ஞாயிறு, 21 ஜூலை, 2019

செயற்கைச் சிறுநீரகம் கண்டுபிடிப்பு.. அடுத்த ஆண்டில் இது சந்தைக்கு வரும்?

பாண்டியன் சுந்தரம் : சிறுநீரக நோயாளிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி... செயற்கைச் சிறுநீரகம் கண்டுபிடிப்பு!
இந்தியாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடங்கி 50 ஆண்டுகள் ஆகி விட்டது.ஆனாலும் இந்த சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் கிடைக்க வழியில்லை.
நடைமுறையில் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் பேருக்குச் சிறுநீரகம் தேவைப்படுகிறது.ஆனால் 7,500 பேருக்குத் தான் சிறுநீரகம் கிடைக்கிறது.
இந்தச் சூழலில் அமெரிக்காவில் செயற்கைச் சிறுநீரகம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக ஒரு புதிய செய்தி வந்துள்ளது.இது நடைமுறைக்கு வருமானால் லட்சக்கணக்கான சிறுநீரக நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக அறிவியலாளர்கள் இதைக் கண்டு பிடித்து உள்ளனர்.சிலிக்கான் நானோ தொழில்நுட்பத்தில் இது இயங்குகிறது.

இதில் மின் வயர்கள், பேட்டரி என்று எதுவுமில்லை.அலைபேசி பேட்டரி அளவில் உள்ள இந்தக் கருவியை நோயாளியின் வயிற்றில் பதித்து, ஒரு முனையை அவரது ரத்த ஓட்டத்திலும் மறுமுனையை சிறுநீர்ப்பையுடனும் இணைத்து விடுகின்றனர்.இரத்த அழுத்தம் தரும் விசையில் இது இயங்குகிறது.
இதில் இரு பகுதிகள் உள்ளன. '‌ஹீமோஃபில்டர்' எனும் இரத்த வடிகட்டி இரத்தத்தில் இருக்கும் அசுத்தங்களை முதலில் பிரித்து எடுத்து விட்டு, அதனோடு இணைந்த'பயோரியாக்டர்' எனும் பகுதிக்கு அதை அனுப்பி விடுகிறது.இதில் ஆய்வுக்கூடங்களில் வளர்க்கப்பட்ட சிறுநீரக செல்கள் இருக்கின்றன.அவை அந்த இரத்தத்தில் இருந்து உடலுக்குத் தேவையான நீர், குளுக்கோஸ், சில உப்புகளை மீண்டும் உடலுக்குள் கொண்டு சென்று விடுகின்றன.மிச்சமுள்ளதை மட்டும் சிறுநீர்ப்பைக்கு அனுப்பி சிறுநீராக வெளியேற்றுகின்றன.
பொதுவாக செயற்கைச் சிறுநீரகம் போன்ற கருவிக்குள் இரத்தம் செல்லும் போது உறைந்து விடும்‌.இதுவரை இதுதான் இந்தக் கண்டுபிடிப்பில் பெரிய பிரச்சினையாக இருந்தது.இப்போது வந்துள்ள சிலிக்கான் நானோ தொழில்நுட்பம் இந்தச் சிக்கலைத் தீர்த்து உள்ளது.இந்தப் புதிய கருவியில் இரத்தம் உறைதல் இல்லை என்பது முக்கியமான திருப்பம்.
இதுவரை இந்தக் கருவி பொருத்தப்பட்ட அனைவரும் நலமாக உள்ளனர்.அடுத்த ஆண்டில் இது சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது நிஜமானால்
நாட்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு ஆயுளை நீட்டிக்கும் அற்புதமான கண்டுபிடிப்பாக இது இருக்கும்.
-டாக்டர் கு.கணேசன்,இந்து தமிழ் திசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக