செவ்வாய், 23 ஜூலை, 2019

இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாட்டின் உரிமைகளும்” - அமெரிக்க உலக தமிழ் மாநாட்டில் ...

மயிலாடுதுறை சிவா : “இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாட்டின் உரிமைகளும்” - ஆழி செந்தில்நாதன்
சூலை 20, 2019 சனி மதியம் உலகத் தமிழ் அமைப்பு நட த்திய கருத்தரங்கில் தமிழகத்தில் இருந்து வந்து இருந்த திரு ஆழி செந்தில்நாதன் அவர்கள் “இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாட்டின் உரிமைகளும்” என்ற தலைப்பில் உரையாடினார்.
இந்தியா என்பது “மாநிலங்களின் ஒன்றியம்” “ராஜ்ஜயங்களின் சங்கமம்” என்று இந்திய அரசியல் அமைப்பு சட்ட அமைப்பில் இருக்கிறது என்று முதலில் பேச ஆரம்பித்தார். ஒவ்வோரு மாநிலத்திற்கு என்று தனி தனி உரிமைகள் மொழி சார்ந்தும், நிலம் சார்ந்தும் இருக்கிறது என்றார். ஆனால் ஆளும் மோடி அரசின் கொள்கைகள் அனைத்தும் “ஓற்றை இலக்கை” நோக்கி பயணிக்கும் நோக்கத்தில் உள்ளது என்றார்.
தமிழ்நாட்டிற்கு என்று பல அதிகாரங்கள் இருக்கிறது. கல்வித் துறை, சுற்றுலாத்துறை, சுகாதரத்துறை, விளையாட்டுத்துறை இப்படி எத்தனையோ துறைகளில் தனி அதிகாரங்கள் வகுக்க தமிழகத்திற்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் கடந்த 6 அல்லது 7 ஆண்டுகளாக நமது உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது என்பதற்கு நீட், 8 வழி சாலை, நியூட்ரினோ திட்டம், கூடன் குளம் அணு உலை, ஜல்லிக்கட்டு, மீத்தேன் திட்டம் என பல பிரச்சினைகளில் மத்திய அரசின் திட்டங்களை, தமிழக அரசு மீறி எதுவும் செய்ய முடியாமல் போனதிற்கு காரணம், நமது “மாநில சுய நிர்ணயம்” இழந்து இருப்பதே காரணம் என்றார்.

மத்திய ஆட்சியில் பண்டித ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த பொழுது “எதிர்கால இந்தியா” எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில தீர்மானங்களை நிறைவேற்றினார், ஆனால் அவை அனைத்தும் கூட்டாச்சி தத்துவத்தை தூக்கி பிடிக்காமல் “ஒற்றை ஆட்சியை” வலுபடுத்துவதாகவே அமைந்து இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
தற்பொழுது ஆளும் மத்திய மோடி அரசு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய உரிமைகள் பறிக்கப்பட்டு, மாநிலத்திற்கு சட்டம் இயற்றும் உரிமை, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசியல் அதிகாரம் இவை அனைத்தையும் மாநிலத்தில் இருக்க கூடாது என்பதை ஆர் எஸ் எஸ் சிந்தாந்தவாதிகள் மூலம் கொஞ்ச கொஞ்சமாக நிறைவேற்றி வருகிறது என்றார்.
ஓரே அதிகாரம், ஓரே மொழி, ஓரே கல்வி எல்லாவற்றிக்கும் டில்லியே சார்ந்து இருப்பது போன்ற நீண்ட கால திட்டத்தை, இந்தியா முழுக்க “இந்து ராஷ்டிரத்தை” நிறுவ முயன்றுக் கொண்டு இருக்கிறார்கள் மோடி அரசு என்றார்.
இந்தியாவில் முதன் முதலில் மாநில அரசுகளின் உரிமை காக்க எழுப்பிய முதல் குரல் “திராவிட இயக்கத்தில்” வந்த குரல் அறிஞர் அண்ணாவுடையது என்றார். 1962 ஆம் ஆண்டு முதன் முதலில் “திராவிட நாடு” கோரிக்கையை எழுப்பிய அண்ணாவின் முதல் குரல் “மாநில சுய நிர்ணய குரல்”. ஒவ்வோரு மாநிலத்திற்கும் சுய நிர்ணய உரிமை இருக்கிறது என்று அண்ணா பேசியது இந்திய பாராளுமன்றத்தில். அண்ணாவின் குரல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லை. அன்று அண்ணா எழுப்பிய குரல் திராவிட முன்னேற்ற குரல், ஒட்டு மொத்த தமிழர்களின் குரல். தேர்தல் அரசியலில் உள்ள ஒரு மிகப் பெரும் கட்சி, திராவிட நாடு கோரிக்கையை முன் நிறுத்தியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அண்ணா அன்று ஆங்கிலத்தில் சொன்னார் “ "Political sovereignty does not lie in a same place" – ஆனால் காலப் போக்கில், அரசியல் காரணங்களுக்காக அண்ணா “திராவிட நாடு” கோரிக்கையை தள்ளி வைத்தார், அப்பொழுது அவர் சொன்ன கருத்து, வரலாறு திரும்பும், சீற்றம் கொண்ட அதிருப்தி குரல் வரும் என்றார். அதற்கும் ஆங்கிலத்தில் " Carry On, but remember it will come back" என்றார்.
அறிஞர் அண்ணாவின் இறுதி கடிதம், அதாவது உயில் என்றே சொல்லாம், அந்த கடிதம் காஞ்சி இதழில், பொங்கல் மலரில் வந்து இருந்தது. அதன் நீட்சியாக கலைஞர் அரசு, மாநில சுய ஆட்சிக்கான அதிகாரங்களை செயல் படுத்த “ நீதிபதி ராஜா மன்னார்” தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைத்தார். இந்த குழுவின் பரிந்துரைகளே ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் ஆன முதல் மாநில சுய ஆட்சி ஆவணம்.
1974 ஆம் ஆண்டு அந்த குழு அளித்த தீர்மானங்களை சட்டமன்றத்தில் கிட்ட தட்ட மூன்று நாட்கள் பல்வேறு பட்ட அரசியல், வரலாறு சம்மந்தப்பட்டு விவாதித்து இருக்கிறார்கள் நமது தமிழக மந்திரிகள் கலைஞர் அரசில். அந்த விவாதங்கள் முழுக்க கிட்ட தட்ட 600 பக்கம் ஆவணங்களாக இருக்கிறது என்ற முக்கியமான விசயத்தை பகிர்ந்துக் கொண்டார் ஆழி செந்தில் நாதன்.
இப்படிப்பட்ட தருவாயில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பகிர்ந்துக் கொண்டார் ஆழி செந்தில்நாதன். “தன்னாட்சி” யை மீட்டு எடுக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம் என்றார். 1930 ஆண்டுகளில் முஸ்லீம் லீக் சுய ஆட்சி நிர்ணயம் உரிமைகளை கேட்டார்கள். முகமது அலி ஜின்னாவும் அதேப் போன்ற சுய ஆட்சி கேட்டார், ஆனால் நேருவும், படேலும் அதனை ஏற்கவில்லை, அதற்கு நேர் எதிராக ஒற்றை ஆட்சி முறையை மட்டுமே ஏற்றுக் கொண்டார்கள்.
சட்டமேதை முனைவர் அம்பேத்கர் கண்ட கனவும் “பன்முக இந்தியா” “கூட்டாச்சி இந்தியா” மட்டுமே. இந்தியாவின் ஒட்டுமொத்த உரிமைகளும் மத்தியில் குவிகின்ற செயல் நல்லது அல்ல என்பதை எடுத்துச் சொன்னார்.
மத்தியில் கூட்டாசி, மாநிலத்தில் சுய ஆட்சி என்பதை தேர்தல் நேரத்தில் மட்டும் அல்லாமல் தொடர்ந்து வலியுறுத்துவது மாநிலங்களுக்கு பயன் அளிக்கும். காஷ்மீரத்திற்கு தன்னாட்சி அதிகாரம் கிடைத்து இருந்தால் இத்தனை உயிர் இழப்புகள் இருந்து இருக்காது என்பதையும் சுட்டி காட்டினார்.
ஆழி செந்தில் நாதன் அவர்களும், அவரது தென் மற்றும் வட இந்திய நண்பர்களும் சேர்ந்து “CLEAR - Campagin for Language Equality and Rights” என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறார்கள். இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் மொழி உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுப்பதும், தன்னாட்சியை வென்று எடுக்கவும், மாநில சுய நிர்ணயத்தை மீட்டு எடுக்கவும் அனைத்து தரப்பு மக்களோடு சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றார். இதுப் போன்ற அமைப்புகளுக்கு கட்சிக்கு அப்பாற்பட்டு மாநில உரிமைகள் கருதி அமெரிக்க தமிழர்கள் பங்கு எடுத்து உதவ வேண்டும் எனக் கேட்டு கொண்டார்.
மயிலாடுதுறை சிவா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக