ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

காஷ்மீரில் முதலீடு செய்ய மோடி அழைப்பு!

காஷ்மீரில் முதலீடு செய்ய  மோடி அழைப்பு!மின்னம்பலம் : ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்ய வெளிநாடு வாழ் இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதலாவதாக ஆகஸ்ட் 22ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் பயணத்தை தொடங்கினார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து இருநாடுகளின் நட்புறவு, அதனை மேலும் வலுப்படுத்துதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த நிலையில், பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று(ஆகஸ்ட் 24) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய தொழிலதிபர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டார். அப்போது, இந்தியாவின் ரூபே கார்டை ஐக்கிய அரபு அமீரகத்தில் அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். இதன் மூலம் மேற்கு ஆசிய நாடுகளிலேயே ரூபே கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாடாக ஐக்கிய அமீரகம் விளங்குகிறது.
இதற்கு முன்பாக, இரு நாடுகளுக்கும் இடையே பணப்பரிவர்த்தனைகளை அனுமதிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மோடி முன்னிலையில் கையெழுத்தானது.

அதன் பின்னர் பேசிய பிரதமர் மோடி, “காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியது முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரமாகும். அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு மிகவும் வெளிப்படையாக இந்த நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து காரணமாக கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது.
இதனால், அங்குள்ள இளைஞர்கள் தீவிரவாதத்தின் பாதையில் சென்று கொண்டிருந்தனர். இந்தியாவின் ஏனைய பகுதிகளை ஒப்பிடும்போது, காஷ்மீரில் போதிய வளர்ச்சி இல்லாமல் இருந்தது. இவையனைத்துக்கும் முடிவு கட்டும் விதமாகவே, இந்த நடவடிக்கையை நாங்கள் எடுத்திருக்கிறோம்.
தொழில் அதிபர்கள் அங்கு அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும். பல்வேறு காரணங்களால் அந்த மாநிலம் முதலீடு விஷயத்தில் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த தடை நீங்கி விட்டது. தொழில் அதிபர்கள் தாராளமாக முதலீடு செய்ய வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் பல முக்கிய திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் அங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் காஷ்மீர் முக்கிய பங்கு வகிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.”
இவ்வாறு மோடி கூறினார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து பிரதமர் மோடி பஹ்ரைன் நாட்டிற்குச் சென்றுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக