புதன், 28 ஆகஸ்ட், 2019

கீழடியில் வடிகால் சுவர்!

கீழடியில் வடிகால் சுவர்!மின்னம்பலம் : கீழடியில் தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்டுள்ள அகழாய்வில் வடிகால் சுவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறையால் கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. அகழாய்வின் மூலம் பெறப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள், 2500 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரீகம் அங்கிருந்ததை உறுதி செய்தன.
தமிழரின் தொன்மையை பறைசாற்றும் விதமாக அந்த ஆய்வு அமைந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் கீழடி அகழாய்வுக்கு கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

மத்திய தொல்லியல் துறை மூன்றுகட்ட அகழாய்வுகளுடன் நிறுத்திக்கொண்டது. இந்நிலையில் நான்காம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக ஐந்தாம் கட்ட அகழாய்வு ஜூன் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்காக தமிழக அரசு 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் நடைபெறும் இந்த அகழாய்வில் இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதுவரை மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்பு காசுகள், உணவு குவளை, தண்ணீர் ஜக் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் அதிகளவில் சுவர்களும் கண்டறியப்பட்டன.
கடந்த வாரம் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் குழிகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பழமையான சுவர்கள் சேதமடைந்தன. குழிகளில் இருந்து மழைநீர் வெளியேற்றப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன் மீண்டும் அகழாய்வு பணி தொடங்கியது.
கடந்த சில தினங்களாக மனித முகம், கால்நடை முகம் கொண்ட சுடுமண் சிற்பங்கள், பெண்கள் காதில் அணியும் நட்சத்திர வடிவ சுடுமண் காதணி, சங்கு வளையல்கள், அணிகலன்கள், சித்திரம் வரையபட்ட சுடுமண் பானைகள், சுடுமண்ணாலான நூல் நூற்க பயன்படும் தக்கலிகள் என பல தொன்மையான அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
முருகேசன் என்பவரது நிலத்தில் அழகிய செங்கல் கட்டுமானங்கள் அதிகம் கிடைத்து வந்த நிலையில், சிறிய அளவிலான தண்ணீர் தொட்டி போன்ற செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீதி என்பவரது நிலத்தில் வடிகால் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனால் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர் செல்ல தமிழர்கள் வடிகால் வசதி பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக