பள்ளிகள் அழியுமானால், தமிழும் அழியும். ஏனெனில் ,அங்கு மட்டும் தான் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அங்கிருந்து தான் இதயமுள்ள,இரக்கமுள்ள இளம் சமூகம் உருவாகிறது. வியாபாராமற்ற கல்விச் சூழலே, நல்ல விழுமியங்கள் கொண்ட மாணவர்களை பிரசவித்து தருகிறது.
அந்த அரசு பள்ளிகளை அழிவிலிருந்து நிறுத்த தவறினால்,அது,இந்த சமுகத்தின் சாபக் கேடாகவிடியும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக