வியாழன், 25 ஜூலை, 2019

வைகோ உள்ளிட்ட 5 தமிழக மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு !

தமிழில் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு!minnmbalam : மாநிலங்களவை உறுப்பினர்களாக வைகோ உள்ளிட்ட 5 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
தமிழகத்திலிருந்து 2013ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது. இதனையடுத்து, மாநிலங்களவை இன்று (ஜூலை 25) கூடியதும் தமிழகத்திலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. முதலில் அதிமுக உறுப்பினர் சந்திரசேகரன், கடவுளின் பெயரால் உறுமொழி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். அவரைத் தொடர்ந்து முகமது ஜானும் அவ்வாறே பதவியேற்றார்.

வைகோ உறுதிமொழி ஏற்கும்போது, “மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வைகோ என்னும் நான், சட்டத்தினால் நிறுவப்பட்ட இந்திய அரசியலமைப்பின் மீது பற்றார்வமும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும் தற்போது ஏற்க இருக்கும் கடமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்று விழுமிய முறைமையுடன் உறுதி கூறுகிறேன்” என்று கூறி பதவியேற்றார். அதுபோலவே திமுக எம்.பி.க்கள் சண்முகம், வில்சன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். 5 பேரும் தமிழிலேயே பதவியேற்றுக்கொண்டனர். அனைவருக்கும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
இவர்களுடன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பதவி ஏற்றுக்கொள்ளவில்லை. பாமக நிறுவனர் ராமதாஸின் 80ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுவதால், அன்புமணி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவில்லை என்று கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக