செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

ஏடிஎம் கார்டுகள் தேவையில்லை பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி புதிய திட்டம்

tamilthehindu :மும்பை வாடிக்கையாளர்கள் இனிமேல் ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் புதிய வசதியை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்போவதாக நாட்டின் முன்னணி வர்த்தக வங்கியான எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தற்போது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் வங்கியின் கிளைகளுக்குச் செல்லாமல் தேவைப்பட்ட நேரத்தில் பணம் எடுக்க முடிகிறது. இதனால் வங்கிகளுக்கும் பணியாளர்கள் மிச்சமாகிறனர். வங்கிக் கிளைகளிலும் கூட்டம் குறைகிறது.
இதில் வசதிகள் இருந்தாலும் மோசடிகளும் நடக்கின்றன. வங்கி ஏடிஎம் கார்டு தகவல்களைத் திருடி போலியான பிளாஸ்டிக் கார்டுகள் உருவாக்கப்பட்டு பணம் திருடும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் எங்கு சென்றாலும் ஏடிஎம் கார்டுகளை எடுத்துச்செல்ல வேண்டிய தேவையும் இருந்து வருகிறது.
இதனால் வாடிக்கையாளர்களின் சிரமங்களைப் போக்கும் பொருட்டு, ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் நடைமுறையை எஸ்பிஐ வங்கி சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் குறிப்பிட்ட எஸ்பிஐ வங்கி கிளைகளில் இந்த வசதி பரிசோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

‘யோனோ மொபைல் ஆப்ஸை’ பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள 16,500 எஸ்பிஐ வங்கி மையங்களில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. 6 இலக்க ரகசிய எண்ணை உருவாக்கி வாடிக்கையாளர்கள் இந்த மையங்களில் பணத்தை எடுக்க வசதி வழங்கப்பட்டது.
‘யோனோ மொபைல் ஆப்ஸ்’ மூலம் வாடிக்கையாளர்கள் ஒரே பரிவர்த்தனை மூலம் ரூ.10,000 வரையிலும் எடுக்க முடியும். நாள் ஒன்றுக்கு 2 முறை மட்டுமே இந்த மொபைல் ஆப்ஸைப் பயன்படுத்தி பணம் எடுக்க முடியும்.
பின்னர் இவை ஏடிஎம்கள் போலவே ‘யோனோ கேஷ் பாயிண்ட்’ என்ற பெயரில் ஏடிஎம் மையங்கள் போல நிறுவப்பட்டு வருகின்றன. இங்கு சென்று ஏடிஎம் கார்டுகள் இல்லாமலேயே வாடிக்கையாளர்களை பாஸ்வேர்டு மூலம் பணம் எடுக்க வசதி வழங்கப்பட்டது. தற்போது இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்த எஸ்பிஐ வங்கி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் கூறியதாவது:
''நாடு முழுவதும் தற்போது 90 கோடி டெபிட் கார்டுகளும், 3 கோடி கிரெடிட் கார்டுகளும் புழக்கத்தில் உள்ளன. டெபிட் கார்டுகளின் புழக்கத்தைக் குறைக்கவும், மக்களை ஆன்லைன் பணப் பரிமாற்றத்துக்கு மெதுவாக மாற்றவும் யோனோ கேஷ் பாயிண்டுகள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் வழங்கும் இயந்திரங்களில் இருந்து ஒருவர் பணத்தைப் பெற முடியும்.
நாடு முழுவதும் தற்போது 68,000 யோனோ கேஷ் பாயிண்டுகள் உள்ளன. அடுத்த 18 மாதங்களில் இதனை 10 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் படிப்படியாக டெபிட் கார்டுகள் இல்லாத நிலை உருவாகும். யோனோ பாயிண்டுகள் மூலம் பணம் பெறுவது மட்டுமின்றி ஆன்லைன் மூலம் மற்றவர்களுக்குப் பணம் செலுத்தவும், பொருட்களை வாங்கவும் வாடிக்கையாளர்களால் முடியும். அடுத்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு டெபிட் கார்டும் இல்லாத நிலையை உருவாக்குவோம்''.
இவ்வாறு ரஜினிஷ் குமார் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக