வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

திருமாவளவன் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு தமிழக அரசியல் நடந்தினாரா?

LRJ : திருமா பதில் சொல்லவேண்டிய கேள்விகளே வேறு.
“2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பு சொன்னதும் தான் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தேன்” என்கிறார் திருமாவளவன். பார்க்க காணொளி:
இதையொட்டி எழும் கேள்விகள்:
1. இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் கூட்டணியை முடிவு செய்வதற்கு அந்நிய நாடான இலங்கையில் இருக்கும் விடுதலைப்புலிகள் யார்?
2. அவர்கள் எந்த அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பிக்கிறார்கள்? அதை ஏன் திருமா கேட்டு நடக்கிறார்?
3. “தமிழ் தொப்புள்கொடி உறவு” என்று வாதிடுவீர்களானால் இந்த “தொப்புள்கொடி” அரசியல் உறவு இருவழிப்பாதையாகத்தானே இருந்திருக்க வேண்டும்? அப்படி இருந்ததா?
4. சகோதர யுத்தம் வேண்டாம், படுகொலைகள் வேண்டாம் என்று தமிழ்நாட்டில் இருந்து கரடியாய் கத்தின கோரிக்கைகள் எதையேனும் என்றேனும் விடுதலைப்புலிகள் காது கொடுத்து கேட்டார்களா?
5. தம் எதிர் தரப்பு இயக்க தலைமைகள், உறுப்பினர்களையெல்லாம் நூற்றுக்கணக்கில் இலங்கைக்குள் தேடித்தேடி கொன்று குவித்தது போதாது என்று எல்லை தாண்டி தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கே வந்து பத்மநாபாவோடு 12 பேரையும் சேர்த்துக்கொன்றதோடு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவையே கொடூரமாக கொன்றபோதெல்லாம் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் பேச்சைக்கேட்டா நடந்தார்கள்? அல்லது அதனால் தமிழ்நாட்டு மக்களும் அரசியலும் பாதிக்கப்படும் என்று அவர்கள் கவலைப்பட்டார்களா?

6. நார்வே முன்னெடுத்த சமாதான பேச்சுவார்த்தைகளை திட்டமிட்டு புறக்கணித்தது முதல் மஹிந்த அதிபராக தேர்வாக உதவும் வகையில் தமிழ் பிரதேசங்களில் தேர்தலை பலவந்தமாக புறக்கணிக்கச்செய்தது, மாவிலாற்று நீரை தடுத்தது வரை விடுதலைப்புலிகள் தம் எந்த செயலையும் யாரையும் கேட்டு செய்யவில்லை. தம் முடிவை தாமே எடுத்தனர்.
7. அப்படியானதொரு சர்வாதிகார அமைப்பின் வாய் மொழி உத்தரவை கேட்டு தன் கூட்டணி முடிவை எடுக்கவேண்டிய அளவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு என்ன நிர்பந்தம்?
8. விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குமான உறவு சமநிலை உறவா? அல்லது விடுதலைப்புலிகள் உத்தரவிட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதை ஏற்று கீழ்பணிந்து நடந்துகொள்ளும் விதமான உறவா?
9. திமுக தயவில் வென்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை அந்த கட்சியின் தலைவர் கலைஞருக்கே சொல்லாமல் ராஜினாமா செய்துவிட்டு அடுத்த கூட்டணிக்கு தாவும் அளவுக்கும் திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்றதும் திமுக தலைமை கழக வளாகத்திலேயே அந்த கட்சிக்கு எதிராக கோஷம் போடவும் கொடும்பாவி கொளுத்தவும் முடியும் அளவுக்கும் “அடங்க மறுத்து அத்து மீறிய” திருமாவும் அவர் கட்சியும் விடுதலைப்புலிகளின் தொலைபேசி உத்தரவுக்கு கட்டுப்பட்டு காங்கிரஸ் திமுக கூட்டணியில் போய் சேர்ந்தது ஏன்? ஒன்றுக்கு இரண்டுமுறை வெல்ல வைத்த திமுகவையும் அதன் தலைமையையும் எதிர்ப்பதில் காட்டிய வீரம் விடுதலைப்புலிகளின் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை ஆட்களிடம் பம்மி பதுங்கி பவ்யம் காட்டியது ஏன்? மதிப்பவர்களை மிதிப்பதும் மிதிப்பவர்களிடம் பம்முவதும் தான் விடுதலை சிறுத்தைகளின் வீரம், விவேகமா?
10. இறுதியாக விடுதலைப்புலிகள் சொல்லித்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2009 ஆம் ஆண்டு தம் கூட்டணி முடிவை எடுத்தார்கள் என்றால் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் மநகூ என்கிற மாய்மாலத்தை உருவாக்கியது யாருடைய உத்தரவால்? 2016 தேர்தலில் மநகூ என்பது கலைஞரை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கவும் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரவுமே உதவும் என்று தமிழ்நாடே கத்தியபோது அதை காதில் போட்டுக்கொள்ளாமல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர உதவும் வகையில் 2016 மநகூவை உருவாக்கச்சொல்லி திருமாவுக்கு உத்தரவிட்டவர்கள் யார்?
திருமாவும் அவரது அதிதீவிர ஆதரவாளர்களும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இவை.
காரணம் ஈழத்தமிழர் நலனுக்காகத்தான் 2009 திருமா புலிகளின் கட்டளைக்குப்பணிந்தார் என்றால் 2016 தேர்தல் ஏழுகோடி தமிழ்நாட்டுத்தமிழர்களுக்கும் அவர்களின் நலனுக்கும் மிக முக்கியமானதொரு தேர்தல். அந்த தேர்தலில் திருமா செய்த செயலுக்கு யார் உத்தரவு காரணம் என்பதை திருமா சொல்வதே சரி.
விசிக என்பது தமிழ்நாட்டு அரசியல் கட்சி. ஈழத்து அரசியலின் அடியாள் படையல்ல. எனவே தமிழ்நாட்டு தமிழருக்கு தான் விசிகவும் அதன் தலைமையும் பிரதானமாக பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக