ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

லீலாபாய் (பட்டியலினப் பெண்) அடித்துக் கொலை... வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் அனிதாவின் கொடுரம்

leela bai.nakkheeran.in - /nagendran : வழக்கு ஒன்றிற்காக காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட பட்டியலினப் பெண் ஒருவர் விசாரணையின் போது போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின்நிலைய வளாகத்தில் பயர் மேனாக பணிபுரிந்து வருபவர் கிறிஸ்டோபர். இவர் கடந்த மாதம் 17ம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்த பொழுது, அவ்வழியாக வந்த பள்ளிச்சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துக் கொண்டதாக வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவானது.
இந்த காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் இதற்குப் பொறுப்பு இன்ஸ்பெக்டராக வள்ளியூர் க்ரைம் இன்ஸ்பெக்டர் அனிதா பணியாற்றி வந்த நிலையில், பொறுப்பு இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையிலான வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தார் கிறிஸ்டோபர் மீது பொக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவனை மூன்று வாரங்களாகத் தேடி வந்தனர். இவ்வேளையில், தலைமறைவான கிறிஸ்டோபரின் தொடர்புகளை ஆராய்ந்த காவல் நிலையத்தார், அவன் அடிக்கடி பட்டியலினப் பெண்ணான கன்னியாகுமாரி மாவட்டத்திலுள்ள கருங்கல் பூமத்திவிளைப் பகுதியை சேர்ந்த இஸ்ரவேல் மனைவி லீலாபாயுடன் பேசி வந்தது தெரியவந்துள்ளது.


இதனால், சனிக்கிழமையன்று லீலாபாயை விசாரணைக்கு வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையிலான போலீசார். நள்ளிரவு வேளையில் நடந்த விசாரணையின் போது, "கிறிஸ்டோபர் எங்கே.?" என  அடித்து துன்புறுத்தியதாகவும், லீலாபாய் அடி தாங்காமல் திடீரென ரத்தம் கக்கி இறந்ததாகவும் கூறப்படுகின்றது.
செய்வதறியாது திகைத்த வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் இறந்த லீலாபாயை தூக்கிக்கொண்டு கன்னியாகுமரி ஆசாரி பள்ளம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். விசாரணையின் போது லாக்கப்பில் பட்டியலினப் பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக