திங்கள், 8 ஜூலை, 2019

முகிலன் : நிறைய ஊசிகள் போட்டார்கள் ..பத்திரிக்கையாளர்கள்,தமிழக மக்களால் தான் உயிரோடு இருக்கிறேன்

மின்னம்பலம் : எனக்கு நடந்தது என்ன?: முகிலன்சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்குச் சிகிச்சை அளிக்க நீதிபதி பிறப்பித்த உத்தரவையடுத்து அவர் கீழ்பாக்கத்தில் உள்ள கைதிகள் அனுமதிக்கப்படும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கடத்தப்பட்டதற்குப் பின்னணியில் ஸ்டெர்லைட் நிறுவனமும், காவல்துறையும் இருப்பதாகப் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த முகிலன், அதன் பிறகு எங்குச் சென்றார் என்பதைக் கண்டறிய முடியாமல் இருந்தது. இந்நிலையில் 140 நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் அவர், திருப்பதியில் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே சென்னை அழைத்து வரப்பட்ட அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு அதனை வீடியோ மூலம் பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் வழக்கில் அவரை கைது செய்தனர்.

இதையடுத்து எழும்பூர் குற்றவியல் பெருநகர 2ஆவது நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ரோஸ்லின் துரை வீட்டில் இரவு 1 மணி அளவில் முகிலனை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது தனக்கு மனநிலை சரியில்லை என்று தெரிவித்திருக்கிறார் முகிலன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின், முகிலனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார். மாஜிஸ்திரேட்டு உத்தரவைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் முகிலனை கீழ்பாக்கத்தில் உள்ள கைதிகள் அனுமதிக்கப்படும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் இன்றும் முகிலன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடக்கூடாது எனக் கூறி தன்னை துன்புறுத்தியதாகவும், அதற்கு படியாததால் நிறைய ஊசிகளை போட்டதாகவும், பத்திரிக்கையாளர்கள்,தமிழக மக்களால் தான் இதுவரை தான் உயிரோடு இருப்பதாகவும் ” தெரிவித்தார். ”தன்னை கடத்தி துன்புறுத்தியது ஸ்டெர்லைட் நிர்வாகமும், காவல்துறையும் தான் காரணம், தனது மனைவி, மகன் உயிரோடு இருப்பதே தற்போதுதான் தெரியும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக