திங்கள், 8 ஜூலை, 2019

தேனீ ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு ... EVM இயந்திர மோசடியை ..

பன்னீர் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு!மின்னம்பலம் : வேலூர் தேர்தலை ரத்து செய்தது
போல தேனி மக்களவைத் தேர்தலையும் ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேனி தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 11,73,000. ரவீந்திரநாத் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 5,04,813. இரண்டாவது இடம் பிடித்த இளங்கோவன் 4,28,120 வாக்குகளும், பரிசுப் பெட்டி சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 1,44,050 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவ தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக தேனி தொகுதிக்கு காலி வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி தேனியில் அதிமுக பெற்ற வெற்றியில் சந்தேகம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த நிலையில் ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், தேனி மக்களவைத் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும் தேர்தல் சமயத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மனுதாரர் தனது மனுவில், “வேலூர் தேர்தலை எந்தக் காரணத்தைக் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்ததோ, அதே காரணத்தை தேனி தொகுதியிலும் நடைமுறைப்படுத்தி தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும். அதாவது, வேலூர் தொகுதியில் திமுக ஆதரவாளருக்குச் சொந்தமான இடத்திலிருந்து ரூ.11 கோடி கைப்பற்றப்பட்டதால் அங்கு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று கூறி தேர்தல் ஆணையம் அங்கு தேர்தலை ரத்து செய்தது” என்று குறிப்பிட்டுள்ளவர்,
ஆனால், தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்தின் உறவினர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் ஓட்டுக்கு ரூ.1,000 என வெளிப்படையாகவே பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டனர். இதுதொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியானது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் வழக்கும் தொடர்ந்துள்ளனர். அதேபோல, தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்டிபட்டியிலுள்ள அரசியல் கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடியே 48 லட்சம் ரூபாய் தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. பணத்தைப் பறிமுதல் செய்யச் சென்றபோது கும்பல் ஒன்று அவர்களைத் தாக்கிவிட்டுப் பணத்தை எடுத்துச் செல்ல முற்பட்டதால் வானத்தை நோக்கி ஐந்து ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “வேலூர் தொகுதியைப் போல தேனி தொகுதியிலும் பணம் கைப்பற்றப்பட்டதால் அங்கும் தேர்தல் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடக்க வாய்ப்பில்லாமல்தான் இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையமோ ஒருதலைபட்சமாகச் செயல்பட்டு வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தலை ரத்து செய்துவிட்டது. அதிகார மையத்திற்குக் கட்டுப்பட்டு தேனி தொகுதியில் தேர்தலை நடத்தியது முறைகேடாகும். எனவே தேனி மக்களவைத் தொகுதிக்கு நடந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் தேனி தேர்தலை ரத்து செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்யவுள்ளார். இந்த இரு மனுக்களும் விசாரணைக்கு வரும் பட்சத்தில் தமிழக அரசியலில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக