திங்கள், 19 ஆகஸ்ட், 2019

விஜயகுமார் : ஜம்மு-காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவை விரைவில் செயல்பாட்டுக்கு வரும்

K-Vijay-Kumarதினமணி : ஜம்மு-காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என ஜம்மூ-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். 
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கிய பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் கடந்த 5 ஆம் தேதி முதல் கடும் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் மத்திய அரசு விதித்தது; முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். தொலைபேசி சேவைகளுக்கும், இணையதளச் சேவைகளுக்கும், செய்தி தொலைக்காட்சிகளுக்கும் தடை போன்ற காரணங்களலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த 2 வாரங்களில், மாநிலத்தில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஒவ்வொரு நாளும் அங்குள்ள நிலைமையில் முன்னேற்றம் காணப்பட்டு இயல்புநிலை திரும்புகிறது.?

பெரும்பாலான பகுதிகளில் 144 தடை உத்தரவு நீக்கப்பட்டது. சில மாவட்டங்களில் மட்டுமே தடை உத்தரவுகள் அமலில் இருந்து வந்தன. ஜம்முவின் 5 மாவட்டங்களில் 2ஜி இணையச் சேவை அனுமதிக்கப்பட்டது. 
இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகரின் பல்வேறு இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென வன்முறை சம்பவங்கள், கல்வீச்சு சம்பவங்கள் நடந்தேறியது. இதையடுக்கு அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியிருப்பதால், அத்தியாவசிய தடுப்பு நடவடிக்கையாகவும், தகவல்தொடர்பு சேனல்களை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கையாக தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஜம்மு-காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் நாங்களும் ஆர்வமாக உள்ளோம். விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம். 
மேலும் அரசின் நோக்கம் என்ன என்பதை காஷ்மீர் மக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக