திங்கள், 19 ஆகஸ்ட், 2019

கே.எஸ். அழகிரி மீது மோசடிப் புகார்!

கே.எஸ். அழகிரி மீது மோசடிப் புகார்!மும்பையிலுள்ள மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின் இயக்ககம் சார்பில் அதன் இணைய தளத்தில் ஆகஸ்டு 6 ஆம் தேதி ஒரு ஷோகாஸ் நோட்டீஸ் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது இப்போது தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் புயலைக் கிளப்பி வருகிறது.
காரணம், கப்பல் துறை இயக்ககம் அனுப்பிய நோட்டீஸ் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு சொந்தமான கல்வி நிறுவனத்துக்கு என்பதால்தான்.
பெருந்தலைவர் காமராஜர் கடல் சார் அறிவியல் மற்றும் பொறியியல் நிலையம் என்ற கல்வி நிறுவனம் கமலம் சம்பந்தம் அழகிரி எஜுகேஷனல் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அறங்காவலர்களாக கே.எஸ். அழகிரி, எஸ். சௌந்தரபாண்டியன், திருமதி கே.எஸ்.ஏ. வத்சலா, கே.எஸ்.ஏ. சாந்தி, ஏ. அனுசுயா ஆகியோர் இருக்கிறார்கள். இந்த நிலையத்துக்கு கப்பல் போக்குவரத்துத் துறை இயக்குனரகம் குறிப்பிட்ட சில பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், இந்த கல்வி நிறுவனத்தின் மீது கடந்த 15-6-19 அன்று அலவாலா விஷ்ணு வர்தன் என்பவர் மின்னஞ்சல் மூலம் கப்பல் துறை இயக்ககத்துக்கு புகார் அனுப்பியுள்ளார். அதில் டிஎம்சி ஷிப்பிங் கல்லூரியில், கடல் பொறியியல் பட்டப்படிப்பு சேர்ந்ததாகவும் அங்கிருந்து பெருந்தலைவர் காமராஜர் கடல் சார் அறிவியல் மற்றும் பொறியியல் நிலையத்துக்கு அடிப்படைப் பாதுகாப்புப் பயிற்சிக்காக அனுப்பினார்கள். நான் இந்த பயிற்சி நிலையத்தில் ஒரே ஒரு நாள்தான் வகுப்பில் பங்கேற்றேன். ஆனால் பதிவேட்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். பின் பயிற்சி வகுப்பில் பங்கேற்றதாக சான்றிதழும் கொடுத்தனர்’ என்று புகார் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பெருதலைவர் காமராஜர் பயிற்சி நிலையத்திடம் பதில் கேட்டும் இன்னும் பதில் வரவில்லை. எனவே உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது” என்று கேட்டுதான் ஆகஸ்டு 8 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி, அதை தனது இணைய தளத்திலும் வெளியிட்டிருக்கிறது கப்பல் போக்குவரத்து இயக்ககம்.
இந்த ஷோகாஸ் நோட்டீஸை எடுத்து வாட்ஸ் அப்பில் தமாகாவினரும், தமிழக காங்கிரஸிலேயே இருக்கும் அழகிரிக்கு எதிரான கோஷ்டியினரும் இன்று காலை முதல் பரப்பி வருகின்றனர்.
மேலும் அவர்கள், “காமராஜர் பெயரை வைத்துக் கொண்டு, மாணவர்களுக்கு பயிற்சி தருவதாக சொல்லி, வகுப்பே நடத்தாமல் பல மாணவர்களிடம் மோசடி செய்து, கப்பல் போக்குவரத்து இயக்குனரம் அளித்த அனுமதிகளை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருகிறது கே.எஸ். அழகிரி நிர்வாகிக்கும் டிரஸ்ட். இவரை காங்கிரஸ் தலைவராக வைத்துக் கொண்டு காங்கிரஸ் எப்படி காமராஜர் ஆட்சியை அமைக்கும்? உடனடியாக அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டு,. இந்த நோட்டீஸுக்கான விளக்கம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸின் அகில இந்திய தலைமை அழகிரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக