வியாழன், 25 ஜூலை, 2019

விஸ்வரூப வேலுமணி- அலர்ட் ஆகும் எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: விஸ்வரூப வேலுமணி-  அலர்ட் ஆகும் எடப்பாடி மின்னம்பலம்:  மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் கோயமுத்தூர் லொக்கேஷன் காட்டியது.
“சென்னையிலிருந்து சேலம் செல்லும்போதெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை வரை விமானத்தில் செல்வார். அங்கிருந்து புறப்படும்போதும் கோவை வந்துதான் சென்னைக்கு விமானம் ஏறுவார். இந்த நேரங்களில் சிஎம் ஏர்போர்ட் வந்துவிட்டாரா என்று கோவை பத்திரிகையாளர்களிடம் கேட்டால், அவர்கள் திருப்பிக் கேட்கும் கேள்வி, ‘எந்த சி எம்? கொங்கு சிஎம்மா? தமிழக சி எம் மா? ’ என்பதுதான். தமிழ்நாட்டுக்கு ஒரு சிஎம் தானே என்று கேட்டால், கோவைக்கு முதலில் எஸ்.பி. வேலுமணிதான் சி.எம். அடுத்துதான் எடப்பாடி பழனிசாமி என்று உடனடியாகச் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் ஆளுமையும் ஆதிக்கமும் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் கோவை வட்டார அதிமுகவினரும்.
தனது பிரதிநிதியாக டெல்லி செல்லும் அமைச்சர் வேலுமணி, அங்கே பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவிடம் தனிப்பட்ட முறையில் தொடர்புகளை வளர்த்துக் கொண்டு. பாஜகவில் கூட சேர்வதற்கு தயாராக தனி ஆவர்த்தனம் செய்து வருவதாக முதல்வர் எடப்பாடி ஆதங்கப்படுகிறார் என்ற செய்தி வேலுமணியா இப்படி? எடப்பாடி ஆதங்கம்என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் ஏற்கனவே வெளிவந்திருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக, முதல்வர் எடப்பாடியை விட அதிமுகவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறார் எஸ்.பி. வேலுமணி என்கிற தகவல்கள் கோவை முதல் சென்னை வரை பறந்து கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் மழை நீரை சேமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ‘நான் உங்கள் வேலுமணி பேசுகிறேன்’ என்ற விளிப்போடு நீர்வளம் என்ற தலைப்பில் வேலுமணி மக்களுக்கு எழுதிய கடிதம் 22 ஆம் தேதியில் இருந்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் பரவி வருகிறது. இதில் வேலுமணியின் படம் மட்டுமே மேலே இடம்பெற்றுள்ளது. கீழே பச்சை நிற கையெழுத்திருக்கிறது. ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என வேறு யாரின் புகைப்படங்களும் இல்லாத வேலுமணியிடன் புகைப்படம் மட்டுமே கொண்ட இந்த கடிதத்தைப் பார்த்தவுடனே
தலைமைச் செயலகத்திலிருந்து சிலர், கோவைக்கு தொடர்பு கொண்டு கோவை அதிமுக ஐடி விங்கில் இது தயாரிக்கப்பட்டதா என்று கேட்டிருக்கிறார்கள். ‘இங்கே தயாரிக்கப்படவில்லை. அனேகமாக வேலுமணிக்கென்று சென்னையில் இருந்து செயல்படும் ஸ்பெஷல் டீமின் ப்ராஜக்டாக இருக்கும்’ என்று பதில் சொல்லியிருக்கிறார்கள். நீர் வளம், THE WATRE WISE என்ற தலைப்பில் இதுபோல வேலுமணியை முன்னிலைப்படுத்தி இன்னும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன என்றும் கோவையில் இருந்து சென்னைக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். இது எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
அடுத்து கோவை மாவட்டத்தில் ஜூலை 23 ஆம் தேதி தமிழக அரசின் இலவச மடிக் கணினிகள் வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் வேலுமணிதான் மாணவர்களுக்கு மடி கணினிகளை வழங்கினார். அந்த விழா மேடையில் எடப்பாடி, ஓ.பன்னீர் ஆகியோரின் படங்கள் ஒரே அளவிலும் அவர்களை விட பெரியதாக வேலுமணி படமும் அச்சிடப்பட்டிருந்தன. இவர்களைத் தாண்டிய பெரிய அளவில் ஜெயலலிதா படமும் இடம் பெற்றிருக்கிறது.
தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் இலவச மடிக் கணினிகளை வழங்கி வருகிறார்கள். செங்கோட்டையன் போன்ற சீனியர் அமைச்சர்களில் இருந்து உடுமலை ராதாகிருஷ்ணன், தர்மபுரி கே.பி. அன்பழகன், திருவாரூர் காமராஜ் என்று பல்வேறு அமைச்சர்கள் மடிக்கணினி வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி படத்தைதான் பெரிய அளவில் அச்சிட்டிருக்கிறார்கள். பலரும் ஓபிஎஸ் படம் கூட போடவில்லை. ஆனால் கோவையில் நடந்த மடிக்கணினி விழாவில் எடப்பாடி, ஓபிஎஸ் இருவரது படங்களையும் ஒரே அளவில் அச்சிட்டுவிட்டு அவர்களை விட பெரியதாக வேலுமணி படம் அச்சிடப்பட்டிருக்கிறது. இதுவும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
இதுபற்றியெல்லாம் கோவை அதிமுகவினரிடத்தில் பேசுகையில், ‘எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கலாம். ஆனால் அவர் முதல்வராக இருப்பதற்காக தளபதியை போல செயல்பட்டுக் கொண்டிருப்பவர் வேலுமணிதான். கோவை விமான நிலையத்தில் முதல்வர் பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்துக் கொண்டிருப்பார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே வேலுமணி ஒரு சைகை செய்வார். அதற்கு மேல் எடப்பாடி பேசமாட்டார். பிரஸ் மீட் அவ்வளவுதான். அதேபோல கொங்குமண்டலத்தில் இருக்கும் பிற அமைச்சர்கள் அனாவசியமாக கோவை வரமாட்டார்கள். அப்படி துறை ரீதியாக வந்தாலும் அரசியல் பேசமாட்டார்கள்.
இதுமட்டுமல்ல, எடப்பாடியிடம் சொல்லி, முடிக்க முடியாத விஷயங்கள் கூட வேலுமணியிடம் கூறினால் முடிந்துவிடுகின்றன. உதாரணத்துக்கு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது தினகரனுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடதாக காவேரி நியூஸ் சேனல் அரசு கேபிளில் இருந்து அகற்றப்பட்டது. அதை மீண்டும் அரசு கேபிளுக்குள் கொண்டுவருவதற்கு சேனல் சார்பில் பல முயற்சிகள் எடுத்தார்கள். எடப்பாடி வரைக்கும் சென்று கூட முடியவில்லை. அப்போதுதான் சிலர், வேலுமணியைப பார்த்தீர்களென்றால் மேட்டர் முடியும் என்று சொல்ல, அதையடுத்து வேலுமணியிடம் முறையிட்டிருக்கிறார்கள். அதன் பின்னரே காவேரி நியூஸ் அரசு கேபிளுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல அண்மையில் சட்டமன்றம் நடக்கும்போது உள்ளாட்சித் துறை பற்றி சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியிட்டதாக சத்யம் டிவி அரசு கேபிளில் இருந்து அகற்றப்பட்டிருக்கிறது. ஆக அரசு கேபிள் டிவியில் ஒரு சேனலை சேர்ப்பதா, வேண்டாமா என்பதைக் கூட வேலுமணிதான் முடிவு செய்கிறார். நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் முதல்வருக்கு அடுத்தபடியாக அதிக நேரம் பேசிய அமைச்சர் வேலுமணிதான். இதையெல்லாம் விட கொங்கு மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கும் அதிமுக எம்,.எல்.ஏ.க்கள் பெரும்பாலானோர் எடப்பாடியை விட வேலுமணியிடமே அதிக தொடர்பில் இருக்கிறார்கள் ’ என்கிறார்கள் கோவை அதிமுகவினர்.
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை விட வேலுமணியை கொங்கு மண்டலத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுமைக்கும் முக்கிய ஆளுமையாக அடையாளப்படுத்தவும் ஜோதிடர்கள், மக்கள் தொடர்பு நிபுணர்களின் ஆலோசனைப்படி வேலுமணி வட்டாரத்தில் வேலைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. இந்தத் தகவல்கள் அத்தனையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே வேலுமணி பற்றி தான் சொன்ன விஷயங்களை நினைவுகூர்ந்த எடப்பாடி, வேலுமணி தொடர்பான மற்ற விவரங்களையும் கேட்டிருக்கிறார் என்கிறார்கள்” என்ற மெசேஜை செண்ட் செய்துவிட்டு ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக