வியாழன், 22 ஆகஸ்ட், 2019

இம்ரான் கான் : இனி இந்தியாவுடன் பேசுவதில் அர்த்தமில்லை:

மின்னம்பலம் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா மீதான தனது விமர்சனத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப் பிரிவு நீக்கம் மற்றும் காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் தனது எதிர்ப்பை கடுமையாக தெரிவித்து வருகின்றது. கடந்த சில நாட்களாக இவ்விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ய தான் வருதாக கூறியுள்ள நிலையில், இந்தியா அதற்கு மறுத்து வருகின்றது. அதே சமயம், பாகிஸ்தான் அமெரிக்காவின் தலையீட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றது.
செவ்வாய்கிழமையன்று(ஆகஸ்ட் 20) வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் ட்ரம்ப், இன்னும் சில நாட்களில் பிரான்ஸ் நாட்டில் நடக்கவுள்ள ஜி7 மாநாட்டில் காஷ்மீர் விவகாரம் குறித்து மோடியுடன் பேசவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று(ஆகஸ்ட் 21) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நியூயார்க் டைம்ஸிற்கு காஷ்மீர் விவகாரம் குறித்து பேட்டியளித்துள்ளார்:
இனி இந்தியாவுடன் பேசுவதில் அவசியமில்லை. இப்போது நான் திரும்பிப் பார்க்கும்போது, அமைதி மற்றும் உரையாடலுக்காக நான் செய்த அனைத்து முயற்சியையும் துரதிர்ஷ்டவசமாக அவர்களை திருப்திப்படுத்தும் முயற்சியாக பார்த்துள்ளனர் என நினைக்கிறேன்.
மிக முக்கியமான விஷயம், காஷ்மீரில் எட்டு மில்லியன் மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை நடக்கப்போகிறது என்று நாங்கள் அனைவரும் கவலைப்படுகிறோம்.
இந்தியாவில் உள்ள ஒரு பாசிச மற்றும் இந்து மேலாதிக்கவாத அரசு பெரும்பாலும் இஸ்லாமியர்கள் வாழும் காஷ்மீரில், இஸ்லாமிய மக்களை ஒழிக்கவும், இந்துக்களுடன் இப்பகுதியை விரிவுபடுத்தவும் விரும்புகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த காஷ்மீரில் இந்தியா ஒரு மோசமான நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும். மேலும் அதற்கு பாகிஸ்தான் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்.
இவ்வாறு நியூயார்க் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக