வெள்ளி, 5 ஜூலை, 2019

ராகுல் காந்தி : நாட்டுக்கு அபாயம் ஆரம்பிக்கிறது. இந்தியாவில் தேர்தல் என்பது இனி வெறும் சடங்கு தான்!


A Sivakumar : "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகவேண்டியது மட்டும் தான் இன்னும் மிச்சமிருக்கிறது" என்ற எளிய கருத்தை தான் தன் மிக நீண்ட அறிக்கையில் தெளிவாக சொல்லியிருக்கிறார் ராகுல்.
- சுயநலமிக்க உட்கட்சி தலைவர்கள்,
- அதிகாரவெறிக்கும், பதவி ஆசைக்கும் பலியாகி கூட்டணிக்கு ஒத்திசையாத பிற கட்சி தலைவர்கள்,
- அர்ப்பணிப்பும் உழைப்பும் செலுத்தாத சொந்த கட்சியினர்,
என அனைவரையும் தன் பண்புமிகுந்த ஒற்றை அறிக்கையில் விளாசியிருக்கிறார்.

தேர்தல் முடிவுகளுக்கு பின் அமைதியாகிவிட்ட அனைத்து தலைவர்களும் இவ்விஷயத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்படவேண்டியவர்கள் என்பதை தான் அவர் சொல்லியிருக்கிறார்.
இந்த சூழ்நிலையிலும் நிதானத்தை இழந்து அதை தன் அறிக்கையில் வெளிக்காட்டிவிடாமல் மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கும் அவர் பண்பு போற்றத்தக்கது.

//
2019ல் ஓர் அரசியல் கட்சியை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக இயங்கிய ஒட்டுமொத்த இந்திய அரச கட்டமைப்பையே நாங்கள் எதிர்த்தோம். அரசு அமைப்புகளின் நடுநிலைத் தன்மை இனியும் இந்தியாவில் இல்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது.
இந்திய அரசின் அமைப்புகளை கைப்பற்றும் ஆர்.எஸ்.எஸ்-இன் திட்டம் ஈடேறியுள்ளது. நமது ஜனநாயகம் பலவீனமாகியுள்ளது. இனி தேர்தல்கள் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக அல்லாமல் வெறும் சடங்காக மாறிவிடும்.
இந்தியாவில் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது கற்பனை செய்ய இயலாத அளவுக்கு வன்முறை மற்றும் வலி மிகுந்ததாக இருக்கும்.
என்னுடைய போராட்டம் அரசியல் அதிகாரத்துக்கானது அல்ல. எனக்கு பாஜக மீது வெறுப்போ கோபமோ இல்லை. ஆனால் என் உடலின் ஒவ்வொரு அணுவும் இயல்பூக்கமாகவே பாஜகவின் இந்திய என்ற கருத்தை எதிர்க்கிறது. ஏன் இந்த எதிர்ப்பு எழுகிறது என்றால் என்னுடைய இருப்பே இந்தியன் என்ற கருத்தில் வியாபித்திருக்கிறது. இது அவர்களுடைய கருத்துடன் நேரடியாகவே மோதல் கொள்கிறது. இது ஒன்றும் புதிய போர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளாக நம் மண்ணில் நடப்பது தான்.
எங்கு அவர்கள் வித்தியாசத்தை காண்கிறார்களோ அங்கு நான் ஒற்றுமையை காண்கிறேன். எங்கு அவர்கள் வெறுப்பை காண்கிறார்களோ அங்கு நான் அன்பை காண்கிறேன். அவர்கள் எதை கண்டு பயப்படுகிறார்களோ நான் அதை ஆரத்தழுவுகிறேன்.
பிரதமர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் இவர்கள் பிடித்து வைத்திருக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்து நான் தனிமனிதனாக போராடினேன். சில நேரங்களில் நான் தனித்து விடப்பட்டேன். ஆனால் அதற்காக நான் பெருமைப்படுகிறேன்.
சுதந்திரமான நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கான நாட்டில் நடுநிலையான அமைப்புகள் தேவை. நடுநிலையாளர்கள், ஊடக சுதந்திரம், சுதந்திரமான நீதித்துறை, தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை ஆகியவை இல்லாமல் ஒரு தேர்தல் நியாயமானதாக இருக்க முடியாது. அது போல ஒரு கட்சி மட்டும் நிதி ஆதாரங்களில் ஏகபோக உரிமையுடன் செயல்படுவதும், நியாயமான தேர்தலாக இருக்க முடியாது.
இந்த நாட்டின் மதிப்பு மிக்க அமைப்புகளை கைவசப்படுத்துவது என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குறிக்கோள் பூர்த்தியடைந்துவிட்டது. நம் ஜனநாயகம் அடிப்படை அமைப்பிலேயே பலவீனப்படுத்திவிட்டது. இப்போதிலிருந்து தான் அபாயம் ஆரம்பிக்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பது இனி வெறும் சடங்கு தான்.
- ராகுல் காந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக