சனி, 20 ஜூலை, 2019

துரைமுருகனுக்கு திமுக தந்த அதிர்ச்சி - வேலூர் திருப்பம்!

டிஜிட்டல் திண்ணை:  துரைமுருகனுக்கு திமுக தந்த அதிர்ச்சி - வேலூர் திருப்பம்!மின்னம்பலம் :
மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை இன்றிலிருந்து எல்லா சாலைகளும் வேலூரை நோக்கியே செல்கின்றன. பொதுத் தேர்தலின் போது ரத்து செய்யப்பட்டு, ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடக்க இருக்கும் வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக நேரடியாகக் களம் காண்கின்றன. திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் நிற்கிறார். அதிமுக சார்பில் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறார்.
இன்று (ஜூலை 20) சட்டமன்றத்தின் கடைசி நாள். அதிமுக, திமுக இரு கழக எம்.எல்.ஏ.க்களும் மதியத்தில் இருந்தே வேலூருக்குப் புறப்படத் தொடங்கிவிட்டார்கள். துரைமுருகன் இன்று மதியமே கிளம்பிவிட்டார். கிளம்பும் வரைக்கும் கண்ணில் தென்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களிடமெல்லாம், எப்பய்யா தொகுதிக்கு வர்றே? உன்னைதான்யா நம்பியிருக்கேன் என்றுதான் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

இப்போதல்ல... ஜூலை 15 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் ஸ்டாலின் கிளம்பிப் போன பின், அன்பகத்தில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரையும் தனித்தனியாகப் பார்த்து பேசியிருக்கிறார் துரைமுருகன். சிலரிடம் உரிமையாகவும், சிலரிடம் உருக்கமாகவும், சிலரிடம் உத்தரவு தொனியிலும் தத்தமது பழக்கத்துக்கேற்ப பேசியுள்ளார் துரைமுருகன். அதன் பின் சட்டமன்றத்திலும், ‘என்னய்யா.... உனக்கு 5 வார்டு ஒதுக்கியிருக்கேன்யா... நீதான் செலவு பண்ணனும். வந்துடு’ என தன் மகனுக்காக துரைமுருகன் இதுவரை இல்லாத அளவுக்கு இறங்கிப் பேசிவந்திருக்கிறார்.
அதற்கும் காரணம் இருக்கிறது. பொதுத் தேர்தல் முடிந்து திமுக மாவட்டச் செயலாளர்களெல்லாம் கை காய்ந்து போயிருக்கும் நிலையில் வேலூர் மக்களவைத் தேர்தலுக்காகச் செலவு செய்ய பல மாவட்டச் செயலாளர்கள் தயாராக இல்லை. பணம் கூட பரவாயில்லை, ஆனால் துரைமுருகனிடம் தாங்கள் பட்ட அனுபவத்தை எண்ணியே பலரும் துரைமுருகன் மகனுக்கு வேலை செய்வதை முழுமனதோடு விரும்பவில்லை. நேற்று கூட கதிர் ஆனந்த் வேட்பு மனு நிறுத்திவைப்புனு செய்தி வந்தவுடனே திமுக மாவட்டச் செயலாளர்கள் சிலர் தங்கள் நண்பர்களுக்கு போன் போட்டு, ‘ஏண்ணே... கதிர் ஆனந்த் மனுவை தள்ளுபடி பண்ணிடுவாங்களா?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு துரைமுருகன் மீது அவர்களுக்கு என்ன அதிருப்தி?
‘ஆட்சியில இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி. கட்சிக்காரனுக்காக ஒரு துரும்பைக் கூட துரைமுருகன் கிள்ளிப் போட்டதில்ல. அவர் மந்திரியா இருக்கும்போது அவரோட துறை ரீதியாக உதவி கேட்டு போனா கூட ரொம்ப எகத்தாளம் பண்ணுவாரு. பல முறை கலைஞர்கிட்ட பல பேரை போட்டுக் கொடுத்திருக்காரு. அதனால துரைமுருகனுக்கு உடல் உழைப்பையும் பணத்தையும் சேர்த்துக் கொட்ட பல மாவட்டச் செயலாளர்கள் தயாரா இல்ல. ஆனாலும் தலைவர் ஸ்டாலின் சொல்லிட்டாரு இது கௌரவப் பிரச்சினைனு அதனாலதான் வேலூர் கிளம்பறோம். இந்த 15 நாளுக்கு ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் தங்களோட டீமுக்கான சாப்பாட்டு செலவு, தங்குற, இத்யாதி செலவுகளே 5 லேர்ந்து பத்து லட்சம் ரூபாய் வரைக்கும் ஆயிடும். இதெல்லாம் அவரா கொடுப்பாரு? ’ என்று சட்டமன்ற வளாகத்தில் புலம்பிக் கொண்டிருந்தார் துரைமுருகனுக்கு கை கொடுத்து அனுப்பிவிட்டு வந்த திமுக எம்.எல்.ஏ. ஒருவர்.
இது ஒருபக்கம் என்றால், பொதுத் தேர்தலின் போதும் வேலூர் தொகுதிக்குக் கட்சியிலிருந்து பெரிய அளவுக்கு பண உதவி செய்யவில்லை. விஐபி வேட்பாளர்கள் அவர்களே செலவு செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கை முடிவின்படி கட்சித் தலைமை நிதியளிக்கவில்லை. எனவே இம்முறை எப்படியும் தலைமை நிதி கொடுக்கும் என்று எண்ணியிருந்தார் துரைமுருகன். ஆனால் சில நாட்களுக்கு முன் தலைமையால் தேர்தல் நிதி அளிக்க இயலாது என்பதை ஸ்டாலினே துரைமுருகனிடம் ஒரு வழியாகச் சொல்லிவிட்டார். இதனால் சில தினங்களாகவே அப்செட்டாகியிருக்கும் துரைமுருகன், தனக்கு நெருக்கமான வேலூர் மாவட்டச் செயலாளர்களான காந்தி, நந்தகுமார் ஆகியோரிடம் வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த நிதிப் பிரச்சினைக்கிடையே மாவட்டச் செயலாளர்கள் தன் மீது வைத்திருக்கும் அதிருப்தியும் அரசல் புரசலாக துரைமுருகனின் கவனத்துக்குப் போயிருக்கிறது. அதைக் கேட்டு அதிர்ந்துவிட்டார். ‘கூட்டத்தோட கோவிந்தா மாதிரி பொதுத்தேர்தலோடு நடந்திருந்தா பிரச்சினையே இல்ல. இப்ப தனியா வந்து மாட்டிக்கிட்டோம். முதலியார் வேற கோடி கோடியா கொட்டிக்கிட்டிருக்கார்’ என்று சொல்லி சில முக்கிய மாவட்டச் செயலாளர்களிடம் சமரசமும் பேசிக் கொண்டிருக்கிறார்.
துரைமுருகனை ரவுண்டு கட்ட மாவட்டச் செயலாளர்கள் தயாராகி வருகிறார்கள் என்ற செய்தி திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் போயிருக்கிறது. ஆனாலும் தேர்தல் வேலைகளைக் கண்காணிக்கும்படி பொறுப்பாளர்களிடம் கண்டிப்பாகக் கூறியிருக்கிறார் ஸ்டாலின்.
திமுகவுக்குள் நிலவும் இந்த பூசல்களை அறிந்து அதிமுக இப்போதே தனது பணியை உற்சாகமாகத் தீவிரப்படுத்தியிருக்கிறது. ஆளுங்கட்சி கோதாவில் அமைச்சர்களும், ஏ.சி. சண்முகமும் கொட்டப் போகும் கோடிகளில் வேலூர் என்னாகுமோ என்ற டென்ஷனில் இருக்கிறார் துரைமுருகன்” என்ற செய்திக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக