ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கூட்டணி: சோனியா சம்மதம் .. மே.வங்கத்தில்

காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கூட்டணி: சோனியா சம்மதம்!மின்னம்பலம் : மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி வைக்க வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மேற்கோள்காட்டி டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. அதேநேரம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையான பின்னடைவைச் சந்தித்தன. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்கு வங்க காங்கிரஸ் மாநிலத் தலைவர் சோமன் மித்ரா, டெல்லியில் கட்சித் தலைவரான சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார். அப்போது மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தல் பற்றியும் கட்சி அமைப்புத் தேர்தல் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சோனியாவின் சந்திப்பு முடிந்ததும் ஊடகங்களிடம் பேசிய சோமன் மித்ரா, “வரவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடனான இடப் பங்கீடு குறித்து சோனியாவிடம் ஆலோசித்தோம். அவர் காங்கிரஸுடன் கூட்டணிக்கு இடதுசாரிகள் சம்மதிக்கும்பட்சத்தில் நாம் மேற்கு வங்க மாநிலத்தில் கூட்டணியைத் தொடர்வதில் முனைப்புக் காட்டலாம் என்று கூறினார்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் கலியாகஞ்ச், கரக்பூர், கரிம்பூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத் தேர்தல் வரவிருக்கிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்துவிட்ட நிலையில் தலைவர் யாரெனத் தெரியாத கடந்த சில வாரங்களில் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைமை இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்று முடிவெடுத்து இடப் பங்கீடு வரை ஆலோசித்து வந்தது. ஆனால், தேசிய அளவில் கட்சித் தலைவர் யாரும் இல்லாததால் மேற்கு வங்காள காங்கிரஸ் கமிட்டி அமைதி காத்தது. இப்போது புதிய தலைவர் சோனியா பொறுப்பேற்ற நிலையில் இதுபற்றி ஆலோசித்து அவரது சம்மதத்தையும் பெற்றுள்ளது மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி.
2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அந்தத் தேர்தல் மம்தாவின் ஆட்சியை எடைபோடும் தேர்தல் என்பதால் மம்தாவின் கூட்டணியைவிட இடதுசாரிகளுடனான கூட்டணியே மாநிலத்தில் தனக்குப் பயன்தரும் என்று நம்புகிறது காங்கிரஸ். இடதுசாரிகளும் இனி மேற்கு வங்காளத்தில் தனித்து நின்று பழைய நிலையை அடைய முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்பதையே இந்தப் புதிய கூட்டணி உணர்த்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக