திங்கள், 26 ஆகஸ்ட், 2019

அம்பேத்கர் உருவச்சிலை இடிப்பு: சாதி பயங்கரவாதிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்க! விசிக வலியுறுத்தல்

நக்கீரன் : ாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்டிருந்த முன் விரோதம் காரணமாக அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பெரும்பதட்டத்துடன் கூடிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து விசிக கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,< நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காவல் நிலையத்தின் எதிரே இருந்த புரட்சியாளர் அம்பேத்கர் உருவச்சிலையை சாதி பயங்கரவாதக் கும்பல் இடித்துத் தரைமட்டமாக்கி உள்ளது. காவல் நிலையத்துக்கு முன்னால் நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களைக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தவேண்டும் எனவும், தமிழக அரசே புரட்சியாளர் அம்பேத்கரின் வெண்கலச் சிலையை அந்த இடத்தில் நிறுவ வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.


சட்டம் ஒழுங்குக்கு சவால் விடுக்கும் விதத்திலும், தமிழகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலும் இந்த சிலை உடைப்பில் ஈடுபட்ட சாதி பயங்கரவாதிகள் அங்கு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கிப் படுகாயப்படுத்தியதோடு, வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர். அந்த சாதி பயங்கரவாதிகளைத் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் .

சமூகநீதிப் பூங்காவான தமிழகம்,  சாதி பயங்கரவாதிகளின் வேட்டைக்காடாக மாறிவிடாமல் தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து குரலெழுப்பவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக