செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்

டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“அமமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கடந்த ஓரிரு வாரங்களாகவே குழப்பமான ஒரு விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறைக்குச் சென்ற சசிகலா விரைவில் விடுதலையாகி வரக் கூடும் என்றும், அப்படி அவர் வெளியே வரும் பட்சத்தில் அவரது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதுதான் அமமுக நிர்வாகிகளின் குழப்பத்துக்குக் காரரணம்.
இதுபற்றி அவர்களிடம் விசாரித்தபோது, ‘சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையில சிண்டுமுடியுற வேலையை ஆரம்பத்துலேர்ந்தே தமிழ்நாடு அரசின் உளவுத்துறை செஞ்சுது. அதனால ரெண்டு பேருக்கும் இடையில விரிசல், அப்படி இப்படினு வந்த செய்திகளை எல்லாம் நாங்க நம்பல. ஆனா அமமுக என்ற பேர்ல தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு தினகரனுக்கு சசிகலா மேல கோபம் இருக்கிறதா எங்க கட்சிக்குள்ளயே பேச்சு வந்துச்சு. சசிகலாவைப் பொறுத்தவரைக்கும் அம்மாவோட ஏறக்குறைய 35 வருஷம் இருந்தாங்க. அம்மாவோட இரட்டை இலை சின்னத்துக்காக மட்டும்தான் வேலை பார்த்திருக்காங்க. அதனால் அம்மாவோட சின்னமான இரட்டை இலை பக்கம்தான் நாம நிக்கணும்னு தினகரன் கிட்ட கூட பல முறை சொல்லியிருக்காங்க. ஆனா வெளியில் இருந்து தினகரன் நடைமுறை ரீதியாக எதிர்கொள்ற பிரச்சினைகளை தெரிஞ்சுக்கிட்டதால அமமுக அப்படினு இயக்கம் நடத்த சம்மதிச்சாங்க.

ஆனா கூடிய சீக்கிரம் சசிகலா வெளியே வந்துடுவாங்க. அவங்க வந்தபிறகுதான் சட்டமன்றத் தேர்தல் நடக்கப் போகுது. அதனால மறுபடி தன்னையே முதல்வரா முன்னிறுத்தினா சசிகலாவை அதிமுகவுக்குள் கொண்டுவந்து அவங்களையே பொதுச் செயலாளர் ஆக்கலாம்னு எடப்பாடி ஒரு யோசனையை சசிகலாக்கிட்ட கொண்டு போயிருக்காரு. பொதுத் தேர்தலில் எப்படியாவது ஜெயித்து தானே முதல்வராகிட வேண்டும்னும் , எக்காரணம் முன்னிட்டும் திமுகவிடம் வெற்றியை தாரை வார்த்துவிடக் கூடாதுனும் தெளிவா இருக்கார் எடப்பாடி. தேவர் வாக்கு வங்கி உள்ளிட்ட பல காரணங்களால் அது பாதிக்கப்பட கூடாதுங்குறதுலயும் கவனமா இருக்காரு. மேலும் ஜெயலலிதாவின் சொத்துகள் உள்ளிட்ட விஷயங்கள் சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். அதனால சசிகலாவுடன் உடன்பாடு செய்துகொள்வதன் மூலம் அதிமுக பெரிய அளவு நிதிப் பிரச்சினை இல்லாமல் தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்றெல்லாம் கணக்குப் போட்டு வருகிறார் எடப்பாடி. அதனால்தான் சசிகலாவை மையமாக வைத்து இப்படி ஒரு நகர்வில் ஈடுபட்டிருக்கிறார். இதற்கு ஓ.பன்னீரும் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார் என்பதும் எடப்பாடியின் கணிப்பு.
இது தினகரனுக்குத் தெரியவந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் சசிகலாவின் முடிவு என்ன என்பதும் தினகரனுக்குத் தெரியவில்லை. ராமன் இருக்கும் இடம்தான் சீதைக்கு அயோத்தி என்பதைப் போல இரட்டை இலை இருக்கும் இடம்தான் எனக்கு அதிமுக என்று சிறைக்குச் சென்றபின் பல சந்தர்ப்பங்களில் தினகரனிடமே சொல்லியிருக்கிறார் சசிகலா. அதனால் விடுதலை ஆனதும் சசிகலா அப்படி ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுத்துவிடுவாரோ என்றும் தினகரன் கருதுகிறார். சில நாட்களுக்கு முன் புரசைவாக்கத்தில் நடந்த சென்னை மாவட்ட அமமுக ஆலோசனைக் கூட்டத்தில், ‘அதிமுகவை மீட்பதுதான் நமது நோக்கம்’ என்று தன் பேச்சினிடையே குறிப்பிட்டார் தினகரன். அமமுகவை தனிக்கட்சியாக பதிவு செய்து கொண்டு போய்க்கொண்டிருக்கிறவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படி ஒரு கருத்தை பேசியதும் கவனிக்கத் தக்கது. எனவே எங்களைப் போலவே தினகரனும் சமீப நாட்களாக குழப்பத்திலே இருக்கிறார்.
ஒருவேளை சசிகலா அதிமுகவுடன் சமரசமாகிவிட்டால் தன் நிலை என்னவாகும் என்ற குழப்பம்தான் அது. ஆனாலும் 24 பேர் கொண்ட புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை அனைத்து நிர்வாகிகளுக்கும் கொடுத்து மீண்டும் அமமுக உறுப்பினர் சேர்க்கையை பலப்படுத்தியிருக்கிறார் தினகரன். சசிகலா வெளியே வந்ததும் இன்று தன்னை ஆதரிக்கும் மூத்த புள்ளிகள் அவரை ஆதரிப்பார்கள் என்பதால் மாவட்டங்கள் முழுதும் பேச்சாளர் முகாம்களை நடத்தி தனக்கென ஒரு புதிய ஆதரவாளர் வட்டாரத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் தினகரன்’ என்கிறார்கள் அமமுக நிர்வாகிகள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக