திங்கள், 26 ஆகஸ்ட், 2019

சிதம்பரத்தின் சி பி ஐ காவல் இன்று முடிகிறது .. திகார் சிறையில் மீண்டும் ... உலாவும் வதந்திகள் ...

நக்கீரன் : டெல்லி திஹார் சிறையிலுள்ள பொருளாதார குற்ற வளாகத்தின் முக்கிய அறை ஒன்று சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. பொருளாதார குற்றங்களில் கைது செய்யப்படும் வி.வி.ஐ.பிக்கள் இந்த வளாகத்தில்தான் அடைக்கப்படுவார்கள். ’’அந்த வளாகத்திலுள்ள 7 ஆம் எண் கொண்ட அறையை கடந்த 2 நாட்களாக சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது சிறை நிர்வாகம். சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னள் மத்திய அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம், அந்த அறைக்கு கொண்டு வரப்படலாம் ‘’ என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.
சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் நிறைவு!மின்னம்பலம் : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு விதிக்கப்பட்ட சிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கடந்த 21ஆம் தேதி இரவு சுவர் ஏறிக் குதித்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மறுநாள் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்தை ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நான்கு நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து கடந்த மூன்று நாட்களாக சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சிபிஐ காவல் முடியவுள்ளதால், இன்று (ஆகஸ்ட் 26) மாலை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தவுள்ளனர். அப்போது, சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று தெரிவித்தோ அல்லது மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளது என்றோ ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவல் நீட்டிக்கப்படாத பட்சத்தில் சிதம்பரம் சிறையில் அடைக்கப்படுவார்.
இதற்கிடையே, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயின் கைது நடவடிக்கைக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. மேலும், ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை சிதம்பரத்தைக் கைது செய்யக் கூடாது என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளனர்.
இன்று விசாரணைக்கு வரும் இவ்வழக்குகளில் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால் அவர் விடுதலையாவது உறுதியாகிவிடும். ஆனால், சிபிஐ காவலை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நீட்டிக்க மறுத்து, உச்ச நீதிமன்றமும் சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டால் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்படும் நிலை ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக