புதன், 24 ஜூலை, 2019

புதிய கல்விக் கொள்கை மாநிலங்களுக்குப் பொருந்துமா?. .. கலைஞர் கருணாநிதி - July 23 - 2016

Boopathi PT ; குபீர் போராளிகளே!!! தமிழின துரோகி,
தலித்விரோதி, கட்டுமரம்
பேசுகிறேன் - July 23 - 2016 :
புதிய கல்விக் கொள்கை மாநிலங்களுக்குப் பொருந்துமா?
கடந்த சில நாட்களாக, நாளேடுகள், இதழ்கள், ஊடகங்கள், சமுதாய மற்றும் அரசியல் அரங்குகள் அனைத்திலும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பற்றிய சாதக-பாதகங்கள் விரிவாக விவாதிக்கப்படுகின்றன. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான பரிந்துரைகள் அளிக்க முன்னாள் கேபினட் செயலாளர், டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன், ஐ.ஏ.எஸ்., தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்தக் குழு தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை கல்வித் தரத்தை உயர்த்த பல்வேறு பரிந்துரைகள் கொண்ட 200 பக்க அறிக்கையை அண்மையில் அளித்திருக்கிறது.
1964ஆம் ஆண்டு இந்தியக் கல்விக் குழு, பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவராக இருந்த கோத்தாரி தலைமையிலும்; 1993ஆம் ஆண்டு கல்விக் குழு கல்வியாளரும் அறிவியலாளருமான யஷ்பால் தலைமையிலும், அமைக்கப்பட்டிருக்கும் போது; தற்போது மத்திய பா.ஜ.க. ஆட்சியில் 2015ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான குழு கல்வியாளர் தலைமையில் அமைக்கப்படாமல், அரசின் பொது நிர்வாகத் துறையைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தலைமையில் அமைக்கப்பட்டிருப்பது வினோதமான முடிவாகும். அது மட்டுமல்ல; குழுவில் இடம் பெற்றுள்ள அய்வரில் நான்கு பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆவர்; ஒருவர் மட்டுமே கல்வியாளர் என்பது கூர்ந்து நோக்கத்தக்கது.

அனைவர்க்கும் எளிதில் நினைவுக்கு வரும் கோத்தாரி குழுவுக்கு முன்பு, தத்துவ ஞானியும் மிகச் சிறந்த கல்வியாளரு மான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் 1948ஆம் ஆண்டில் இந்தியப் பல்கலைக் கழக ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதும்; அரும் பெரும் கல்வியாளர் டாக்டர் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார் அவர்கள் 1952ஆம் ஆண்டில் அனைத்திந்திய இடைநிலைக் கல்வி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதும்; இந்தியக் கல்வி வரலாற்றின் பொன்னேடுகள்.
இக்குழு பரிந்துரைத்துள்ள பல அம்சங்கள் விவாதத்திற்கு உரியவை ஆகும்; மேலும் பல அம்சங்கள் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளன.
கட்டாயத் தேர்ச்சி என்பது நான்காம் வகுப்பு வரை மட்டுமே அளிக்கப்பட வேண்டும்; அய்ந்தாம் வகுப்பு முதல், தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல் வகுப்பிற்கு அனுப்ப வேண்டும் என்பது குழுவின் பரிந்துரை. மாணவர்களுக்குக் கட்டாயத் தேர்ச்சி என்பது அவர்கள் படித்தாலும், படிக்காவிட்டாலும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்பதல்ல. அவர்களைக் கட்டாயம் தேர்ச்சி பெறுவதற்குத் தகுதியானவர்களாக உருவாக்கிட வேண்டும் என்பதே அதன் உட்பொருள். தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களில் பலர் கல்வியைத் தொடர்வதில்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கும்போது, தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே மேல் வகுப்புக்கு அனுப்ப வேண்டும் என்பது போன்ற பரிந்துரையால் பள்ளியை விட்டு வெளியேறும் அல்லது இடை நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி “அனைவருக்கும் கல்வி” என்பது செயலாக்கத் தொடர்பற்றுப் போகும். இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவர்.
உலகில் கல்வியில் மிக உயர்ந்த இடம் வகித்திடும் பின்லாந்து நாட்டில், ஏழு வயதில்தான் கல்வி தொடங்குகிறது என்பதையும்; 16 வயது வரை ஒன்பது ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாகத் தேர்வு என்பதே மாணவர்களுக்கு இல்லாமல், அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது என்பதையும்; நினைவில் கொள்வது நலம்!
அது மட்டுமல்ல; ஒரு மாணவன் தொடர்ந்து தேர்வு பெறவில்லை என்றால், அந்த மாணவனைத் தொழிற் பயிற்சிக்கு அனுப்பலாம் என்ற பரிந்துரையும் இருக்கிறது. ஒரு பக்கம் கல்வி உரிமைச் சட்டம் மூலம், அனைவருக்கும் கல்வி அளிக்க உறுதி பூண்டுள்ள வேளையில் இன்னொரு பக்கம், மாணவனை 12 வயதிலேயே தொழிற்கல்விக்கு அனுப்பத் திட்டமிடுவது நயவஞ்சகம் இல்லையா? மேலும், மறைமுகமாகக் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற அய்யத்தை ஏற்படுத்தும் பேரபாயம் தோன்றி விடும். அது கடிகாரத்தைப் பின்னோக்கித் திருப்பி வைக்கும் முயற்சியை ஒத்ததாகிவிடும். தேர்வு பெற முடியாமல் படிப்பில் பின்தங்கி விடும் மாணவர்களுக்குத் தொழிற் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை மாணவர்களுக்குள்ளே இளம் வயதிலேயே பிளவு ஏற்படுத்தும் காரியமாகும். அனைத்து மாணவர்களும் வேலை வாய்ப்பைப் பெற்றிடும் வகையில், தொழில் கல்வி உருவாக்கப்பட்டு, நடைமுறைப்படுத் தப்படுவதே, நமது நாட்டிற்கு உகந்த தாகவும், வளர்ச்சிக்கு உதவுவதாகவும் இருக்கும்.
கல்வி நிர்வாகப் பணிக்கு வருவோருக்கு இந்தியக் கல்விப் பணித் தேர்வு வைக்க வேண்டும் என்று பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி மாநில அரசுகள் கல்வித் துறை இயக்குநர்களை நேரடியாக நியமிக்க முடியாது என்பதோடு, அகில இந்தியக் கல்விப் பணியில், அதிகாரிகள் நியமன ஒதுக்கீடு பெறும் மாநிலத்தைப் பற்றிய சரியான புரிதல் இன்றி, பணி ஈடுபாடு வெகுவாகக் குறைந்து விடும்.
பிளஸ் 2 முடித்தவர்கள் பின்னர் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று குழுவின் அறிக்கை கூறுகிறது. இதன் மூலம் பாடத் திட்டத்தை மாநில அரசுகள் திட்டமிட முடியாத நிலை ஏற்படுகிறது. டெல்லியில் அமர்ந்து கொண்டு வகுக்கப்படும் பாடத் திட்டம் இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத் திட்டமாகி, இந்தியாவின் அடிப்படைக் கூறான “பன்முகம்” என்பது காலப் போக்கில் சிதைவுறும்.
நம் நாட்டில் உயர் கல்வியின் தரத்தை உயர்த்த, தலைசிறந்த வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்ற பரிந்துரையின் பெயரால், கல்வியில் தாராளமயம் புகுந்து விடும்; கல்வி முற்றிலும் வணிக மயமாகி விடும்; கல்விக் கட்டண உயர்வுக்கு வழி ஏற்பட்டு விடும்; உயர் கல்வி செல்வந்தர் வீட்டுச் செல்லப் பிள்ளைகளுக்கு மட்டுமே உரிய தனி உடைமையாகி, பணக்காரக் கல்வி, ஏழைக் கல்வி என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி விடும். வெளிநாடுகளில் தரமான கல்வி வழங்கப்படுகிறது என்றால்; அது போன்ற தரமான கல்வி நிறுவனங்களை நம் நாட்டிலேயே நமது சூழ்நிலைகளையொட்டி உருவாக்கிட முனைப்புக் காட்ட வேண்டும்.
ஆசிரியர்களைப் பொறுத்தவரை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் கட்டாயமாக லைசென்ஸ் அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியை உருவாக்க வேண்டும்; மேலும் ஒவ்வொரு பத்தாண்டுக்குப் பிறகு மேற்கண்ட ஆசிரியர்கள் தேர்வு எழுதி தங்கள் லைசென்சை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற விதியையும் உருவாக்க வேண்டும் என்றும்; ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயமாகப் பயிற்சி பெற வேண்டும் என்றும்; பரிந்துரைத்திருப்பது எதிர்பார்க்கும் விளைவுகளை ஏற்படுத்துவதற்கு மாறாக, ஆசிரியர்கள் மத்தியில் ஒருவகை எந்திரத் தன்மையைத் தோற்றுவிப்பதோடு, காலப் போக்கில் கற்பித்தலில் சலிப்பையும், விரக்தியையும் ஏற்படுத்திவிடும்.
இந்திய நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படும் வரை “கல்வி” மாநிலப் பட்டியலில்தான் இருந்து வந்தது. நெருக்கடி காலத்தில்தான், மாநில உரிமைகளில் ஆக்கிரமிப்பு செலுத்திடும் விதமாக, கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே கல்வியில் மத்திய அரசின் தலையீடுகள் அதிகரித்து வருகின்றன. பாடத் திட்டம் வகுப்பதிலும், கற்க வேண்டிய மொழிகளை முடிவு செய்வதிலும், மாநிலங்களின் விருப்பத்திற்கு மாறாக, மத்திய அரசு திணிப்பு நடவடிக்கையில் இறங்கி வருகிறது.
கல்வித் துறையில் அதிகாரிகளை நியமிக்க “இந்தியன் எஜுகேஷனல் சர்வீஸ்” தேர்வு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுபவர்களை மட்டுமே கல்வித் துறையில் அதிகாரிகளாக பணி அமர்த்த வேண்டும் என்றும்; மேல்நிலைக் கல்வி முடித்த அனைவரும் அகில இந்திய அளவில் ஒரு பொது நுழைவுத் தேர்வினை எழுதி, அதில், அவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்தே அவர்கள் எந்த ஒரு உயர் கல்வியிலும் சேர முடியும் என்றும்; செய்யப்பட் டிருக்கும் பரிந்துரைகள் மாநில உரிமைகளை மறுப்பவை; ஆதிக்க எண்ணத்தைப் பிரதிபலிப்பவை.
தற்போது வகுக்கப்பட்டிருக்கும் “புதிய கல்விக் கொள்கை” வெளிப்படைத் தன்மையோடும், ஜனநாயக அடிப்படையிலும் உருவாக்கப் பட்டிருப்பதாகக் கருது வதற்கு இடமில்லை.
“2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க சில விவாதத் தலைப்புகள் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது. நாடு முழுவதும் இதுகுறித்த விவாதம் நடத்தப்பட்டதாக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கூறுகிறது. ஆனால் யாரிடம், எப்போது நடந்தது, அதில் கூறப்பட்ட கருத்துகள் என்னென்ன என்பதை அரசு வெளியிட மறுக்கிறது. கருத்துக் கேட்பு நடத்தப்பட்டதாக கடந்த ஒன்றரை ஆண்டுகள் எந்தச் செய்தித் தாளிலும் செய்திகள் வரவில்லை. பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட யாருக்கும் இது குறித்த எந்தத் தகவலும் தெரியவில்லை. திரட்டப்பட்டதாகச் சொல்லப்படும் கருத்துகளை எல்லாம் தொகுத்து பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையினையும் இந்திய அரசு வெளியிட மறுக்கிறது. இவ்வாறு ரகசியமாக கல்விக் கொள்கை அறிக்கை தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியிருப்பதில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது.
திராவிடர் கழகத் தலைவர் இளவல் கி. வீரமணி அவர்களின் தலைமையில் 12-7-2016 அன்று நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழுக் கூட்டத்தில், “புதிய கல்வி முறை என்ற பெயரால் நுழைக்கப்படும் நவீன குலக் கல்வித் திட்டத்திற்குக் கண்டனம்” என்ற தலைப்பில்,
“மத்திய அரசால் நியமிக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டுள்ள டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் கமிட்டியின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள முக்கியமான ஆபத்துகளில் ஒன்று, இந்தியா முழுமைக்குமான புதிய இந்தியக் கல்விப் பணி சர்வீஸ் ஒன்றைத் துவக்கி, அதிக தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் தேர்வு என்று கூறி, பொத்தாம் பொதுவில், தற்போது மாநிலங் களின் தனி கலாச்சாரம் , சமூக நீதி, முன்னேற்றம் - இவைகளைப் பாதிக்கும் மறைமுகமானதொரு அபாயத்தை நடைமுறைப் படுத்த திட்டமிட்டுள்ளனர்”
“ஏற்கனவே நெருக்கடி நிலை காலத்தில், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து மேலும் மாநில உரிமையைப் பறிக்கும் வகையில் மத்திய அரசின் முழு அதிகாரத்தின் கீழ் கொண்டு வரத் திட்டமிடப்படுகிறது.”
“இதன் மூலம் இந்தி, சமஸ்கிருத மொழியையும், கலாச்சாரத்தையும் திணிப்பதை - மேலும் எளிதாக்கிடவே மறைமுகமாக ஆழ்ந்த உள்நோக்கத் துடன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாநில அரசுகள் ஒரு போதும் தம் இசைவைத் தரக் கூடாது” என்று நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் நன்கு சிந்தித்து, தெளிவு பெறத்தக்கது.
“பொதுப்பள்ளிக்கான மாநில மேடை”யின் ஏற்பாட்டில், 14-7-2016 அன்று, சென்னைப் பல்கலைக் கழகப் பவள விழா மண்டபத்தில், கல்வியாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,
“தொடக்கக் கல்வி கூட அனைவருக்கும் சமமாகக் கிடைக்காது என்பதை உறுதியுடன் மத்திய அரசின் ஆவணம் கூறுகிறது. இடைநிலைக் கல்வி கூட முடிக்காமல் பெரும் பகுதி மக்களை அரைகுறைத் திறனுடன் குறைந்த கூலிக்குப் பணிபுரியும் பன்னாட்டு நிறுவனத் திற்குத் தேவையான கூலிப் பட்டாளத்தை உருவாக்கும் கொள்கை முன்மொழி வாக அமைந்துள்ளது. உலக வர்த்தக அமைப்பின் கீழ்சேவையில் வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தத்தில் கல்வியை சந்தைப் பொருளாக மாற்றத் தேவையான கொள்கை முன்மொழிவுகள் இந்த ஆவணத்தில் இடம் பெற்றுள்ளன”.
“சமூக நீதிப் போராட்டத்தின் பயனாகக் கிடைத்த இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து சமூக நீதித் திட்டங்களும் செயலற்றதாக ஆக்கும் கொள்கை முன் மொழிவுகள் இடம் பெற்றுள்ளன”.
“மானியம் ஒழிப்பு, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு சமூகத்திலும், கல்வியிலும் பின் தங்கிய நிலைக்குத் தகுந்தாற்போன்ற கல்வி உதவித் தொகை என்ற அரசமைப்புச் சட்ட நோக்கத்திற்கு மாறாக தகுதி அடிப் படையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர் களுக்கான கல்வி உதவி என்ற முன் மொழிவும்; அரசு இனி புதிதாக உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்காது, பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக நிதி முதலீடு செய்து இலாபம் ஈட்டவும் ஆசிரியருக்கோ, மாணவர் களுக்கோ சிக்கல் உருவானால் நீதிமன்ற தலையீடு இல்லாமல் நடுவர் மன்றம் வழக்குகளை தீர்க்கக்கூடிய மிக ஆபத்தான கொள்கை முன்மொழிவும் உள்ளன” என்று விரிவாகக் குறிப்பிட்டிருப்பது, “புதிய கல்விக் கொள்கை”யின் போர்வையை விலக்கி, உண்மையான தோற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதாக உள்ளது.
கல்விக் கொள்கையை வரையறுக்க கல்வியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை இந்திய அரசு உருவாக்க வேண்டும். அத்தகைய குழுவில் மாநிலங்களையும் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் சமூகத்தின் பெரும்பான்மையாக உள்ள சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர் பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள கல்வியாளர்களையும் பிரதிநிதித் துவப்படுத்தும் வகையில் அக்குழு அமைய வேண்டும். அக்குழு தயாரிக்கும் வரைவு அறிக்கை நாட்டு மக்கள் முன் வைக்கப்பட்டு மக்கள் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் இந்திய அரசு கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும்.
தமிழக அரசு, பள்ளிக் கல்வியிலும், உயர்கல்வியிலும், ஆசிரியர் மத்தி யிலும், மாநில உரிமைகளிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் ஏராளமான பிரச்சினைகளை உள்ளடக்கிய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து, இந்தப் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே எதிர்க்கட்சிகளுக்குப் போதிய வாய்ப்பளித்து, ஒரு நாள் முழுதும் விவாதித்து, தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்; அந்தத் தீர்மானத்தில் “கல்வி”யை மீண்டும் மாநில அரசுப் பட்டியலில் சேர்ப்பதற்குத் தக்கக் காரண விளக்கங்களுடன் அழுத்தமான கோரிக்கையும் இடம் பெற வேண்டும். புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை தமிழகத்திற்குள் புகுந்து, “கல்வி சிறந்த தமிழ்நாட்டை” நாசப்படுத்திடவோ, காலங்காலமாக நாம் போற்றி வரும் சமூக நீதி மற்றும் சம நீதிக் கொள்கைகளுக்குக் கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது. வருமுன் காப்பதே அறிவுடைமை! ஜெயலலிதா அரசு, நமது மாநிலத்திற்குச் சிறிதும் பொருந்தாத இந்தப் பிரச்சினையை எச்சரிக்கையோடு கையாளுமா? தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுமா?/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக