வியாழன், 15 ஆகஸ்ட், 2019

2020 ஏப்ரல் ரஜினியின் தனிக்கட்சி!

மின்னம்பலம் : காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்தது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
2020 ஏப்ரல் ரஜினியின் தனிக்கட்சி!கடந்த 11ஆம் தேதி சென்னையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, காஷ்மீர் விவகாரத்தில் துணிச்சலாக முடிவெடுத்த அமித்ஷாவை பாராட்டினார். மேலும் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் மகாபாரதத்தில் வரும் அர்ஜுனர் கிருஷ்ணர் என ஒப்பிட்டுப் பேசினார் ரஜினி.
இந்நிலையில் நேற்று தன்னுடைய போயஸ் கார்டன் இல்லத்தின் வாசலில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “காஷ்மீர் பிரச்சினை என்பது நமது பாதுகாப்பு சம்பந்தப்பட்டது காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் தாய் வீடாக இருக்கிறது. எதை அரசியல் ஆக்க வேண்டும் எதை அரசியலாக்க கூடாது என்று மதிப்புக்குரிய சில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று விளக்கம் அளித்தார்.

அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்து ஆண்டுக்கணக்கில் ஆன நிலையிலும் ரஜினி இது தொடர்பாக மேலும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் பேசியபோது,
”இந்த எடப்பாடி ஆட்சி முழு பதவிக் காலத்தையும் பூர்த்தி செய்யும் என்று ரஜினி நம்புகிறார். அதனால் 2021ல் தான் சட்டமன்றத் தேர்தல் வரும் என்பது அவர் கணிப்பு. அதன்படி ஒரு வருடம் முன்பு கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். அந்த வகையில் 2020 ஏப்ரல் மாதம் ரஜினி தன் கட்சியை அறிவிக்கலாம். தேர்தலுக்கு சுமார் ஒரு வருடம் முன்பாவது ஆரம்பித்தால் தான் மாநாடு போட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தி அரசியல் பணிகளை செய்ய முடியும் என்று கருதுகிறார் ரஜினி” என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக