திங்கள், 26 ஆகஸ்ட், 2019

கொளத்தூர் மணி : கலவரக் களிமண் கலாச்சாரத்தை க்ண்காணியுங்கள்... விநாயகர் சதுர்த்தி

நண்பர்களே ! கலவரக் களிமண் t; கலாச்சாரத்தை க்ண்காணியுங்கள்.
அண்ணன் கொளத்தூர் மணியின் இந்த அறிக்கை இயக்ககாரர்களுக்கு மட்டுமல்ல மதசார்பற்ற அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும்.
படியுங்கள் அப்படியே பரப்புங்கள்.
*விநாயகர் சதுர்த்தி*
- தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை! அன்பார்ந்த தோழர்களே!
கடந்த சில ஆண்டுகளாக - பல விதிமீறல்களை, அத்துமீறல்களை செய்து சர்ச்சைகளை,கலவரங்களை உருவாக்கவே உருவாக்கப்பட்டுள்ள பிள்ளையார் சதுர்த்தி எதிர்வரும் செப்டம்பர் இரண்டாம் நாள் வருகிறது.
ஏறத்தாழ செப்டம்பர் 6ஆம் நாள் முதல் பிள்ளையார் ஊர்வலங்கள் தொடங்கிவிடும்.
இது தொடர்பாகவே சில செய்திகளை, அதற்கென நாம் எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகள் குறித்து நினைவூட்டவே இதை எழுதுகிறோம்.
1) பிள்ளையார் சிலைகளை பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சுட்ட களிமண் ஆகியவற்றால் செய்யக்கூடாது; இரசாயன வண்ணம் பூச கூடாது என்பதும், பச்சைக் களிமண்ணால் மட்டுமே செய்யவேண்டும்; நீரில் கரையும் தீங்கில்லா வண்ணங்களை மட்டுமே பூச வேண்டும் என்பது விதி; உயர் நீதிமன்ற தீர்ப்பும் கூட. தும்பை விட்டு நாம் வாலைப் பிடிக்க அலைய வேண்டாமே!

எனவே, பிள்ளையார் சிலைகளை உருவாக்குகிற இடங்களிலோ அல்லது விற்பனைக்கு வைத்திருக்கிற இடங்களிலோ அவ்வாறான பிளாஸ்டர் சிலைகளோ, சுட்ட களிமண் சிலைகளோ, இரசாயன வண்ணம் பூசப்பட்ட சிலைகளோ இருக்கக் கண்டால் உடனடியாக மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்குத் தெரிவியுங்கள்.
கைபேசியில் தகவல்களைச் சொல்வீர்களேயானால் உரையாடலைப் பதிவு செய்து கொள்ளுங்கள்; விண்ணப்பங்கள், புகார் மனு எனில் நேரில் கொடுத்தாலும் - ஒப்புகையோடு கூடிய பதிவு அஞ்சலில் ஒரு நகலை அனுப்பி, பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
2) பிள்ளையார் சிலைகளை எந்த இடத்தில் வைக்கவேண்டும் எனிலும், சிலை அமைக்க விரும்புவோர் மாநகரங்களில் காவல்துறை உதவி ஆணையாளர்களிடமும் - பிற பகுதிகளில் கோட்டாட்சித் தலைவர் / துணை ஆட்சித்தலைவர் ஆகியோரிடமிருந்தும் குறைந்தது ஒரு மாதத்துக்கு முன்னரே கீழ்க்கண்ட தடையில்லா சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்பது, அரசு ஆணை (G.O.Ms.No. 598 (Public Law & Order. 😎 Department Date: 9 8 2018) வழியாக பிறப்பிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் ஆகும்.
.
(இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தளர்த்தக் கோரி சென்ற ஆண்டு 2018 இந்து அமைப்பினர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்து அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உறுதி செய்துள்ளது)
i) பட்டா நிலம் எனில் நில உரிமையாளர் / பொது நிலம் எனில், உள்ளாட்சி அமைப்புகள்/ நெடுஞ்சாலைத் துறை அல்லது உரிய துறையினரிடம் பெற்ற தடையில்லா சான்று ( NOC )
ii) உரிய பகுதி காவல் நிலைய அதிகாரியிடம் பெற்ற அனுமதிச் சான்றும், ஒலிபெருக்கி அனுமதியும்
iii) தீயணைப்புத்துறை துறையினரிடம் சிலை அமைக்கப்படும் பந்தல் குறித்த தடையில்லாச் சான்று
iv)மின்வாரியத்தில் பெறப்பட்ட தற்காலிக மின் இணைப்புச் சான்று
இவற்றோடு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை பரிசீலித்துப் படிவம் IIஇல் அனுமதி அளிப்பார்கள்.
3) பந்தல்களை கீற்று போன்ற எரியும் தன்மை உள்ள பொருட்களால் அமைக்கக் கூடாது
4) சிலை அமைப்பாளர்கள் அமைப்பு இடத்துக்கு அருகில் உரிய மருத்துவ முதலுதவி ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்.
5) சிலைகளின் பீடம்,மேடை,சிலை அனைத்தும் சேர்ந்த மொத்த உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.
6) சிலை அமைக்கும் இடத்திற்கு அருகே பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் இருத்தல் கூடாது
7) ஒலி பெருக்கியை காலையில் 2 மணி நேரமும் மாலையில் 2 மணி நேரமும் பூஜையின் போது மட்டுமே அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுக்குள் பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை வைக்காமல், பெட்டி வடிவ ஒலி பெருக்கிகள் மட்டுமே வைக்கப்பட வேண்டும்.
😎 பிள்ளையார் வழிபாடு என்ற போர்வையில் சட்டவிரோத செயல்பாடுகளோ, மின்சார கொக்கி, மின் திருட்டு இல்லாமல் பார்த்துக் கொள்வது சிலை அமைப்பாளர்களின் பொறுப்பாகும்.
9) அரசியல் கட்சிகள், அமைப்புகள், ஜாதித் தலைவர்கள் ஆகிய பிளக்ஸ்கள் வைக்கப்படக் கூடாது.
10) சிலைகள் அமைக்கப்பட்ட இடத்தில் இரவு பகலாக இரண்டு தொண்டர்களை அமைப்பாளர்கள் நியமிக்கவேண்டும். சிலை அமைப்பு இடம் எப்போதும் வெளிச்சமாக இருக்கவேண்டும்; மின்சாரம் தடைபடும் போது பயன்படுத்த ஜெனரேட்டர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
11) பிற நம்பிக்கையாளர்களின் உணர்வுகளை பாதிக்கும் முழக்கங்களையும் வகுப்பு விரோத முழக்கங்களையும் எழுப்பக்கூடாது.
12)அமைப்பாளர்கள் வருவாய்த்துறை, காவல்துறை, மாசு கட்டுப்பாடு வாரியம், ஆகியவை விதித்த கட்டுப்பாடுகளைக் கறாராக பின்பற்ற வேண்டும்.
13) சிலை அமைத்த பின்னர் பந்தல் அமைப்புகளும் மின் இணைப்பும் விதிப்படி உள்ளனவா என்பதைப் பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டியது தீயணைப்புத் துறையினரின் கடமையாகும்.
14) மாவட்ட ஆட்சித் தலைவர்கள் - மாசுக்கட்டுப்பாடு வாரியம், காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவர்களோடு ஆலோசித்து அடையாளப்படுத்தும் இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.
15) சிலைகள் அமைத்த ஐந்தாவது நாளுக்குள் அவற்றை எடுத்துச் சென்று கரைத்துவிட வேண்டும்.
16)பிள்ளையார் சிலை ஊர்வலங்கள் அனுமதிக்கப்பட்ட நாளில் நண்பகல் 12மணிக்குள் புறப்பப்பட்டு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் வாகனங்களில் எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் கரைக்க வேண்டும்.
17) சிலைகளை மினி லாரி, டிராக்டர் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும். மாட்டுவண்டி, ஆட்டோ, மீன் வண்டி போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
18)சிலையுடன் பயணம் செய்வோர் 1988 ஆம் ஆண்டைய மோட்டார் வாகனச் சட்டம் அனுமதிக்கும் எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்களில் பயணிக்க வேண்டும்.
19)பிள்ளையார் சிலை வைத்துள்ள இடத்திலோ, ஊர்வலத்திலோ, கரைக்கும் இடத்திலோ எங்கும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
20) சிலைகளைக் கரைக்கும் முன்னர் சிலையோடு இருக்கிற பூக்கள், துணிகள்,
காகித அலங்காரம் அல்லது பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அகற்றி விட்டுத்தான் கரைக்க வேண்டும்.
அன்பார்ந்த தோழர்களே !
இவைகள்தான் அரசு ஆணையில் பிள்ளையார் சிலை அமைப்பதற்கும், எடுத்துச் செல்வதற்கும், கரைப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் ஆகும்.
அதிகாரிகளிடம் காட்டுவதற்காக அதனுடைய நகலையும், சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு நகலையும் இணைத்திருக்கிறோம்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பெரும்பாலும் மீறப்பட்டுதான் வருகின்றன. அவ்வாறு அரசின் நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்படும் இடங்களில் நீங்கள் உங்களுடைய கைபேசி வழியாக படமாகவோ, வீடியோவாகவோ
எடுத்து அதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இவை நாம் அரசுத் துறையினர் மீதோ, சிலை அமைப்புக் குழுவினர் மீதோ வழக்குப் பதிவு செய்யும்போது அல்லது
நீதிமன்றத்தை நாடும்போது நமக்கு ஆதாரமாக விளங்கும் என்பது கருதி
செயல்படுங்கள்.
அதுபோலவே, எப்போதேனும் சிலை குறித்த விவரங்களையும் வேறு புகார்களை இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கோ, காவல் துறையினருக்கோ கைபேசி வழியாக தெரிவித்தால், அதைத் தவறாமல் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதனை நாள், நேரம் ஆகிய விவரங்களோடு இருக்கும் வகையில் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல விண்ணப்பங்கள் அல்லது புகார் மனுக்கள் ஆகியவற்றை நேரில்
அளித்தாலும், கூடுதலாக அவற்றின் நகல்களை நீங்கள் பதிவு அஞ்சல் ஒப்புகை சீட்டுடன் அனுப்பி அந்த ஒப்புகைச் சீட்டை வாங்கி பத்திரமாக வைத்திருங்கள்.
விண்ணப்பம், புகார் மனு ஆகியவற்றில் தவறாமல் தேதியைக் குறிப்பிடுங்கள்.
இவ்வாறு அளிக்கப்படும் விண்ணப்பங்கள்,புகார்களின் நகல்களை கழகத் தலைமைக்கு தவறாமல் அனுப்பி வைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
தோழர் தபசி.குமரன்,
தலைமை நிலைய செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்,
95,டாக்டர் நடேசன் சாலை,
அம்பேத்கர் பாலம்,
மைலாப்பூர்,
சென்னை - 600 004.
வீடியோ மற்றும் படங்கள்,உரையாடல் பதிவுகள் ஆகியவற்றை அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண் :
+91 73736 84049
- கொளத்தூர் தா.செ. மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம் .
16.08.2019.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக