திங்கள், 12 ஆகஸ்ட், 2019

அடாவடி ஐ ஏ எஸ் பொன்னையா பன்னீரின் சிபார்சு .. ஜெயலலிதாவால் இருமுறை நிராகரிக்க பட்டவர்

மின்னம்பலம் :
அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!
அத்திவரதர் வைபவத்துக்காகக் காஞ்சியில் கூட்ட நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விஐபி வரிசையில் உரிய பாஸ் இல்லாமல் பொது மக்களை அனுப்பியதாக, காவல் ஆய்வாளர் ஒருவரைக் காஞ்சி ஆட்சியர் ஒருமையில் பேசும் வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இதனைப் பார்த்த பலரும் ஆட்சியருக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
யார் அந்த மாவட்ட ஆட்சியர்?
காஞ்சி மாவட்ட ஆட்சியராக இருக்கும் பொன்னையா, 2011-2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் கன்பேடு ஐ.ஏ.எஸ், பதவிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் ஆதரவோடு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அந்தக் கோப்புகளை ஏற்க மறுத்துத் திருப்பி அனுப்பியிருக்கிறார். இரண்டாவது முறையும் அதே கோப்புகளை அனுப்பியபோது ஜெயலலிதா கோபப்பட்டு அந்தக்கோப்பை தூக்கி எரிந்திருக்கிறார்.. இரண்டுமுறையும் பொன்னையாவின் கோப்புகளைத் திருப்பி அனுப்பும் அளவுக்கு என்ன காரணம் என்று விசாரித்ததில், ”பொன்னையா மதுரை அழகிரி ஆதரவாளர். அதுமட்டுமல்ல ஒபிஎஸ்க்கு வேண்டப்பட்டவர் என்பதால் ஜெயலலிதாவிடம் வெவ்வேறு வழியில் கோப்புகளை அனுப்பிவைத்துப் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு உடல்நிலை சரியில்லாமல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஒபிஎஸின் முயற்சியால் ஜெயலலிதா திருப்பி அனுப்பிய பொன்னையா கோப்பை கிளியர் செய்து ஐ.ஏ.எஸ் பதவிக்கு ஒப்புதல் கொடுத்து மாவட்ட ஆட்சியராகப்பட்டார்” என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

இந்தநிலையில் ஆய்வாளரிடம் தான் கண்டிப்புடன் பேசியது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஆட்சியர் விளக்கம் அளித்திருக்கிறார். அதில், “அனைவரும் சிறப்பாக தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கடமை உணர்வில், உணர்வுப் பூர்வமாக பேசப்பட்ட வார்த்தைகளே தவிர அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எனது பேச்சு தனிப்பட்ட நபருக்கு எதிரானது அல்ல. மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து ஒரே துறையாகச் செயல்படுகின்றன.. காஞ்சிபுரத்தில் காவல்துறையினர் சிறப்பாகச் செயல்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.
அப்போது உடன் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், ‘‘காஞ்சியில் 8500 காவலர்கள் பணியில் உள்ளனர். வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக 4000 காவலர்கள் பணியில் ஈடுபடுவர். காவல் துறைக்குத் தேவையான உதவிகளை மாவட்ட ஆட்சியர் செய்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.
விவிஐபி வரிசையில் மோதல்
வைபவத்தின் 43ஆவது நாளான இன்று அத்திவரதர் மஞ்சள், பச்சை நிற பட்டாடையில் பக்தர்களுக்குக் காட்சி அளித்து வருகிறார். ஏற்கனவே விஐபி, விவிஐபி பாஸ்கள் தனியாரிடம் புழங்குகிறது, அந்த வரிசையில் பாஸ் இல்லாத பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர் எனக் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 12) விவிஐபி தரிசன வரிசையில் மோதல் ஏற்பட்டிருக்கிறது. பச்சை நிற பாஸ், அதாவது விவிஐபி பாஸ் வைத்திருப்பவர்கள் வேதவல்லி தெரு வழியாக அத்திவரதரை காண அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்த வரிசையில் இன்று கூட்டம் அலைமோதியிருக்கிறது. அப்போது ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு சென்றதில் இருவருக்கு மத்தியில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கியிருக்கின்றனர். இவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார், காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவ முகாமுக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விவிஐபி வரிசையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக