வியாழன், 8 ஆகஸ்ட், 2019

நெல்லிக்காயுடன் பாகற்காய் சேர்த்து ஜூஸாக்கிக் குடித்தால் இன்சுலின் சுரக்கும்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி!

tamilthehindu : சர்க்கரை நோயாளிகளை மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்கலாமா? என்று நீதிமன்றம் கேள்வி கேட்குமளவுக்கு நிலைமை கவலைக்கிடமாகிவிட்டது. `அதெல்லாம் பணக்கார நோயாச்சே...' என்று சொன்ன காலமெல்லாம் இன்று மலையேறி விட்டது. ஏழை-பணக்காரன், குழந்தை-பெரியவர் என்ற வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் வருகிறது. அதேபோல, `அது ஒரு பரம்பரை வியாதி; பெற்றோருக்கு இருந்தால் பிள்ளைகளைப் பாதிக்கும்' என்று சொல்லப்படும் இலக்கணங்களையெல்லாம் மீறி யாருக்கு வேண்டுமானாலும் அழையா விருந்தாளியைப்போல வந்து போகிறது.
குழந்தைப்பேறு காலத்தில் சில பெண்களைப் பாதிக்கும் சர்க்கரை நோய் சிலரிடம் நிரந்தரமாகக் குடியேறிவிடுகிறது. அதேபோல், தாயைப் பாதித்த அந்நோய் வயிற்றில் இருக்கும்போது இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் குழந்தைகளைப் பாதிக்கின்றது. இப்படி எந்த நிலையிலும் யாருக்கு வேண்டுமானாலும் சர்க்கரை நோய் வரலாம், ஒரு திருடனைப்போல..!
சர்க்கரை நோயின் பாதிப்பு ஏன் இந்த அளவுக்கு இருக்கிறது என்பதுபற்றி நாம் சிந்திக்கவேண்டும். என் தாத்தா காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சர்க்கரை நோய் கொள்ளை நோயைப்போல பல்கிப் பெருகக் காரணம் என்ன?

அதற்கான விடை நம்மிடமே இருக்கிறது. இன்றைக்கு சுமார் 50, 60 வயதில் இருப்பவர்கள் அவர்களது சிறு வயது நினைவுகளை கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்தால் தெரியும். அன்றைய காலத்தில் உண்ட உணவுகளுக்கும் இப்போது நாம் உண்ணும் உணவுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்தாலே அதிலுள்ள உண்மை விளங்கும்.
கிராமம், நகரம் என்ற வித்தியாசமில்லாமல் ஆங்காங்கே காணப்படும் வேப்ப மரங்களில் காய்த்துக் கிடக்கும் சிறு பழங்களை வாயில் குதப்பிக்கொண்டு அதிலுள்ள இனிப்புச்சுவையை ருசிப்பார்கள். ஆனால், கூடவே அதிலுள்ள மருத்துவக் குணங்கள் உள்ளே சென்று நோய்கள் வராமல் தடுக்கிறது. நாவல் மரங்களின் கீழே விழுந்து கிடக்கும் பழங்களை தூசி தட்டி, மண்ணை அகற்றிவிட்டு அப்படியே வாயில் போட்டுச் சுவைப்பதுண்டு. கெட்ட வாடை வீசும் மஞ்சணத்தி எனப்படும் நுணா மரங்களின் பழங்களையும் விட்டு வைப்பதில்லை. காட்டுப்பகுதியில் கிடக்கும் இலந்தைப் பழத்தை அப்படியே எடுத்து வாயில்போட்டுச் சாப்பிடுவது இன்றும் தொடர்கிறது. பனம்பழத்தைச் சுட்டும் செங்காயை கருப்பட்டி சேர்த்து வேகவைத்தும் சாப்பிடுவோம். இவையெல்லாம் விலை கொடுத்து வாங்காமல் இலவசமாக எளிதாகக் கிடைப்பவை. அவை ஆரோக்கியம் தரும் பழங்கள் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்?

சர்க்கரை நோயாளிகளை பழம் சாப்பிடக்கூடாது என்று சொல்லி அவர்களின் வாயைக் கட்டுவதுடன் சுவைகளை அறியவிடாமல் செய்துவிடுகிறார்கள் சில மருத்துவர்கள். மா, பலா, வாழை என முக்கனிகளையும் ஒருசேரச் சுவைத்துச் சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக. கடலூரைச் சேர்ந்த ஒரு ஹோமியோபதி மருத்துவர் இந்தமுறையைத்தான் பின்பற்றுகிறார். ஆனால், அவர் வெறும் வயிற்றில் பழங்களை மட்டுமே சாப்பிடுகிறார். பசி எடுத்தால், வயிற்றுக்கு தேவைப்பட்டால் இரண்டு மணி நேரம் கழித்து வழக்கமான உணவைச் சாப்பிட்டும் சர்க்கரையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சர்க்கரைச் சத்து அதிகம் இல்லாத நார்ச்சத்து நிறைந்த பழங்களை தாராளமாகச் சாப்பிடலாம் என்றும், சர்க்கரை நோயாளிகள் தினமும் நான்கைந்து பழங்களைச் சாப்பிடலாம் என்றும் ஆய்வுகளும் கூறுகின்றன.
குறைந்த விலையில் எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கும் கொய்யாப்பழத்தைச் சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துகள் அதிகமாகவும் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் இருக்கின்றன. இதில் சர்க்கரைச் சத்து குறைவு; நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை சரிசெய்யும். அதேபோல் நாவல் பழம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை விரைவில் கட்டுப்படுத்தும். இதன் கொட்டையைச் சாப்பிடுவதால், அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிக விரைவாகக் கட்டுப்படுத்தும். நாவல் வேர் ஊறிய நீரை அருந்துவதன் மூலமும் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். இவை தவிர அன்னாசி, ஆப்பிள், பேரிக்காய், மாதுளை, பப்பாளி மற்றும் சிட்ரஸ் உள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்களைச் சாப்பிடலாம். கிவி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி உள்ளிட்ட பெர்ரி வகைப் பழங்களையும்கூட சாப்பிடலாம்.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு முழு நெல்லிக்காயுடன் அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக பாகற்காய் சேர்த்து அரைத்து சாறு எடுத்து அருந்தி வருவதன்மூலம் இன்சுலின் தாராளமாகச் சுரக்கும். வாழைப்பூ, வெள்ளரிக்காய், வெண்டைக்காய், கேரட், முட்டைக்கோஸ் மற்றும் பச்சை நிறக் காய்கறிகள், நார்ச்சத்து அதிகமுள்ள கீரைகள், வெள்ளைப்பூண்டு, மஞ்சள், பீன்ஸ், வெந்தயம் உள்ளிட்ட உணவுகளை அடிக்கடி சேர்த்து வந்தாலே சர்க்கரை நோயாளிகள் நலமுடன் வாழலாம்.
அரிசி உணவு சர்க்கரை நோயை அதிகரித்துவிடும் என்று சொல்லப்படுகிறது. உண்மையில், இன்றைக்கு உள்ள பாலிஷ்டு அரிசிகளால்தான் நோய்கள் வரும். முன்பெல்லாம் பட்டை தீட்டப்படாத கைக்குத்தல் அரிசியைத்தான் உண்பார்கள். தவிடு நீக்கப்படாத அந்த அரிசிகளை உண்பதால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கும். கூடவே அரிசியில் உள்ள மாவுப்பொருள்களை செரிமானமடையச் செய்யக்கூடியது தவிடு என்பது எத்தனைபேருக்குத் தெரியும்? அதுமட்டுமல்ல அன்றைக்கு பயிரிடப்பட்ட நெல் ரகங்கள் பெரும்பாலும் நீண்டகாலம் விளையக்கூடியவை. இன்றைக்குப்போல் அவசரத்தில் விளைவிக்கப்பட்டவை அல்ல.
பாரம்பரிய அரிசிகள் மகிமை நிறைந்தவை என்று மார் தட்டுவது வெற்று வார்த்தைகள் அல்ல. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவக் குணம் இருக்கும். சம்பா அரிசியின் தவிட்டுடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். அதை ஒரு தின்பண்டமாகவே கொடுத்தார்கள். மாவுச்சத்து மட்டுமல்லாமல் நார்ச்சத்து நிறைந்த சம்பா ரக அரிசிகளில் உள்ள சத்துகள் அதிகம். மாப்பிள்ளைச் சம்பா, கார்த்திகைச் சம்பா, கிச்சடிச் சம்பா, மணிச் சம்பா, மல்லிகைப்பூ சம்பா என அரிசி ரகங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி அன்றைக்கு சாப்பிட்டவை எல்லாமே நோய் நீக்கியாகவே இருந்தன. இவற்றால் சர்க்கரை நோய் என்ற பேச்சுக்கே இடமில்லை.
அதுமட்டுமல்ல, அன்றைக்கு ஒட்டுமொத்த குடும்பமும் உழைக்கும். அப்பா ஆடு, மாடுகளை பராமரிப்பார். அம்மா வீட்டைச் சுத்தம்செய்வது, பாத்திரம் கழுவுவது, உரலில் நெல் குத்தி எடுப்பது, ஆட்டுக்கல்லில் மாவு அரைப்பது, அம்மியில் மசாலா அரைப்பது என பம்பரமாய் சுழல்வார். அக்கா வீட்டுக்கு வெளியே இருக்கும் அடுப்பில் நெருப்பு மூட்டி சமைத்துக் கொண்டிருப்பார். அண்ணன் விறகு வெட்டுவதுடன் தோட்ட வேலைகளைச் செய்வார். தங்கையும் தம்பியும் வீட்டைச் சுற்றியிருக்கும் செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவார்கள். இப்படி ஒட்டுமொத்தக் குடும்பமும் உடல் உழைப்பில் ஈடுபடும். இவற்றால் யாருக்கும் எந்த நோயும் வந்ததில்லை. அப்படியே வந்தாலும் தாத்தா கொடுக்கும் பச்சிலை மருந்துகளால் அவை வெகுதூரம் போய்விடும்.

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாது, கருப்பட்டி சாப்பிடக்கூடாது என்றும் இயற்கை விளைபொருள்கள் பலவற்றைப் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் சிலர் கூறுகிறார்கள். இயற்கையின் மகத்தான கொடையான தேன் சர்க்கரை நோயாளிகளுக்குப் பாதுகாப்பானதே. அதைச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் அதிகரிக்காது. ஆனாலும், இன்றைக்குக் கிடைக்கும் தேன் இயற்கைமுறையில் பெறப்படுகின்றனவா? `ஆர்கானிக்', `மலைத்தேன்' என்றெல்லாம் சொல்லி விற்கப்படும் தேனெல்லாம் உண்மையானதா? அதிலும் சிலர் ஒருபடி மேலேபோய் தும்பைத் தேன், துளசித் தேன், நாவல் தேன் என்று சொல்லிக்கொண்டு மக்கள் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள். தேன் விற்பவர் மீதுள்ள நம்பிக்கையில் வாங்கினாலும் அவருக்கு கொடுத்தவர் எப்படிப்பட்டவர், அவர் எங்கிருந்து அந்தத் தேனை பெற்றார்? உண்மையிலேயே அது தேன் தானா? என்று பல கேள்விகள் எழுகின்றன. மருத்துவக் குணம் நிறைந்த தேன் தன் மகத்துவத்தை இழக்கும்போது அது சர்க்கரை நோயை மட்டுமல்ல வேறு பல நோய்களையும் உண்டாக்கத்தானே செய்யும்?
முன்பெல்லாம் டீ, காபியில் சேர்க்கப்படும் சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டி சேர்த்தே சாப்பிட்டார்கள். பெரும்பாலும் பால் சேர்ப்பதில்லை. கடுங்காபி அல்லது கட்டஞ்சாயாவையே குடிப்பார்கள். இதனால் எந்த நோயும் வந்ததாகத் தெரியவில்லை. கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். இப்படி இயற்கை விளைபொருட்கள் அனைத்தும் நோய்கள் வராமல் தடுப்பதுடன் நோய்களைக் குணப்படுத்தும் மாமருந்தாக இருந்தன. ஆனால், இன்றைக்கு நாம் உண்ணும் உணவுகளில் பெரும்பாலானவை நோய்களை உருவாக்குபவையாகவே இருக்கின்றன. ஆகவே, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வரவேண்டும். சர்க்கரை நோய் என்று இல்லை; எந்த நோயும் நம்மை நெருங்காமலிருக்க உண்ணும் உணவில் தொடங்கி எல்லா நிலைகளிலும் மாற்றம் வர வேண்டும்.
- தமிழ்க்குமரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக