புதன், 10 ஜூலை, 2019

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் பதற்றம் தணியவில்லை.

வர்த்தகப் போரை மீண்டும் இழுக்கும் டொனால்டு ட்ரம்ப்மின்னம்பலம் : அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உருவாகியுள்ள வர்த்தகப் பதற்றங்களுக்கு இடையே அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தச் சந்திப்பில் வர்த்தகச் சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜி20 மாநாட்டுக்குப் பிறகு இந்தியாவுடனான வர்த்தக சிக்கல்கள் குறித்து டொனால்டு ட்ரம்ப் விமர்சனங்களை முன்வைக்காத நிலையில் தற்போது மீண்டும் விமர்சித்துள்ளார்.
நேற்று (ஜூலை 9) டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீண்டகாலமாக அமெரிக்க தயாரிப்புகள் மீது இந்தியா அதிக வரிகளை விதித்து வருகிறது. இதையெல்லாம் மேலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார். ஜி20 மாநாட்டுக்கு முன் இதே குற்றச்சாட்டை இந்தியா மீது டொனால்டு ட்ரம்ப் முன்வைத்திருந்தார்.

ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா பல ஆண்டுகளாக அமெரிக்கப் பொருட்கள் மீது அதிக வரிகளை விதித்து வருகிறது. அண்மையில்கூட வரிகளை மேலும் உயர்த்தியுள்ளது இந்திய அரசு. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. வரிகளை இந்தியா திரும்பப்பெற வேண்டும். இதுகுறித்து பிரதமர் மோடியிடம் பேச காத்திருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகப் போர் கடுமையாகச் சூடுபிடித்துள்ளது. இரு நாடுகளும் ஒருவர் மீது மற்றொருவர் வரிகளை உயர்த்தி வருகின்றனர். ஜி20 மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இரு நாடுகளும் வரி விதிப்பதை நிறுத்திக்கொண்டன.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் போரால் இந்தியா உட்பட சில நாடுகள் பயனடையக்கூடும் என்று ஐநாவே அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், இந்தியாவையும் குறிவைத்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் டொனால்டு ட்ரம்ப். ஆக, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகப் போர் தணிந்திருப்பதாகத் தெரிந்தாலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகப் பதற்றம் தணிந்ததாகத் தெரியவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக