வெள்ளி, 5 ஜூலை, 2019

வேலூர் தொகுதியில் பிரதமர் பிரச்சாரம்: ஏ.சி.சண்முகம் தகவல்!.. EVM இருக்க பயமேன்???

வேலூர் தொகுதியில் பிரதமர் பிரச்சாரம்: ஏ.சி.சண்முகம்  தகவல்!மின்னம்பலம் : வேலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய நிச்சயம் வருகிறேன் எனப் பிரதமர் மோடி என்னிடம் முன்பே கூறியுள்ளார் என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வருமான வரித் துறை, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 10 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து, அதன் நீட்சியாக வேலூருக்கு நடக்க இருந்த தேர்தலை மட்டும் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்த நிலையில் வேலூருக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று (ஜூலை 4) அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நேற்று முதல் வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

ரத்து செய்யப்பட்ட தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். வரும் தேர்தலிலும் அவர்களே மீண்டும் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தல் தொடர்பாகப் பேட்டியளித்த ஏ.சி.சண்முகம், “37ஐ 38 ஆக்க வேலூர் தொகுதி மக்கள் நிச்சயம் வாக்களிக்க மாட்டார்கள்.வேலூருக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது ரூ.500 கோடியிலும் நிறைவேற்றப்படலாம், ரூ.2,000 கோடியிலும் நிறைவேற்றப்படலாம். வேலூரின் மக்களவை உறுப்பினர் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும்போது ரூ.3,000 கோடியாகவும் அந்தத் திட்டம் மாற்றப்படலாம். ஆகவே, மத்திய அரசைச் சார்ந்த ஒரு வேட்பாளர் வெற்றிபெறும்போதுதான் வேலூர் தொகுதி வளர்ச்சியடையும். மத்திய, மாநில அரசின் திட்டங்களும் வரும்” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்தியா முழுவதும் வாக்களிக்கும்போது நாம் மட்டும் வாக்களிக்க முடியவில்லை என்பதை வேலூர் தொகுதி மக்கள் அவமானமாகக் கருதினார்கள். திமுக வேட்பாளரால்தான் தேர்தல் நிறுத்தப்பட்டது. எனவே திமுகவின் மீதான வேலூர் மக்களின் கோபம் மாறாது” என்று விமர்சித்தவர்,
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடியைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியின்போதே அவரிடம், வேலூர் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் நீங்கள் சுற்றுப்பயணம் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தேன். தைரியமாகச் செல்லுங்கள், நிச்சயமாக வருகிறேன் என என்னுடைய தோளைத் தட்டிக்கொடுத்துக் கூறினார். பிரதமர், முதல்வர், துணை முதல்வர், கூட்டணிக் கட்சித் தலைவர்களோடு நிச்சயம் மிகப்பெரிய தேர்தல் களத்தைச் சந்திப்போம். தேர்தலில் வெற்றிபெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்துவோம் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக