சனி, 31 ஆகஸ்ட், 2019

முதல்வர் பழனிசாமி ஒப்பந்தம் இட்ட கிங்க்ஸ் கல்லூரி மருத்துவமனை நிதி நெருக்கடியில் தள்ளாடுது ...


லண்டனில் எடப்பாடி போட்ட  பித்தலாட்ட ஒப்பந்தம்! மின்னம்பலம்:  லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆகஸ்டு 29 ஆம் தேதி மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் என்று தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டுக்காக தமிழக அரசுக்கும் சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம், தொற்று நோய்களை கண்காணிப்பது, கட்டுப்படுத்துவது தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் நோக்க அறிக்கையில் கையெழுத்து, லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் என்று முதல் நாளில் சுகாதாரத் துறை தொடர்பாக 3 ஒப்பந்தங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டிருக்கிறார்.
லண்டனில் இருக்கும் தொழிலதிபர்கள் பலரிடமும் விசாரித்ததில், இந்த ஒப்பந்தங்கள் பற்றி பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகிறார்கள்.
முதலில் கிங்ஸ் மருத்துவமனை ஒப்பந்தம் பற்றிப் பார்ப்போம்!
கிங்ஸ் மருத்துவமனை என்பது இங்கிலாந்து அரசின் நிதியுதவியில் இயங்கக் கூடிய ஒரு மருத்துவ நிறுவனம். தமிழகத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி ஜி.ஹெச். போன்றதுதான் கிங்ஸ் மருத்துவமனை. அதே நேரம் மருத்துவக் கல்வியிலும் சிறந்த பெயரை பெற்றுள்ளது.

கிங்ஸ் மருத்துவமனை அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்டாலும், இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் கிங் மருத்துவமனைக்கு ஒதுக்கப்படக் கூடிய நிதி போதவில்லை என்று இங்கிலாந்து நாட்டு பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
மேலும் கிங்ஸ் மருத்துவமனையின் இணைய தளத்தில், வெளியிட்டப்பட்ட அறிவிப்பு இதை இன்னும் வலுப்படுத்துகிறது.
Our Charities என்ற தலைப்பிலான அந்த அறிவிப்பில்,
“மருத்துவமனைகள் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் நிதியுதவிகளைப் பெற்றாலும், மக்களுக்கு தரமான சுகாதாரமான சேவைகளைப் பெறுவதற்கு எப்போதுமே பணம் என்பது தேவையாகவே இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக கிங்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனத்துக்கு பல்வேறு நன்கொடையாளர்களின் உதவி இல்லாமல், இங்கிலாந்து நாட்டின் முக்கியமான மருத்துவக்கல்வி நிறுவனமாக உயர்ந்திருக்க முடியாது.
ஆராய்ச்சிகள் மூலமாக நவீன மருத்துவ வளர்ச்சிகளை அடையவும், மக்களுக்கு தரமான மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்கவும் உங்களின் உதவி கண்டிப்பாக தேவை. எங்களது அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் உங்களது உதவி அவசியத் தேவை. நாங்கள் நடத்தும் நிதிசேகரிப்பு நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கேற்று உதவலாம். அல்லது தன்னார்வலராக முன் வந்து உங்கள் நேரத்தையும் உழைப்பையும் எங்கள் நிறுவனத்துக்கு அளிக்கலாம். உங்கள் நேரம், உங்கள் உழைப்பு, உங்கள் பணம் என எந்த வகையில் எங்களுக்கு உதவினாலும் அது நன்மைக்கான பயன்பாடாக இருக்கிறது என்பதை மறவாதீர்கள்” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்குக் காரணம் என்ன என்பதை, கடந்த ஏப்ரல் 4-2019 தேதியிட்ட லண்டனின் தலை சிறந்த கார்டியன் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை தெளிவாகச் சொல்கிறது.
”கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை மிக அதிக செலவினத்துக்கு ஆட்பட்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது” என்பதுதான் கார்டியன் செய்தியின் தலைப்பு.
அந்த செய்தியில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான சில தகவல்களை தமிழ்நாட்டில் இருப்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை 2018-19 ஆம் நிதியாண்டில் மொத்தப் பற்றாக்குறை 146 மில்லியன் பவுண்டு ஆக இருக்கும் என்று எதிர்பார்த்தது. ஆனால், தொடர் பின்னடைவுகளின் காரணமாக இப்போது அம்மருத்துவமனையின் பற்றாக்குறை 34 மில்லியன் முதல் 45 மில்லியன் பவுண்டு வரை அதிகமாகியுள்ளது. ஆக லண்டனின் முன்னணி மருத்துவ அறக்கட்டளையான கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை 2018-19 நிதியாண்டில் 180 மில்லியன் பவுண்டு முதல் 191 மில்லியன் பவுண்டு வரையிலான பற்றாக்குறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதாரச் சேவையில் இது மிக மோசமான பொருளாதார நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை இதன் விளைவாக ஊழியர் பற்றாக்குறையையும் எதிர்கொண்டுள்ளது. அதன் நீண்டகால செவிலியர்கள் பற்றாக்குறையை மறைக்க, கான்ட்ராக்ட் மூலமாக ஏஜென்சி ஊழியர்களைப் பயன்படுத்துகிறது” என்று கடந்த ஏப்ரல் மாதம் செய்தி வெளியிட்டிருக்கிறது கார்டியன்.
இப்படி நலிவடைந்த நிலையில் இருக்கும் கிங்ஸ் மருத்துவமனைக்கு சென்று, அதைப் பாராட்டி தமிழ்நாட்டிலும் அதன் கிளையை தொடங்க இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி தமிழில் அறிவிக்க, அதை அங்கிருந்த ஆங்கிலேயர்கள் அனைவரும் ‘கைதட்டி’ வரவேற்றதை எப்படி எடுத்துக் கொள்வது?
கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையின் பொருளாதார நிலவரமே மிகப் பெரும் பற்றாக்குறையில் ஓடிக் கொண்டிருக்க, அம்மருத்துவமனை எப்படி தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடியும்? சர்வதேச அளவில் சென்று ஒப்பந்தம் செய்யும் முன் முதல்வரும், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் ஒப்பந்த விவரங்களை முழுமையாக ஆராய மாட்டார்களா?
எடப்பாடி தன் வெளிநாட்டுப் பயணத்தின் முதல் நாளில் போட்ட ஒப்பந்தத்திலேயே இப்படிப் பல கேள்விகள் எழுந்துகொண்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக