வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

நேரடி நெல் விதைப்புக்கு ரூ.600 மானியம்: முதல்வர் உத்தரவு!

நேரடி நெல் விதைப்புக்கு ரூ.600 மானியம்: முதல்வர் உத்தரவு!மின்னம்பலம் : நேரடி நெல் விதைப்பு சாகுபடியினை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.600 வீதம் உழவு மானியம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடியில் நடவு முறையே பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வருகின்றனர். அதற்கு அதிகமான நீர்த்தேவைப்படும் நிலையில், காவிரியிலிருந்து சமீப ஆண்டுகளாக தாமதமாகவே நீர் திறந்துவிடப்படுவதால் நெல் பயிரிடப்படுவதும் தாமதமாகிறது. மேலும், நடவுக்குத் தேவையான அதிக கூலி ஆட்கள் மற்றும் வயலை சமன்படுத்துவதற்கான அதிக சக்தி போன்றவை நடவு முறையில் பாதகமாக உள்ளன. இதனையடுத்து நடவு முறையிலிருந்து நேரடி நெல் விதைப்பு முறைக்கு மாறினால் விவசாயிகளுக்கு சாதகமாக இருக்கும் எனவும், தண்ணீரின் தேவையும் பெருமளவில் குறையும் என்று தமிழக அரசு தெரிவித்துவருகிறது. இதுதொடர்பாக விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் நேரடி நெல் விதைப்பு முறையை ஊக்கப்படுத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 23) வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “மேட்டூர் மற்றும் கல்லணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நேரடி நெல் விதைப்பு செய்து சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேரடி நெல் விதைப்பு முறை மூலமாக சாகுபடி செய்யும்போது 40 முதல் 45 டி.எம்.சி நீர் சேமிக்கப்படுவதோடு, நெற்பயிரும் 15 நாட்களுக்கு முன்னதாகவே அறுவடைக்கு தயாராகிவிடும். இதனை முன்னெடுத்துச் செல்வதற்காக சிஆர் 1009, சிஆர் 1009 சப்-1, கோ 50, ஏடிடி 50, டிகேஎம் 13 போன்ற நெல் ரகங்களின் விதைகளை போதுமான அளவில் இருப்பு வைக்க வேளாண் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.
மேலும், “நடப்பு பருவத்தில் நேரடி நெல் விதைப்பு சாகுபடியை ஊக்குவிக்க, ஏக்கருக்கு 600 ரூபாய் வீதம் உழவு மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். அதன்படி 5 லட்சம் ஏக்கர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு சாகுபடி செய்யும் வேளாண் பெருமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்குவதற்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக