சனி, 6 ஜூலை, 2019

பட்ஜெட்டுக்கு அமெரிக்க கார்ப்பரேட் துறை வரவேற்பு!

பட்ஜெட்டுக்கு அமெரிக்க கார்ப்பரேட் துறை வரவேற்பு!மின்னம்பலம் :
2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று (ஜூலை 5) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு பலதரப்புகளில் எதிர்ப்பும், ஆதரவும் ஒருபுறமிருக்க அமெரிக்க கார்ப்பரேட் துறை ஆதரவளித்துள்ளது. இந்த பட்ஜெட் அனைவருக்குமானதாக இருப்பது மட்டுமல்லாமல் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இருப்பதாக அமெரிக்க கார்ப்பரேட் தொழிற்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இந்திய கூட்டணி மன்றத்தின் தலைவர் முகேஷ் அகி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “பட்ஜெட்டின் அம்சங்கள்
அனைவருக்குமானதாக உள்ளது. கொள்கை முடிவுகள் அமெரிக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளன. ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் நற்செய்திகள் உள்ளன. இந்திய சந்தையை மேலும் வெளிப்படையாக்கி அமெரிக்க நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்க பட்ஜெட் ஊக்குவித்துள்ளது. அதே சமயத்தில் சமூகத்தில் அனைத்து பிரிவினருக்கும் வளர்ச்சியை உறுதி செய்கிறது. கட்டமைப்பு ரீதியாக நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவர பட்ஜெட் முயல்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இந்திய தொழில் குழுவின் தலைவர் நிஷா தேசாய் பிஸ்வால் பேசுகையில், “மோடி அரசின் இரண்டாவது ஆட்சியில் முற்போக்கான, சீர்திருத்த அடிப்படையிலான பட்ஜெட்டை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. உழவர் வருமானத்தை இரட்டிப்பது, அந்நிய நேரடி முதலீட்டை தாராளமயமாக்குவது உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்க இந்திய தொழில் குழு வரவேற்பளிக்கிறது. இந்திய இளைஞர்களுக்கு திறன் பயிற்சியளிப்பது, டேட்டா அனாலிடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, ரொபாட்டிக்ஸ் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகளை வலியுறுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம். சர்வதேச அளவில் இந்தியாவை விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவது அரசின் நீண்டகாலப் பார்வையை பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இந்திய வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் கருண் ரிஷி பேசுகையில், “இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சரிடமிருந்து தொலைநோக்குப் பார்வையுடனான பட்ஜெட் அறிக்கை வெளியாகியுள்ளது. உள்கட்டமைப்பில் முதலீட்டை அதிகரிப்பதால் வேலை உருவாக்கத்தை கூட்டுவது வேலைவாய்ப்புகளில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். 2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் சிமெண்ட், ஸ்டீல் உள்ளிட்ட துறைகளுக்கு மட்டுமல்லாமல் பல முக்கிய துறைகளில் வளர்ச்சிக்கு வித்திடும்” என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச மூலோபாய மற்றும் ஆய்வு மையத்தை சேர்ந்த ரிக் ராசோ பேசுகையில், “பெரிய சிந்தனைகளை நான் எதிர்பார்த்தேன். ஆனால், உள்கட்டமைப்பு மேம்பாடு, ஊரக சமூக திட்டங்களின் விரிவாக்கம் என ஏற்கன்வே இருக்கும் திட்டங்களே தொடர்கின்றன. வெளிநாட்டுத் தொழில்நிறுவனங்களின் பார்வையில், காப்பீடு, ஊடகம், சில்லறை வர்த்தகம் ஆகிய துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகளுக்காக கொண்டுவரப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.
ரசாயனம், மின்னணு பொருட்கள் தயாரிப்புக்குத் தேவையான பொருட்கள் மீது சுங்க வரி குறைக்கப்படவுள்ளது. ஆனால், வாகன பாகங்கள், வீடியோ ரெகார்டர்கள், உலோக பாகங்கள் உட்பட பல துறைகளில் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உருவாகியுள்ள வர்த்தகப் பதற்றத்தை இந்த பட்ஜெட் எந்த வகையிலும் தணிக்காது” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக