திங்கள், 5 ஆகஸ்ட், 2019

பாகிஸ்தான் : இந்தியா ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது


BBC :இந்தியா ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசின் இன்றைய அறிவிப்பிற்கு பாகிஸ்தான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்வதாகவும் மேலும், இந்தியாவின் முடிவை தாங்கள் நிராகரிப்பதாகவும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீர் பகுதி சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் உயர் ஆணையம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
"ஐநா பாதுகாப்பு சபை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஜம்மு காஷ்மீரின் அந்தஸ்தை இந்தியாவால் மாற்ற முடியாது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் நாட்டு மக்களால் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது" என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்தியா ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது. இது அந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவோடு இந்த பிரச்சனைக்கு தீர்வு கொண்டுவர பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயற்சித்தார். ஆனால், இன்று இந்த முடிவை எடுத்து நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது இந்தியா.

இந்த நேரத்தில் காஷ்மீர் சகோதரர்களுக்கு பாகிஸ்தான் துணை நிற்கிறது. நாங்கள் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு அரசியல் ரீதியாகவும் மற்ற விதங்களிலும் ஆதரவு தெரிவிப்போம். சர்வதேச முஸ்லிம் சமூகம் இந்தியாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று பாகிஸ்தான் ஊடகமான துனியா நீயுஸிற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதை தொடர்ந்து நாளை (ஆகஸ்டு 6) பாகிஸ்தானில் நாளை கூட்டு நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்தியாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முசஃபராபாத்தில் போராட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக