வியாழன், 11 ஜூலை, 2019

கேரள கம்யுனிஸ்டுகளின் ராமநாம சங்கீர்த்தனத்துக்கு தமிழக தோழர்களுக்கும் அழைப்பு....?

LRJ : சென்ற ஆண்டு இதே நாளில் எழுதியது என்று Facebook நினைவூட்டுகிறது.
ஓராண்டுக்குப்பின்னும் CPM கட்சி எந்தவிதத்திலும் மாறவில்லை; தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதற்கான சாட்சியே உயர்ஜாதிகளுக்கான 10% இட ஒதுக்கீட்டை அது விழுந்து விழுந்து ஆதரித்துக் கொண்டிருப்பது.
கேரள காம்ரேடுகள் நடத்தப்போகும் ராமநாம சங்கீர்த்தனத்துக்கு தமிழக காம்ரேடுகளுக்கு அழைப்புண்டா? ஜீவா காலத்திலிருந்தே ராம பஜனை செய்தவர்கள்; கலியுக ராமனான எம் ஜி ராமச்சந்திரனை தமிழக முதல்வராக்க ஓயாமல் உழைத்தவர்கள்; அவரை பல்லாக்கில் சுமந்தவர்கள்; அதன் பரிணாம வளர்ச்சியாக பாரம்பரிய வைஷ்ணவரான விஜயகாந்த் வடிவில் ராமனை சேவித்து அவரையும் தமிழக முதல்வராக்க பாடுபட்டவர்கள்; ராம சேவை செய்வதில் இத்தனைதூரம் அனுபவமிக்க தமிழக காம்ரேடுகளை கேரள சேட்டன்கள் புறக்கணிக்கக்கூடாது. ஒருவேளை தமிழக காம்ரேடுகளுக்கு சமஸ்கிரதம் தெரியாது என்பது காரணமானால் சென்னை சபாக்கள் நடத்தும் கர்நாடக கச்சேரிகளில் கட்டக்கடைசியாக தமிழுக்கு ஒதுக்கப்படும் துக்கடா பாடல்கள் என்கிற இடத்தையாவது கேரள காம்ரேடுகள் தமிழக தோழர்களுக்கு ஒதுக்கியருள வேண்டும். 

தமிழக இடதுசாரிகளின் தொழிற்சங்கங்கள் வேண்டுமானால் பலமிழந்து போயிருக்கலாம். ஆனால் அவர்களின் கலை இலக்கிய அமைப்பான தமுஎகச (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம்) நல்ல வலுவோடு இருக்கிறது. ராமாயணத்தின் கம்யூனிஸ கூறுகளை கண்டுபிடித்து நாடகமாக, பாட்டாக, பட்டிமன்றமாக, மேடைப்பேச்சாக சும்மா பொளந்து கட்டக்கூடிய வீரியமிக்க இலக்கிய கர்த்தாக்கள், கலைஞர்கள் தமிழக சிபிஎம் கட்சியில் இன்னமும் ஏராளம் இருக்கிறார்கள். ராமச்சந்திர மூர்த்தியை தொழுவதில் ஆர் எஸ் எஸ்சுக்கும் அத்வானிக்குமே வழிகாட்டியாய் இருந்த தமிழக காம்ரேடுகளை சேட்டன்கள் புறக்கணிக்கலாகாது என்பதை கூறிக்கொண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக