சனி, 10 ஆகஸ்ட், 2019

வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?

டிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?மின்னம்பலம் :
மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொக்கேஷன் வேலூர் காட்டியது. வாட்ஸ் அப்பில் இருந்து முதலில் இரு தொகுதி தேர்தலுக்கான முடிவுகள் வந்தன.
“திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை 6 லட்சத்து 61 ஆயிரத்து 719. அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி 3 லட்சத்து 60 ஆயிரத்து 256. திமுகவின் வெற்றி வித்தியாசம் சுமார் 3 லட்சம் வாக்குகள். அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 6 லட்சத்து 64 ஆயிரத்து 20. அதிமுக அணியின் பாமக
வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி 3 லட்சத்து 40 ஆயிரத்து 574. வெற்றி வித்தியாசம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 446.” என்றது வாட்ஸ் அப்பின் முதல் செய்தி.
“வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் பக்கத்து தொகுதிகளான அரக்கோணம், திருவண்ணாமலை தொகுதிகளின் நிலவரம் பற்றி செய்தி அனுப்பியிருக்கிறதே?” என்று யோசித்துக் கொண்டிருப்பதற்குள் வாட்ஸ் அப்பின் அடுத்த செய்தி வந்தது.

“வேலூர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருந்தாலும் இது தோல்விகரமான வெற்றி என்கிறார்கள் உள்ளூர் திமுகவினர். காரணம் அக்கம்பக்க திருவண்ணாமலை, அரக்கோணம் தொகுதிகளில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திமுக வேலூரில் மட்டும் வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திணறித் திணறி மூச்சு முட்டி ஒரு வழியாக கரையேறியிருக்கிறது. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன.
போனமுறை தேர்தல் ரத்து செய்யப்பட்டபோதே, ‘அடுத்து கதிர் ஆனந்தை வேட்பாளராக நிப்பாட்ட வேணாம். கட்சியில அதிருப்தி நிறைய இருக்கு’ என்று துரைமுருகனிடம் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இதற்கு துரை முருகன் மறுக்க, ‘வேணும்னா உங்க மருமகள் கவிதாவை நிறுத்துங்க’ என்றும் யோசனை சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். ஆனால் துரை முருகனோ, கதிரையே நிறுத்துவோம். ஈசியா ஜெயிக்கலாம்’ என்று மறுப்பு தெரிவித்துவிட்டார்.
வேலூர் தொகுதி தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டதுமே அதற்காக அறிவாலயத்தில் ஒரு மாவட்டச் செயலாளர் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டம் முடிந்ததும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு அனைத்து மாசெக்களின் கைகளைப் பிடித்து ‘என் பையனை எப்படியாவது வெற்றிபெற வச்சிடுங்க. என்கிட்ட இப்போ பணம் இல்லை. அதனால நீங்கதான் செலவழிக்கணும்’ என்று உருக்கமாக வேண்டுகோள் வைத்தார் துரை முருகன். ஆனால் மாசெக்களோ, ‘இப்பதான் பொதுத் தேர்தலுக்காக முழு சக்தியையும் திரட்டி செலவு பண்ணினோம். இப்ப மறுபடியும் செலவு பண்றதா?’ என்று ஆரம்பத்திலேயே அதிருப்தியோடுதான் தொகுதிக்குள் காலடி எடுத்து வைத்தனர். இன்னொரு பக்கம் போனமுறை பணம் கொடுத்தபோது வருமான வரித்துறைக்கு போட்டுக் கொடுத்தாக சில பேர் மீது சந்தேகப்பட்டு கண்டபடி பேசிவிட்டார் துரை முருகன். அவர்கள் டோட்டலாக இம்முறை ஒதுங்கி விட்டனர்.
வேலூர் தேர்தலில் துரை முருகன் செலவு செய்யத் தயங்குவது ஏன் என்று சில மாசெக்கள் அவரது குடும்பத்தினரிடமே சண்டையிட்டுள்ளனர். அப்போது ‘ஐடிசி டீலராக ரெண்டு ஏரியாக்கள் எடுத்திருந்தார் துரை முருகன் பையன். இது மூலமா மாதா மாதம் குறிப்பிட்ட தொகை வந்துகொண்டிருந்தது. ஆனால் நிர்வாகக் கோளாறு காரணமாக அந்த ரெண்டு டீலர்ஷிப்பையும் விட்டுவிட்டார். அதனால அந்த வருமானமும் வர்றதில்லை. அதேபோல துரை முருகனின் மருமகள் கவிதா வேலூர், ஆந்திர பகுதிகளில் அருவி என்ற வாட்டர் கம்பெனியை நடத்தி வந்தார். அதுவும் சரியாக பிசினஸ் இல்லாததால் மூடிவிட்டார்கள். இந்தோனேசியா நாட்டில் கப்பலின் வெளிப்பகுதியை தயாரிக்கும் நிறுவனமும், சிங்கப்பூரில் கப்பல்களுக்கு பெயிண்ட் அடிக்கும் நிறுவனமும் இருக்கின்றன. ஆனால் அதில் இருந்து சமீப காலமாக பணம் வரவு குறைந்துவிட்டது. இங்கே ஓலா டாக்சி போல, துபாயில் டாக்சி நிறுவனமும் துரை முருகனுக்கு இருக்கிறது.
வெளிநாடுகளில் இப்படியென்றால் இங்கே கதிர் ஆனந்த் கவனித்துக் கொள்ளும் பொறியியல் கல்லூரியில் இந்த ஆண்டு வெறும் 80 சீட்டுகள்தான் நிரம்பியிருக்கிறது. பள்ளியிலும் சரியாக அட்மிஷன் இல்லை. அதனால்தான் இப்போது தேர்தலில் சரியாக செலவழிக்க முடியவில்லை’ என்று துரை முருகனின் குடும்பத்தினரே சில மாசெக்களிடம் தங்களது பிசினஸ் பட்டியலை சொல்லிவிட மாசெக்களுக்கு மூச்சு முட்டிவிட்டது.
இவ்வளவு நிறுவனங்களை வைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில், ”நான் ஒரு குடியானவன்; ஒரு கையில வெங்காயத்தை கடிச்சுக்கிட்டே ஒரு கையில கூழ் குடிச்சிருக்கேன். இப்பவும் அப்படியே இருக்கேன்” என்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறாரே என்று மாசெக்களுக்கு துரை முருகன் மீதான கசப்பு அதிகமானது. தேர்தல் நடக்கும்போதே, ‘ஜெயிச்சா சந்தோஷம். துரை முருகன் மகன் தோத்தா ரொம்ப சந்தோஷம் என்ற மனநிலையிலேயே மாசெக்கள் வேலை பார்த்தனர்.
இன்னொரு பக்கம் துரை முருகனின் தம்பி துரை சிங்காரம் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக இருப்பவர். வேலூர் மாவட்டத்தில் துரை முருகனின் அரசியல் வாரிசு தானே என்று நம்பிக் கொண்டிருந்தார் துரை சிங்காரம். ஆனால் துரைமுருகனோ தனது மகனை வேட்பாளராக நிறுத்தியதால் அதிருப்தியடைந்தார் துரை சிங்காரம்.
2014ஆம் ஆண்டு வேலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமான் போட்டியிட்டார். அவரைத் தோற்கடிக்க அப்போது துரை முருகன் தரப்பில் பெரும் வியூகம் அமைக்கப்பட்டது. திமுகவில் நிர்வாகிகள் பட்டியல் ஒன்று ஏ.சி. சண்முகத்திடம் கொடுக்கப்பட்டது. இந்த நிர்வாகிகளை கவனித்துக் கொண்டால் அவர்கள் முஸ்லீம் லீக் வேட்பாளருக்காக வேலைபார்க்க மாட்டார்கள் என்பதுதான் அந்த வியூகம். அதேபோல அப்போது செயல்பட்டார் ஏ.சி.சண்முகம். இப்போது அதே பட்டியலை கைவசம் வைத்துக் கொண்டு அவர்களில் சிலருடன் மட்டும் ஏ.சி.சண்முகம் டீல் போட்டுக் கொண்டார். இவ்வாறு 2014இல் முஸ்லீம் லீக் வேட்பாளரைத் தோற்கடிப்பதற்காக ஏ.சி. சண்முகத்துடன் போட்டுக் கொண்ட டீல் இன்று கதிர் ஆனந்துக்கே எதிராகத் திரும்பிவிட்டது.
மேலும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக அதிமுகவின் வன்னியர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் பெரிய அளவு வேலை செய்யவில்லை. மேலும் பாமகவின் பிரச்சாரமும் அதிமுகவுக்கு முழுதாக இல்லை. அன்புமணி கூட சிற்சில கூட்டங்களுக்கு வந்து சென்றதோடு சரி. அதிமுகவின் அமைச்சர் வீரமணி கூட துரை முருகனோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் என்றும் தொகுதி முழுக்க திமுக மத்தியில் பேச்சாக இருந்தது. இது வேறு வகையில் துரை முருகனுக்கே இடைஞ்சலாகிப் போனது. துரை முருகன் சாதி சார்ந்து அரசியல் செய்கிறார் என்ற எண்ணம் திமுகவில் இருக்கும் வன்னியர் அல்லாத நிரவாகிகளுக்கே உறுதியாகத் தெரிந்ததால் அவர்கள் அடக்கியே வாசித்தார்கள். இதற்கேற்ற மாதிரி தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பு துரை முருகன் அதிகாலையிலேயே காரில் கிளம்பி தொகுதியில் இருக்கும் வன்னிய புள்ளிகள் ஒவ்வொருவரையும் போய் பார்த்து, ‘நம்ம பையனை பார்த்துக்கங்க’ என்று சொல்லி தனது வன்னிய வாக்குகளை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றார். ஆனால் அதுவே அவருக்கு திமுகவில் இருக்கும் வன்னியர் அல்லாத தலித், முதலியார் இன வாக்குகளை பெருமளவு குறைத்துவிட்டது.
அமைச்சர் வீரமணியிடம் ஒருகட்டத்தில் துரைமுருகன், ‘இப்போதைக்கு திமுகவுல நான்தான் சீனியர். அதிமுகவுல இருந்து திமுகவுக்கு வந்துடுங்க. இந்த மாவட்டம் சார்பா உங்களையே மறுபடியும் நான் திமுக ஆட்சியில மந்திரி ஆக்குறேன்’ என்று சொன்னதாகவும் திமுக நிர்வாகிகள் மத்தியில் ஒரு தகவல் கடுமையாக பரவியது. இதுவும் துரை முருகனுக்கு ஏற்பட்ட வாக்கு நெருக்கடிக்குக் காரணம்.
என்ன இருந்தாலும் முஸ்லீம் வாக்குகள் காப்பாற்றிவிடும் என்று கணக்கு போட்டிருந்தது திமுக. அதை அதிமுகவின் கடைசி வியூகம் ஒன்று தகர்த்துவிட்டது. அமைச்சர் வேலுமணி, தங்கமணி தலைமையில் ஒரு அமைச்சர்கள் குழு வேலூர் தொகுதியில் இருக்கும் முஸ்லீம் தொழிலதிபர்களைச் சந்தித்து, தயவு செய்து இம்முறை, ‘இன்னாருக்குத்தான் ஓட்டு போட வேண்டும்’ என்று மசூதிகள் வழியாக உத்தரவு போடாதீங்க என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் தேர்தல் முடிவு பற்றி ஸ்டாலின் வெளிப்படையாக பெருமிதப்பட்டாலும், உள்ளுக்குள் ஏமாற்றத்தில் இருக்கிறார். வெறும் எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசம் என்பது திமுகவுக்கு பல செய்திகளை சொல்லியிருக்கிறது. இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக இதேபோன்ற திணறல்களைச் சந்திக்க நேரிடும் என்பதே நிலவரம்” என்ற செய்தியைப் படித்து முடிக்கும்போது வாட்ஸ் அப் ஆஃப் லைனில் போயிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக