வியாழன், 15 ஆகஸ்ட், 2019

முதல்வர் பதவி: பன்னீர் சபதம்- எடப்பாடி பீதி!

டிஜிட்டல் திண்ணை: முதல்வர் பதவி: பன்னீர் சபதம்- எடப்பாடி பீதி! மின்னம்பலம்:   மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“பலரும் வெளிநாடு செல்வதாக இருந்தால் மகிழ்ச்சியாகவும், எதிர்பார்ப்பாகவும்தான் இருப்பார்கள். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஐந்து வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். ஆனாலும் ரொம்பப் பதற்றமாகவே இருக்கிறார்.
முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும்,வேளாண் தொழில் நுட்பங்களை அறிந்துகொள்வதற்காகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு 28 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்படுகிறார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் என பயணம் முடித்து செப்டம்பர் 9 ஆம் தேதி சென்னை திரும்புகிறார் எடப்பாடி என்பதுதான் இப்போது முடிவு செய்யப்பட்டிருக்கிற பயணத் திட்டம்.

தமிழக முதல்வர்களில் இந்த அளவுக்கு நீண்ட வெளிநாட்டுப் பயணங்களை இதுவரை யாரும் மேற்கொண்டதில்லை. எடப்பாடியுடன் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்களும் இந்த பயணத்தில் பங்கு கொள்கிறார்கள்.

அதிகாரிகள் வட்டாரத்தில் முதல்வரின் வெளிநாட்டுப் பயணத் திட்டம் தொடர்பான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் முதல்வர் தனக்கு நம்பிக்கையான நபர்களோடு தொடர்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். சுமார் 13 நாட்கள் தமிழகத்திலும் இந்தியாவிலும் தான் இல்லாத நிலையில் தனக்கு நெருக்கமானவர்களிடம் சில விஷயங்களை கூர்மையாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. முதல்வர் எடப்பாடி இவ்வளவு தீவிரமாக ஆலோசனை செய்வதற்கு காரணம், அவருக்குக் கிடைத்திருக்கும் சில தகவல்கள்தான்.
பயணத்திட்டப்படி ஆகஸ்டு 28 இல் கிளம்பி செப்டம்பர் 9 ஆம் தேதி எடப்பாடி திரும்ப தமிழக மண்ணை மிதிப்பதற்குள் கிடைக்கும் 12 நாட்களில் தனது பாலிடிக்ஸ் திட்டத்தை அரங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தீவிரமாக இன்னொரு பக்கம் இறங்கியிருக்கிறார் என்பதே அத்தகவல். சமீப நாட்களாகவே அதிமுகவில் அனைவரும் ஒரு குரலில் பேசினால் ஓ.பன்னீரும், அவரது மகன் ரவீந்திரநாத்தும் பாஜகவுக்கு ஆதரவுக் குரலில் பேசி வருகிறார்கள்.
முத்தலாக் மசோதாவை மக்களவையில் ஆதரித்தார் ரவீந்திரநாத். ஆனால் மாநிலங்களவையில் அதிமுக எதிர்த்துவிட்டு வெளிநடப்பு செய்தது. மோடி பற்றி எடப்பாடி பழனிசாமி தற்போது அதிகமாக பேசாத நிலையில் ரவீந்திரநாத்தோ, ‘மோடிக்கு தொடர்ந்து தோள் கொடுப்பேன்’ என்று பேட்டி கொடுக்கிறார். இப்படியாக வாலன்டியராக பாஜகவை தொடர்ந்து ஆதரிப்பதற்குக் காரணம் டெல்லியில் ஓபிஆர் தன் அப்பாவுக்காக மேற்கொண்டிருக்கும் லாபிதான். எப்பாடு பட்டாலும் தான் மத்திய அமைச்சராகவேண்டும், தன் அப்பா மீண்டும் தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும் என்பதுதான் டெல்லியில் ஓபிஎஸ் குடும்பம் நடத்தும் காய் நகர்த்தல்களின் நோக்கமே. இன்னொரு பக்கம் இங்கே ஆடிட்டர் குருமூர்த்தியில் இருந்து டெல்லியில் அமித் ஷா வரை, ‘உங்க பேச்சைக் கேட்டுதான் நான் அணிகளை இணைத்தேன். ஆனா இதுவரை எனக்கு எந்த மரியாதையும் இல்ல. அதனால எனக்கு ஒரு வழி சொல்லுங்க’ என்று தொடர்ந்து பாஜக தரப்பிடம் வலியுறுத்தி வந்திருக்கிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அத்திவரதரை தரிசிக்கச் சென்றார். சுமார் பதினைந்து நிமிடங்கள் அத்திவரதர் முன் அமர்ந்து மனம் உருக தியானம் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட மெரினாவில் அவர் 2017 ல் செய்த தியானத்துக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லாத தியானமாக இது இருக்கும் என்றும் அதிமுகவிலேயே சிலர் சொல்கிறார்கள்.

ஆமாம். எடப்பாடி 13 நாட்கள் வெளிநாடு சென்றிருக்கும்போது, பாஜகவின் ஆதரவோடு அதிமுகவின் கணிசமான எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் கொண்டுவந்து மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்த, பன்னீர் தரப்பில் ஒரு திட்டம் தயாராகிவருகிறது என்று சில தகவல்கள் எடப்பாடி வரை எட்டியுள்ளன. அண்மையில் கர்நாடக முதல்வராக இருந்த குமாரசாமி தன் தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றிருந்த போதுதான், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக குரல் கொடுக்கத் தொடங்கினர். சிலர் ராஜினாமா செய்தனர். குமாரசாமி அமெரிக்காவில் இருந்து திரும்பி வருவதற்குள் நிலைமை முற்றியது. அவர் பெங்களூரு திரும்பியபோது நிலைமை கைமீறிப் போய்விட்டது.
இதே போன்ற ஒரு திட்டத்தை அப்படியே தமிழகத்திலும் செயல்படுத்த அவர்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக எடப்பாடிக்கு நெருக்கமான டெல்லி சோர்ஸுகளே அவருக்கு சமிக்ஞைகளை கொடுத்திருக்கிறார்கள். இந்த திட்டத்தை அரங்கேற்றுவதற்காக தனியாக ஒரு பட்ஜெட்டே போடப்பட்டிருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்கள் அவர்கள்.

முதலில் இதுபற்றி பெரிதுபடுத்திக் கொள்ளாத எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் தனக்கு மிக நெருக்கமாக இருக்கும் சில மேலிடப் புள்ளிகளிடம் மெல்ல இதுபற்றி விசாரித்துள்ளார். அவர்களும் இதுபோன்றதொரு மூவ் இருப்பதை உறுதி செய்து தர, கடுமையான அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார் முதல்வர்.
ஆகஸ்ட் 28 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 9 ஆம் தேதிவரை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்தான் பொறுப்பு முதல்வராக இருக்க வேண்டுமா என்பது பற்றியும் சட்ட ரீதியாக ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார் முதல்வர். தான் இல்லாத நிலையில் எப்படியெல்லாம் ஆட்சி நிர்வாகம் நடைபெற வேண்டும், யார் யாரையெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்பது பற்றி அதிகாரிகளுக்கும் சில உத்தரவுகளைப் பிறப்பிக்க தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் முதல்வர்.
எடப்பாடியின் பயணத் திட்டம், பன்னீரின் பாலிடிக்ஸ் திட்டம் இதில் எது வெற்றியடையப் போகிறது என்பதுதான் அதிமுகவின் டாப் லெவலில் இப்போது நடக்கும் பட்டிமன்றம்!” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக