சனி, 31 ஆகஸ்ட், 2019

ஒரு கூடை பூவைக்கூடவா வைக்க முடியாது?” – ஜெயலலிதா சமாதியில் தலைவர்களும் இல்லை தொண்டர்களும் இல்லை ..?

ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தும் தீபக்ஜெயலலிதா சமாதியில் கட்டடப் பணிசேவியர் செல்வக்குமார் - ;ந.பொன்குமரகுருபரன் - பா.காளிமுத்து - விகடன் : ஜெயலலிதா இருக்கும்போது அதிகாரவட்டத்துக்கு வெகுதொலைவில் இருந்த பலரும், இன்றைக்கு அதிகாரத்தின் உச்சியில் கோலோச்சிக் கொண்டிருப்பதே ஜெயலலிதாவின் வழியில் இந்த அரசு நடக்கவில்லை என்பதற்கான முதல் உதாரணம். மூச்சுக்கு முந்நூறு முறை ‘இது அம்மா ஆட்சி’ என்று சொல்வதற்கு ஆளும்கட்சி அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் தவறுவதே இல்லை. ஆனால், ஜெயலலிதாவின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்றுதலும் பாசமும் எந்த அளவுக்கு உண்மை என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. ஜெயலலிதா இருக்கும்போது அதிகாரவட்டத்துக்கு வெகுதொலைவில் இருந்த பலரும், இன்றைக்கு அதிகாரத்தின் உச்சியில் கோலோச்சிக் கொண்டிருப்பதே ஜெயலலிதாவின் வழியில் இந்த அரசு நடக்கவில்லை என்பதற்கான முதல் உதாரணம்.


உதய் மின் திட்டம் உட்பட, தமிழகத்துக்கு ஜெயலலிதா கொண்டுவர மறுத்த அல்லது ஏற்க மறுத்த மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பா.ஜ.க தலைமைக்குப் பயந்து இப்போதைய எடப்பாடி அரசு ஏற்றுக்கொண்டு நிறைவேற்றி வருவது அடுத்த காரணம். இவற்றையெல்லாம்விட, ஜெயலலிதாவை இன்னும் தெய்வமாக மதிக்கும் கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், ஜெயலலிதாவின் சமாதியை அ.தி.மு.க அரசு பராமரிக்கும் விதம்தான் இந்தக் கேள்வியையும் சந்தேகத்தையும் இன்னும் வலுவாக்கியிருக்கிறது.

ஜெயலலிதா மறைந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவரது நினைவிடம் இன்னும் முழுதாகக் கட்டி முடிக்கப்படவில்லை. ஆரம்பத்தில் இதைக் கட்டுவதற்கு சட்டரீதியாக சில சிக்கல்கள் எழுந்தன. மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் விதிகளின்படியும், உயர் நீதிமன்ற உத்தரவுகளின்படியும் கடற்கரை இடத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் எந்தவித கட்டுமானத்தையும் மேற்கொள்ளக்கூடாது. மெரினா, உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை. இதில், தொடர்ந்து இதுபோன்ற சமாதிகள் அமைந்தால், அதன் தன்மை பாதிக்கும் என்று உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவும் தள்ளுபடியாகிவிட்டது.


ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தும் தீபக்
ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தும் தீபக்
ஜெயலலிதாவுக்கு நினைவிடம் எழுப்புவதற்கு 15 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்குவதாக 2017 அக்டோபரில் அறிவித்தார் எடப்பாடி. ஓராண்டுக்குள் இந்த நினைவிடம் அமைக்கப்படுமென்றும் அப்போது உறுதியளித்தார். ஆனால், 2018 ஜனவரி 10-ம் தேதிதான் நிதி ஒதுக்கப்பட்டது. முதலில் 15 கோடி ரூபாயில் போடப்பட்ட மதிப்பீடு, பின்பு 50.80 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதைக் கட்டுவதற்கான நிறுவனத்தைத் தேர்வுசெய்யும் டெண்டரில், ஐந்து நிறுவனங்கள் பங்கேற்றன. அவற்றில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி & கோ நிறுவனத்துக்கு டெண்டர் அளிக்கப்பட்டது. அடிக்கல் நாட்டுவிழா, 2018 மே 7-ம் தேதி நடந்தது. பணிகள் வேகமாகத்தான் நடந்து வருகின்றன.



பீனிக்ஸ் பறவை போன்ற தோற்றம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுவதோடு, இறக்கை மட்டும் இரு பக்கங்களிலும் 21 மீட்டர் நீளத்துக்கு விரிந்திருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பணிகளை சென்னை ஐஐடி நிபுணர்கள் மேற்பார்வையிடுகின்றனர். அருங்காட்சியகம், அறிவுசார் மையம், வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் நடைபாதைப் பணிகள் முடிந்துவிட்டன. வரும் புத்தாண்டுக்குள் கட்டுமானப் பணியை முடித்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறாராம்.


ஜெயலலிதா சமாதியில் கட்டுமானப்பணி
இது ஒருபுறமிருக்க, இந்த நினைவிடம் அமைக்கும் வரையிலும் ஜெயலலிதாவின் தற்போதைய சமாதி யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை என்பதுதான் தற்போதைய புகாராகக் கிளம்பியுள்ளது. இதற்கு அருகிலேயே இருக்கும் கருணாநிதியின் நினைவிடம், தினந்தோறும் விதவிதமான மலர் அலங்காரங்களால் மணம் வீசுவதையும், ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடம், வெறும் சிமென்ட் மேடையாகக் காட்சியளிப்பதையும் பார்த்து அ.தி.மு.க-வின் உண்மைத்தொண்டர்கள் குமுறுகின்றனர்.



கருணாநிதி நினைவிடத்தில், வெவ்வேறு வடிவங்களில் மேற்கொள்ளப்படும் மலர் அலங்காரத்தைப் பார்ப்பதற்கே தினம் ஒரு கூட்டம் கூடுகிறது. இந்த மலர் அலங்காரத்துக்கான செலவை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், எம்.எல்.ஏ சேகர்பாபு, அலங்கார ஏற்பாடுகளைப் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா நினைவிடத்தைப் பிரமாண்டமாக அமைத்தாலும், இப்போது ஏன் இந்தச் சமாதியில் தினமும் மலர் அலங்காரம் செய்யக்கூடாது என்று அங்கு வரும் அ.தி.மு.க. தொண்டர்கள் கேள்வி கேட்கின்றனர். இத்தனைக்கும், இப்போது அ.தி.மு.க ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. முதல்வர் உள்ளிட்ட அத்தனை அமைச்சர்களும் தினமும் இதே வழியில்தான் தலைமைச்செயலகம் செல்கின்றனர். இவர்கள் எல்லோரும் தினமும் ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று மலர் கொண்டு மரியாதை செய்தாலே, அந்த இடம் அழகாக இருக்குமென்பது அவர்களின் குமுறலாக இருக்கிறது.



இதுபற்றி பல்வேறு அ.தி.மு.க நிர்வாகிகளும் குமுறியதைக் கேட்டு, கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஜெயலலிதா நினைவிடத்தைப் பார்க்கச் சென்றபோது, அங்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. விசாரித்தபோது, அன்றைக்கு அவர் பிறந்தநாள் என்றும், அவர் வந்தபோது காய்ந்த மலர்கள் இருந்ததைப் பார்த்து மிகவும் நொந்துபோய்விட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அவர் கொண்டுவந்த மலர்களைத் துாவி, மண்டியிட்டு வணங்கிய பின், சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு அவர் அங்கிருந்து நகர்ந்தார். அவருடன் வந்தவர்களிடம் பேசியபோது, ‘‘ஜெயலலிதாவால் அரசியலில் அடையாளமும் அங்கீகாரமும் பெற்றவர்கள், இன்றைக்கு செல்வத்திலும் செல்வாக்கிலும் எவ்வளவோ பெரிய நிலையில் இருக்கின்றனர்.

அவர்கள், தினமும் இங்கு மலர் அலங்காரம் செய்வதற்காகச் செலவழிப்பது ஒரு தொகையே இல்லை. ஆனால், யாருமே இதைக் கண்டுகொள்ளாமலிருப்பது வேதனையாக இருக்கிறது. தீபக்கும் ரொம்பவே வேதனைப்பட்டார். இப்போது ஆட்சியில் இருக்கும்போதே இந்த அளவில் பராமரிப்பு இருக்கிறது. நினைவிடம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டாலும் அதை எப்படிப் பராமரிப்பார்கள், ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டால், அதைக் கவனிக்கப்போவது யார் என்றெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது’’ என்றார்கள்.



தற்போது நினைவிடப் பணிகள் நடப்பதால், ஜெயலலிதா சமாதியைப் பார்ப்பதற்கு விஐபி-க்களைத் தவிர, வேறு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. ஒருவேளை தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டால், அவர்கள் வைக்கும் மலர் மாலைகளிலேயே சமாதி நிறைந்துவிடும். ஆனால், அதற்கும் வழியில்லை என்பது சென்னை வாழ் அ.தி.மு.க தொண்டர்களை அதிருப்தியடைய வைத்திருக்கிறது. ஜெயலலிதாவின் சமாதிக்கு நாம் நேரடி விசிட் அடித்த மறுநாளும், உச்சி வெயிலில் சமாதி கொதித்துக் கொண்டிருந்தது. நினைவிடப் பணிகள் நடைபெறுவதால், யாரும் அருகே செல்லமுடியாத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சமாதியில் மலர் அலங்காரம் ஏதுமில்லை.


ஜெயலலிதா நினைவிட வரைபடம்
ஜெயலலிதா நினைவிட வரைபடம்
ஜெயலலிதாவின் சமாதியைப் பொதுப்பணித்துறை அதிகாரிகள்தான் பராமரிக்கின்றனர். தொண்டர்களின் குமுறல் குறித்து அவர்களிடம் கேட்டபோது, “தினமும் சமாதியை நன்கு சுத்தப்படுத்தி, மலர் மாலை வைத்துவிடுவோம். முக்கியஸ்தர்கள் வரும்போது, மலர் அலங்காரம் செய்துவிடுவோம். கட்டடப் பணிகள் நடைபெறுவதால், கடற்கரைக் காற்றுக்கு தூசு தட்டிவிடுகிறது. மற்றபடி, தினமும் மலர் அலங்காரம் செய்வதற்கும், கூடாரம் அமைப்பதற்கும் தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்” என்றனர். ஜெயலலிதா மறைந்து முழுதாக மூன்றாண்டுகள்கூட ஆகவில்லை. அதற்குள் அ.தி.மு.க விளம்பரங்களில் அவரின் படத்தின் அளவு சிறியதாகி, மற்றவர்களின் புகைப்படங்கள் பெரிதாகிக் கொண்டிருக்கின்றன. வார்த்தைக்கு வார்த்தை அம்மா புராணம் பாடும் அமைச்சர்கள் பலரும், இப்போது அம்மாவின் அரசியல் வாரிசு, காவிரி மீட்பு நாயகன், விவசாயிகளின் விடிவெள்ளி என்றெல்லாம் எடப்பாடியைப் புகழ்ந்து பாட ஆரம்பித்து விட்டார்கள்.
அண்ணாவின் பெயரில் கட்சி இருந்தாலும், அண்ணாவை அ.தி.மு.க-வினர் மறந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. அ.தி.மு.க-வை உருவாக்கிய எம்.ஜி.ஆரையும் யாரும் நினைத்துப் பார்ப்பதேயில்லை. அடுத்ததாக, அம்மா என்று இப்போதுள்ள அமைச்சர்கள் அனைவரும் கொண்டாடிய ஜெயலலிதாவும் மெள்ளமெள்ள மறக்கப்படுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. இது நம் கேள்வி இல்லை. ஒன்றரைக்கோடி தொண்டர்களின் ஒருமித்த கேள்வி.
‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே…அம்மாவை வணங்காது உயர்வில்லையே…’



இந்தப் பாடல்தான் அ.தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லோருடைய அலைபேசி அழைப்புப் பாடலாக ஒலித்துக்கொண்டிருந்தது. இப்போதும்கூட ஒலிக்கிறது. ஆனால், அவர் மறைந்து மூன்றாண்டுகளிலேயே அம்மாவை வணங்க ஆளில்லை என்பதைத்தான் அவரின் சமாதியின் நிலை உணர்த்துகிறது. அந்தச் சமாதி சொல்லும் சேதி இதுதான்… ‘இவ்வுலகில் நிரந்தரம் என்று எதுவுமில்லை’.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக