சனி, 10 ஆகஸ்ட், 2019

நாடு முழுதும் ஒரே குடும்ப அட்டை: வேறு மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொருள்களை பெறும் வசதி தொடக்கம்

ramvilasbaswanதினமணி :  ரேஷன் பொருள்களை வேறு மாநிலத்தில் உள்ள கடைகளிலும் பெறும் வசதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வசதியை தில்லியில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தொடங்கி வைத்தார். நாட்டின் எந்த மூலையில் வசித்தாலும், அங்குள்ள ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்கும் வகையில், ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் 1-ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, 4 மாநிலங்களில் இத்திட்டம் சோதனை முறையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. அதன்படி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இவற்றில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையில் தங்களுடைய ரேஷன் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதேபோல், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இவற்றில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் தங்கள் ரேஷன் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தினம். இரு மாநிலங்களுக்கு இடையே ரேஷன் பொருள்களை வாங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். 4 மாநிலங்களில் இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதனிடையே, ஒரு மாநிலத்துக்கு உள்ளேயே (இன்ட்ரா ஸ்டேட்) எந்தப் பகுதியில் இருந்தும் ரேஷன் பொருள்களைப் பெறும் திட்டம் 7 மாநிலங்களில் சோதனை முறையில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய 7 மாநிலங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையே (இன்டர் ஸ்டேட்) ரேஷன் பொருள்களை வாங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.
இதுகுறித்து உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலர் ரவிகாந்த் கூறியதாவது:
வரும் ஜனவரி மாதத்துக்குள் 11 மாநிலங்களும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்படும். அதன்படி, அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இவற்றில் ஏதாவது ஒரு மாநிலத்தில் ரேஷன் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், 2020-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதிக்குள் ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அமல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதனிடையே, ஏதேனும் ஒரு ரேஷன் கடையில் உணவுப்பொருள்களை வாங்குவதால், கடைகளில் இருப்பு குறைவது, உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் வராதா என்று பாஸ்வானிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, "இந்திய உணவுக் கழகங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் போதிய அளவில் உணவுப்பொருள்கள் உள்ளன. மேலும், 3 மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 
உணவுப் பொருள்களின் இருப்பு குறித்து தகவல்கள் இணையதளத்தில் குறிப்பிடப்படும். எனவே, ரேஷன் பொருள்கள் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் வரவாய்ப்பில்லை.
வேறு மாநிலத்தவர்களும் சிரமமின்றி ரேஷன் பொருள்களைப் பெற முடிகிறதா என்பது குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும் என்று உணவுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று பாஸ்வான் பதிலளித்தார்.
உணவுப் பொருள் விநியோகத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 81 கோடி பேருக்கு மாதம் ஒன்றுக்கு தலா 5 கிலோ உணவுப் பொருள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால், அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.1.4 லட்சம் கோடி செலவாகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக