ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

வசந்த காலம் 13 - ரத யாத்திரை அரசியல்.

Muralidharan Pb : வசந்த காலம் 13 - ரத யாத்திரை அரசியல்.
தமிழக  அரசியலில் அமைந்த வசந்த காலத்தில் இருந்து விலகி, வடக்கில் நடைபெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் மூலம் அரசியல் வானில் நடைபெற்ற மாற்றங்களும், அதன் விளைவு தமிழகத்தில் எவ்வாறு மாற்றத்தை உண்டாக்கியது என்பதை ஓரிரு பதிவுகளுக்கு பின்பு காண்போம்.
பாஜகவின் தேசிய தலைவர்களில் ஒருவர் லால் கிஷன் அத்வானி, மேற்கு இந்தியாவின் சோமநாதபுரத்தில் இருந்து ரத யாத்திரை புறப்பட்டு சுமார் 10000 கிமி தொலைவு பயணித்து, அயோத்தியா சென்று சேருவதாக திட்டம். 25/09/1990 அன்று ஆர் எஸ் எஸ் நிறுவனர்களில் ஒருவரான தீனதயாள் உபாதயா பிறந்தநாள். அன்று துவங்கியது அந்த ரத யாத்திரை. இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தி, தேசியவாதத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட யாத்திரை இந்தியாவின் பெரும் பிரச்சனைகளை உண்டாக்கவல்லது என்று யாரும் அறியாதிருந்த காலம். நாள் தோறும் 300 கிலோ மீட்டர் என்று ஒரு மாதம் பயணித்து அக்டோபர் 29ல் அயோத்தியில் நிறைவடைய இலக்கு. அடுத்த நாள் ராமர் கோவில் கட்டும் பணி ஆரம்பிக்கப்படுவதாக திட்டம். மற்ற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ, மத உணர்வுகளை தூண்டும் வகையிலோ முழக்கம் எழுப்ப வேண்டாம் என்று அத்வானி கேட்டுக் கொண்டார். தேச ஒற்றுமை, மத அமைதி ஆகியவற்றைப் பலப்படுத்துவதே ரத யாத்திரையின் முக்கிய குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ரதயாத்திரையின் மூளையாக செயல் பட்டவர்கள் இருவர். பாலாசாஹேப் டியோராஸ், பாபுராவ் டியோராஸ் என்ற தீவிர ஆர் எஸ் எஸ் சகோதரர்கள் இரண்டு வாரங்களாக டெல்லியில் முகாமிட்டு அத்வானியை பட்டை தீட்டியவர்கள். மொத்த குழப்பங்களுக்கும் மூளையாக செயல் பட்டவர்கள் என்றால் அது தான் நிஜம்.
ராமர் கோவில் கட்டிவிட வேண்டும் என்று கூறினாலும், அந்த டியோராஸ் சகோதரர்களுக்கு கண்ணை உறுத்தியது, விபி சிங் அமல்படுத்திய பிற்பட்டோருக்கு கல்வி மற்றும் நடுவண் அரசு வேலையில் 27% என்ற மண்டல் கமிஷன் அறிக்கை. அந்த 27% தான் முன்னேறிய வகுப்பினரின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பறித்து விடும் என்று கருதி அதை உடைத்திட வேண்டும் என்பதே மெய்யான நோக்கம். ஆனால் வெளியே கூறப்பட்டது நாட்டின் அமைதிக்காக ரத யாத்திரை.
முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியான வேன் தான் ரதமாக வலம் வந்தது. எங்களது 86 எம்பிக்களை வைத்து மைனாரிட்டி ஆட்சி நடத்தும் பிரதமர் எங்களிடம் கருத்து கேட்காமலேயே மண்டல் கமிஷன் உத்தரவை அமல்படுத்தியதே மிகப்பெரிய ஏமாற்றம். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை பாஜக தெளிவாக கூறிவிட்டது. ஆனால் வெளி உலகிற்கு ராமர் கோவில் கட்டவும், மக்கள் அனைவரிடமும் நல்லிணக்கம் ஏற்படுத்திட என்று காரணம் கூறி யாத்திரை தொடங்கப்பட்டது.
ரத யாத்திரை பற்றி நாட்டில் உள்ள மற்ற முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். அப்போதைய உத்திர பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ், ராமர் கோவில் கட்டுவதை நான் ஒரு போதும் எதிர்க்கவில்லை, ஆனால் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவில் கட்டுவதை நான் எதிர்க்கிறேன். ஒரே ஒரு சாது இறந்தாலும் நாட்டில் அமைதிக்கும் குந்தகம் ஏற்படும் என்று எச்சரித்தார். மாநிலங்களவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சியினர் ரத யாத்திரியினால் நாடு முழுக்க ஏற்பட்டுள்ள கொந்தளிப்பில் பல இடங்களில் மதக் கலவரங்கள் புதிதாக முளைத்துள்ளது. இது நாட்டின் அமைதிக்கு கேடு விளைவிக்கும் என்று ரத யாத்திரை உடனடியாக நிறுத்தப் படவேண்டும் என்று அரசிடம் முறையிட்டனர். ஆனால் சிக்கந்தர் பக்த் என்ற பாஜகவின் தலைவர் பதிலளிக்கையில் ராமர் கோவிலை கட்டுவது நிச்சயம் நாட்டில் கலவரத்தை உண்டாக்காது என்று பதிலளித்தார். அந்த நவராத்திரி நாளில் நாட்டில் புதிய தலைமைக்காக இந்த பயணம் அமைவதாக கூறப்பட்ட யாத்திரையில் வாகன ஓட்டுநர் சலீம் என்று இஸ்லாமியன்.
அக்டோபர் 12ல் தேசிய முன்னணியின் ஆட்சி மன்றக் குழு கூடியது. அதில் ராம ஜென்ம பூமி பிரச்சனையில் தொந்தரவுக்குள்ளான இடத்தில் உள்ள அமைப்புகள் அனைத்தையும் என்ற அரசின் முடிவிற்கு ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்தது. முஸ்லீம் தலைவர்களிடம் ஆலோசனைக் கேட்டறிந்தது. அதற்குள் அத்வானி ரத யாத்திரையை தடுத்தால் சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என்றார். ராமர் கோவிலை கட்ட அனுமதிக்காமல் போனாலோ, ரத யாத்திரையை தடுத்தாலோ, தேசிய முன்னணி ஆட்சிக்கு கொடுத்து வரும் ஆதரவை பாஜக உடனடியாக விலக்கிக் கொள்ளும் என்று கூறினார். கட்சி கூடி முடிவெடுத்தும் விட்டது.
விபி சிங் மிகத்தெளிவாக பாஜகவிற்கு பதிலளித்தார். இந்த ஆட்சியை கலைக்க நினைத்தால் மீண்டும் தேர்தல் வராது, ஆட்சியை கவிழ்த்தால் எங்கள் கட்சியில் இருந்து யாரும் போட்டியிட மாட்டார்கள், மிக எளிதாக பிரதமராக ராஜீவ் காந்தி வந்துவிடுவார் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
அப்போது பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், அத்வானியை சந்தித்து பீகார் வழியே ரத யாத்திரையை மேற்கொள்ள வேண்டாம் என்று கூறினார். அதற்கு அவர் கூறிய காரணம் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தோன்றியுள்ளது, ஆகவே பதற்றத்தை தவிர்த்திட ரத யாத்திரையை அனுமதிக்க முடியாது என்று கூறி இருந்தார். ஆனால் அத்வானி எதையுமே காதில் போட்டுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. அனைத்து பெரிய கட்சிகளும் கலந்து கொண்ட அந்த கூட்டத்தை புறக்கணித்தது பாஜகவும், காங்கிரஸும். மேற்கு வங்காள பிரதமர் ஜோதி பாசு அத்வானியிடம் ரத யாத்திரையை கைவிடுமாறு கோரிக்கை விடுக்கிறார். அதையும் ஏற்க மறுத்து விட்டார்.
19/10/1990 அன்று இந்திய குடியரசு தலைவர் ராம ஜென்ம பூமி இடத்தை அரசு ஆர்ஜிதம் செய்வதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தார். ரதம் உள்ளே வரும் போது, பெரும் கலவரம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநிலத்தில் ரத யாத்திரை அமைதியாக நுழைந்தது.
மத்திய அரசின் சார்பில் ராம ஜென்ம பூமி-பாபர் மசூதி பிரச்னை தொடர்பான வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றுவது என்றும் பிரச்னைக்குரிய இடத்தை மாதிரி அரசு எடுத்துக் கொள்வது என்றும், அந்த பகுதியை ஒட்டியுள்ள வேறு இடத்தை ராமர் கோவில் கட்டுவதற்காக சமிதியிடம் ஒப்படைப்பது என்றும் மூன்று அம்சத் திட்டத்தை உருவானது. அதை திமுக உள்ளிட்ட அனைத்து தேசிய முன்னணி கட்சியினரும் ஏற்றுக்கொண்டனர்.
பாஜகவும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதில் பெரிய நட்டம். ஆகவே அந்த நேரத்தில் ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் எதுவுமில்லை அதே நேரத்தில் ரத யாத்திரைக்கு அரசு தடை விதிக்கக்கூடாது என்று
இறங்கி வந்தது. அப்படி ரத யாத்திரைக்கு தடை விதித்தால், நிச்சயம் நாடு தழுவிய மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று விபி சிங் அரசை எச்சரித்தது பாஜக.
பாஜக, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதையே லட்சியமாகக் கொண்ட விஸ்வ இந்து பரிஷத் மற்றும் தங்களது தாய் இயக்கமான ஆர்எஸ்எஸ் இரண்டு இயக்கங்களோடும் வெளிப்படையாகவே அணி சேர்ந்து அரசுக்கு எதிராக யுத்தத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தது. பாஜகவின் மற்றொரு தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய் தேசிய ஒருங்கிணைப்பு குழுவில் இருந்து விலகிக்கொண்டார். அவர் விலகியதன் மிக முக்கிய காரணம், சென்னையில் நடந்த தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நீதிமன்றத்தில் அயோத்தி பிரச்சனையில் என்ன முடிவு எட்டப்படுகிறதோ அதற்கு தகுந்தாற்போல் உத்திர பிரதேச அரசுக்கு அனைத்து கட்சிகளும் மத்திய அரசும் ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து விலகிக் கொண்டார். அது தான் பாஜக அந்த சென்னைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் விலகியதன் பின்னணி.
இன்னொரு உண்மையையும் நினைவு கூற வேண்டும், மண்டல் கமிஷன் என்பது பி.ப்பி மண்டல் என்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்டு அப்போதைய ஜனதா கட்சியின் பிரதமர் மொரார்ஜி தேசாய் காலத்தில் 1 ஜனவரி 1979ல் கொண்டுவரப்பட்டது. கல்வியிலும் சமூகத்திலும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு சாதி அடைப்படையில் இந்தியா முழுவதும் உள்ள அரசுக்கல்வி நிறுவனங்களில், மத்திய அரசு பணிகளில், அமுல்படுத்திட மண்டல் என்பவரைக் கொண்டு பரிந்துரை வழங்கிட அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் பாஜக என்ற கட்சியே இருக்கவில்லை. அவர்கள் ஜன சங்கம் என்ற பின்னணியில் அப்போதைய ஜனதா ஆட்சியில் அங்கம் வகிதத்து குறிப்பிடத்தக்கது.
1990ல் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அன்று மண்டல் கமிஷன் அமுல்படுத்தியதே பாஜகவின் நிலைப்பாட்டிற்கு காரணம் என்று ஊரறிந்த ரகசியமாக இருந்தாலும் பாஜகவினர் வேறு சில காரணங்களுக்காக மத்திய அரசிடம் தகராறு செய்தது. அவை என்னென்ன என்பதை பின் வரும் பதிவுகளில் காண்போம்.
நன்றி மீண்டும் சந்திப்போம்.
அடுத்து: மத்தியில் ஏன் ஆட்சி மாறியது ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக