செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

ரிசேர்வ் வங்கியின் பணத்தை அரசுக்கு வழங்க எதிர்த்த சுபாஷ் சந்திர கார்க்.... பதவியை காவு வாங்கிய ஆர்பிஐ ரிசர்வ்..!

கமிட்டி முடிவு பதவி காலி tamil.goodreturns.in - gowthaman : கடந்த வருடத்தில், உர்ஜித் படேல் ராஜினாமா செய்வதற்கு முன்பு இருந்தே ஆர்பிஐ-ன் ரிசர்வ்கள் மீது அரசுக்கு ஒரு பெரிய ஈர்ப்பு இருந்து வந்தது.
ஆர்பிஐ ரிசர்வ்களில் ஒரு பகுதியை கொடுக்கச் சொல்லி மத்திய அரசு நிதானமாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது.
அந்த அழுத்தம் காரணமாக உர்ஜித் படேல், விரல் ஆச்சார்யா போன்றவர்கள் தங்கள் பதவியையே ராஜினாமா செய்ததாகவும் செய்திகள் இருக்கின்றன.
அதோடு நம் முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கார்க்கும் தன் பதவியை இழந்ததற்கும் இந்த மத்திய ரிசர்வ் வங்கியின் ரிசர்வ் தான் என்றால் நம்புவீர்களா..?
நம்பித் தான் ஆக வேண்டும். தன் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்படும் வரை, மத்திய அரசுக்கு நெருக்கமாக இருந்த சுபாஷ் சந்திர கார்க் ஏன் திடீரென மத்திய அரசால் நிதி அமைச்சகத்தை விட குறைந்த அதிகாரத்தைக் கொண்ட மின்சார அமைச்சகத்துக்கு பணி மாற்றப்பட வேண்டும்..? காரணம் இல்லாமலா..? அதற்கு முன்னாள் ஆர்பிஐ வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான Economic Capital Framework (ECF)கமிட்டி அறிக்கை தான் காரணம். இந்த கமிட்டி கொடுத்த அறிக்கை முடிவை சுபாஷ் சந்திர கார்க் ஆதரிக்கவில்லை. பொருளாதார விவகாரத் துறைச் செயலர் (சுபாஷ் சந்திர கார்கின்) கையெழுத்து இல்லாமல், அறிக்கையை ஆர்பிஐ-யிடம் சமர்பிக்க முடியாது. ஆகையால் தான் சுபாஷ் சந்திர கார்க் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.



மற்றவர்கள் ஒப்புதல்

அப்படி Economic Capital Framework (ECF) கமிட்டி என்ன சொல்கிறது..? ஆர்பிஐ வங்கி வைத்திருக்கும் பல லட்சம் கோடி ரூபாய் ரிசர்வ் பணத்தில் ஒரு குறைந்தபட்ச ரிசர்வ் தொகையை, மத்திய அரசுக்கு கொடுக்கலாமா..? என ஆலோசித்துச் சொல்ல வேண்டியது தான் இந்த கமிட்டியின் பொறுப்பு. இந்த Economic Capital Framework (ECF) கமிட்டியில் உறுப்பினராக இருக்கும் அனைவரும் (சுபாஷ் சந்திர கார்க் தவிர), அரசுக்கு ஆர்பிஐ ஒரு குறைந்தபட்சத் தொகையைக் கொடுக்கலாம் என ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.



 

கமிட்டி முடிவு

அதோடு மத்திய ரிசர்வ் வங்கி தன் ரிசர்வ் தொகையில் எவ்வளவு தொகையைக் கொடுக்கலாம், அந்த தொகையை எப்படிக் கணக்கிடுவது எனவும் ஒரு சூத்திரத்தைத் தெளிவாகக் கொடுத்து இருக்கிறார்கள். இது தவறு என கையெழுத்து போட மறுத்து இருக்கிறார் முன்னாள் நிதி அமைச்சக செயலர் சுபாஷ் சந்திர கார்க். அதோடு ஆர்பிஐ மத்தியக் குழுவிடம் இந்த பிரச்னையைப் பற்றி பேசிக் கொள்வதாகவும் சொல்லி இருக்கிறார்.


ஈவுத் தொகை

Economic Capital Framework (ECF)கமிட்டி அறிக்கை தங்களுக்கு சாதகமாக வரும் என்கிற நம்பிக்கையில், 2019 - 20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் சுமார் 23,000 கோடி ரூபாயாக இருந்த ஆர்பிஐ ஈவுத் தொகை கணிப்பு, ஜூலை 05, 2019-ல் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 1.06 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


தன் கமிட்டி

சுபாஷ் சந்திர கார்கின் எதிர்ப்பு, மேலிடத்துக்கு தெரிய வர, பணிமாற்றம் கொடுத்து வழி அனுப்பி வைத்து இருக்கிறார்கள். இதில் வேடிக்கையான விஷயம் என்ன தெரியுமா..? இதே சுபாஷ் சந்திர கார்க் தான் ஆர்பிஐயிடம் பேசி இந்த Economic Capital Framework (ECF) கமிட்டியை அமைத்தார். இப்போது அவர் அமைத்த கமிட்டியின் அறிக்கையிலேயே, அவர் கையெழுத்து போடாமல் பதவி விலகிவிட்டார் என்பது பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
யார் என்ன சொன்னாலும் சரி, எனக்கு ஆர்பிஐ-ன் பணம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லாமல் இருக்கிறது மத்திய அரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக