செவ்வாய், 2 ஜூலை, 2019

வைகோ- நாடாளுமன்றம் செல்ல வழிவிடுமா நீதிமன்றம்?

மின்னம்பலம் :  டிஜிட்டல் திண்ணை: வைகோ-  நாடாளுமன்றம் செல்ல  வழிவிடுமா நீதிமன்றம்?மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும், வாட்ஸ் அப்பில் சில போட்டோக்கள் வந்து விழுந்தன. மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ( ஜூலை 2) உயர் நிலைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட படங்கள்தான் அவை. கொஞ்ச நேரத்தில் செய்தி வந்தது.
“மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்வரும் ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தின் நான்கு, ஐந்தாவது தீர்மானங்களாக ‘நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் அளிக்கப்படும் என்று தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, தமிழகத்தில் ஜூலை மாதம் நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்த தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழகத்தில் 2019 ஜூலை 18ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் வேட்பாளராகப் போட்டியிடுவது என்று கழகத்தின் உயர்நிலைக் குழு, ஆட்சிமன்றக் குழு, மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது’ என்பதுதான் அந்தத் தீர்மானம்.
. திமுகவில் இருந்தபோது 1978 ஆம் ஆண்டு முதல் 1996 வரை தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி.யாக மூன்று முறை அனுப்பப்பட்டார் வைகோ. தன் பேச்சின் மூலம் இந்தியாவின் முக்கியத் தலைவர்களைக் கவர்ந்தார். அப்போது தனக்கு ஏற்பட்ட இந்திய அளவிலான தலைவர்களின் தொடர்புகளை இன்று வரை காத்து வருகிறார் வைகோ. கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் வைகோவின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி செல்ல, ‘மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்... என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் எங்கே செல்கிறீர்கள்?’ என்று ராஜீவையே மிரள வைத்தவர் வைகோ. 1998 முதல் 2004 வரை சிவகாசி மக்களவை உறுப்பினராக வென்ற வைகோ, நாடாளுமன்றத்துக்குள் போய் 15 வருடங்கள் ஆகிறது.
இந்த நிலையில்தான் கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் ஏற்பட்ட கூட்டணி ஒப்பந்தப்படி மீண்டும் ராஜ்யசபாவுக்கு செல்லத் தயாராகிவிட்டார் வைகோ. ’டைகர் ஈஸ் பேக்’ என்ற ஹேஷ் டேக்குகளை மதிமுகவினர் இணையத்தில் உற்சாகமாகப் பரப்பி வருகிறார்கள்.
ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூலை 8 ஆம் தேதி கடைசி நாள் என்ற நிலையில், ஜூலை 5 ஆம் தேதி வைகோ மீதான தேச துரோக வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம். முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளும் இந்த நீதிமன்றத்திலேயே நடைபெற்று வருகின்றன.
இந்த நீதிமன்றத்தில்தான் வைகோ மீதான தேச துரோக வழக்கு நடந்து வருகிறது. 2009 ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில், ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துகளைப் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்டு தேச துரோக வழக்குத் தொடுக்கப்பட்டது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் அமைக்கப்பட்ட பின் இந்த வழக்கு இந்த நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
நீதிபதி சாந்தி விசாரித்து வரும் இந்த வழக்கில் கிட்டத்தட்ட அனைத்து வாய்தாக்களிலும் ஆஜரான வைகோ கடந்த ஜூன் 17 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானபோது ஒரு சுய விளக்கத்தை அளித்தார்.
அதில், ‘சென்னை அண்ணா சாலை, இராணி சீதை அரங்கில் நடைபெற்ற குற்றம் சாட்டுகிறேன் என்ற நூல் வெளியீட்டு விழாவில், நான் பேசியது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், நான் பேசியதற்கான காணொளியோ, ஒலிப்பதிவு ஆவணங்களோ சுருக்கு எழுத்தாளர் பதிவுகளோ, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்தியப் பிரதமரைக் குற்றக் கூண்டில் நிறுத்துவோம் என்று பேசவில்லை. இலங்கையில் ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும், ஒவ்வொரு தமிழச்சியின் சாவுக்கும், ராஜபக்சேதான் பொறுப்பு. அவரை, சர்வதேச நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்துவோம் என்று பேசினேன். ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்திய அரசின் அணுகுமுறைகள், நடவடிக்கைகளை விமர்சித்துப் பேசினேன். இந்திய அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய பேச்சின் நோக்கம் ஆகும்’ என்று குறிப்பிட்ட வைகோ மேலும்,
‘2008 அக்டோபர் 21 அன்று, I Accuse என்ற ஆங்கிலப் புத்தகத்தை இராஜா அண்ணாமலை மன்றத்தில் வெளியிட்டுப் பேசியதற்காக, இந்திய தண்டனை சட்டம் 124 ஏ, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 13 (1) (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் என் மீது மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில், என்னுடைய பேச்சின் காணொளி, ஒலிப்பதிவு ஆவணங்கள் தரப்பட்டன. சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். முழுமையான விசாரணை நடைபெற்றது. அந்த வழக்கில், நான் விடுதலை செய்யப்பட்டேன். ராஜா அண்ணாமலை மன்றத்தில் பேசிய கருத்துகளைத்தான், இராணி சீதை அரங்கிலும் பேசி இருக்கின்றேன். அதற்காகத்தான் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய பேச்சு, இந்திய அரசுக்கு எதிராக பகைமையையே வெறுப்பு உணர்வையோ தூண்டுகின்ற வகையில் அமைந்தது அல்ல. என்னுடைய பேச்சால், எந்தவிதமான சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளும் ஏற்படவில்லை. பொது அமைதிக்குக் குந்தகம் எதுவும் ஏற்படவில்லை’ என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்த விளக்கத்துக்குப் பிறகுதான் இவ்வழக்கின் தீர்ப்பு ஜூலை 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தேச துரோக வழக்கில் வைகோவுக்கு இரு வருடம் சிறை தண்டனை அளிக்கப்பட்டால் அவரால் நாடாளுமன்ற ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ என்று ஒரு தகவல் சட்ட வட்டாரங்களில் இப்போது தீவிரமான விவாதமாகியிருக்கிறது.
அதேநேரம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உண்டாக்கப்பட்ட இந்த தேச துரோக வழக்குகளில் இதுவரைக்கும் சுதந்திர இந்தியாவில் தண்டனை அளிக்கப்பட்ட வழக்குகள் மிக மிகக் குறைவானவைதான். அவையும் நாட்டைப் பிரிப்போம் என்று பகிரங்கமாக பேசிய பிரிவினை வாதிகளுக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே,’குற்றம் சாட்டுகிறேன்’ என்ற தலைப்பில் வெளியான ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதையே தமிழ் வெளியீட்டு விழாவிலும் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார் வைகோ. ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதற்காக தொடுக்கப்பட்ட வழக்கில் வைகோ விடுதலை செய்யப்பட்டுவிட்டதால், இந்த வழக்கிலும் வைகோ விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கிறார்கள் மதிமுகவினர்.
ஆனாலும் வைகோ மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதி சாந்தி ஏற்கனவே பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மீதானவழக்கு, அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி மீதான வழக்கு ஆகியவற்றை விசாரித்தவர். அவர்களுக்கு தண்டனை அளித்தவர். இந்தத் தீர்ப்பால்தான் பாலகிருஷ்ண ரெட்டி எம்.எல்.ஏ. பதவியையே இழந்தார். இந்த வகையில் நீதிபதி சாந்தி முன்னிலையில் வைகோ மீதான வழக்கும் வருவதால் த்ரில் ஆகவே காத்திருக்கிறார்கள் வைகோவின் நலம் விரும்பிகள். ஆனபோதும் சட்டத்தின் மீதான நம்பிக்கையால் தைரியமாக இருக்கிறோம் என்கிறார்கள் மதிமுகவின் வழக்கறிஞர்கள்” என்ற மெசேஜை அனுப்பிவிட்டு ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக