சனி, 6 ஜூலை, 2019

அதிருப்திக் குரல்... உதயநிதியின் சமரசப் பயணம்!

 டிஜிட்டல் திண்ணை :  அதிருப்திக் குரல்...  உதயநிதியின் சமரசப் பயணம்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி நிர்வாகிகளோடு ஆலோசனைகளைத் தொடங்கிவிட்டார். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என்று ஆலோசனைகளை நடத்தத் திட்டமிருக்கிறது. அதேநேரம் அறிவாலயத்திலேயே இருக்கும் சீனியர்கள் உள்ளிட்ட சில மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் இப்போது இந்த நியமனம் தேவையா என்ற கேள்விக் குரல் கேட்கிறது. ‘நீங்கதானய்யா ஒவ்வொரு மாவட்டமா தீர்மானம் போட்டு அனுப்பினீங்க?’ என்று கேட்டால், அதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார்கள் மாசெக்கள். ‘அது அன்றைக்கு அன்பில் மகேஷ் ஒவ்வொரு மாசெவுக்கும் போன் போட்டு தலைவர் வீட்லேர்ந்து சொன்னதாக சொன்னாரு. அதனாலதான் அந்தத் தீர்மானம் போட்டோம்’ என்கிறார்கள்.
உதயநிதி கட்சிக்குள் வருவதை சில மாசெக்கள் தீவிரமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள். ஆனால் சீனியர்களோ வேறு ஒரு கோணத்தில் பார்க்கிறார்கள்.
‘அதிமுக ஆட்சியை இதோ கவிழ்ப்போம், அதோ கவிழ்ப்போம்னு பல மாசங்களாக ஸ்டாலின் பேசிகிட்டிருக்காரு. எம்பி தேர்தல்ல ஜெயிச்சாலும், இங்க சட்டமன்றத்துல இன்னும் சில இடங்களைப் பிடிச்சு ஆட்சியைக் கவிழ்க்கத் தவறிட்டோம். டெல்லியில ஆட்சி மாற்றம் வரும், அங்கேர்ந்து இந்த ஆட்சியை மாத்திடலாம்னு ஸ்டாலின் ஒரு கணக்குப் போட்டாரு. ஆனா சட்டமன்ற இடைத்தேர்தல்ல அதிக சீட் வாங்கினாலும் ஆட்சியை கவிழ்க்குற அளவுக்கு ஜெயிக்க முடியல. இதனால் கட்சிக்காரங்கக்கிட்டயே அவரோட இமேஜ் சரிஞ்சுக்கிட்டிருக்குற நேரத்துல, இப்ப மகனுக்கு இப்படி ஒரு பதவி கொடுக்கறது சரியா இருக்காது’ என்பதுதான் சீனியர்களின் பார்வை.
இன்னும் சில மாசெக்கள் எதுவும் சொல்லாமல் புலம்பலோடு நிறுத்திக் கொள்கிறார்கள். இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. உதயநிதி எந்தப் பதவியிலும் இல்லாதபோதே கடந்த மக்களவைத் தேர்தலில் தனது கோட்டாவில் சிலருக்கு எம்.பி. சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறார். கள்ளக்குறிச்சி கௌதம சிகாமணி உள்ளிட்ட சிலருக்கு உதயநிதியின் அழுத்தத்தின் பேரில்தான் சீட் கிடைத்தது என்பது அப்போதே திமுகவில் பேச்சாக இருந்தது. பதவியில் இல்லாத உதயநிதிக்கே கோட்டா இருக்கும்போது இளைஞரணி மாநிலச் செயலாளர் என்றால் இனிவரும் தேர்தல்களில் அனைத்து மாவட்டங்களிலும் உதயநிதியின் ஆட்களே அதிகபட்ச வேட்பாளர்கள் ஆகக் கூடும் என்பது பல மாவட்டங்களின் கணிப்பு. இப்போதே உதயநிதி ஆதரவாளர்கள் சீனியர்களை மதிப்பதில்லை என்ற குறையும் வெளிப்படையாகவே திமுகவில் தெரிந்த விஷயம்தான். அதனால்தான் சில மாசெக்களுக்கு கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி அதில் உதயநிதியை அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு திட்டம் தீட்டப்பட்டது. அப்போது அன்பில் மகேஷ்தான், ‘மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை உதயநிதிக்காக கூட்டினால், அதுவே நாம் அதிகாரத்தைப் பயன்படுத்துறோம் என்ற தோற்றத்தை உருவாக்கிடும். தவிர நாம அப்படி ஒரு கூட்டத்தைக் கூட்டி அதில ஒரு மாவட்டச் செயலாளர் நம்மை கேள்வி கேட்குற மாதிரி ஏதாவது பேசிட்டா அது பெரிய இஷ்யூ ஆகிடும். அதனால முதல்ல அவங்களை வரவழைக்காமல் அவங்க இடத்துக்கு நாம் போகலாம். ஒவ்வொரு மாவட்டமா போய் இளைஞரணி நிர்வாகிகளை சந்திக்குற மாதிரி பயணத்திட்டம் வகுப்போம். அந்தப் பயணத்துல ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் வீட்டுக்கும் போயி தனியா பேசி அவங்களுக்கு ஒருவேளை ஏதாவது பயமோ சந்தேகமோ இருந்தா பேசித் தீர்த்துடுவோம்’ என சொல்ல, அந்த யோசனையை ஏற்றுக் கொண்டிருக்கிறார் உதயநிதி. எனவே விரைவில் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட ரீதியாக சுற்றுப் பயணம் என்ற அறிவிப்பு வெளியாகும். அதன் அர்த்தம் மாவட்டச் செயலாளர்களை சமரசம் செய்யும் பயணம் என்பதாகவே அமையும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
அதை ஷேர் செய்துகொண்ட ஃபேஸ்புக் தானும் உதயநிதி பற்றிய தகவலைப் பதிவிட்டது.
“இளைஞரணிச் செயலாளர் பொறுப்பேற்றதும் உதயநிதி அளித்த பேட்டியில் இளைஞர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது என்று குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே திமுகவில் உறுப்பினர் சேர்க்கை எப்படி நடந்து வருகிறது என்பதும், அதற்குண்டான படிவங்கள் எவ்வளவு நிரப்பப்படாமல் இருக்கின்றன என்பதும் பல நிர்வாகிகளுக்கும் தெரியும். இந்த நிலையில் உதயநிதி எப்படி புதிய உறுப்பினர்களை சேர்ப்பார் என்று கேட்டால், மன்றம் எதற்காக இருக்கிறது என்ற பதில்தான் வருகிறது. உதயநிதி ரசிகர் மன்றத்துக்கு அன்பில் மகேஷ்தான் தலைவராக இருந்தார். அவர் சட்டமன்ற உறுப்பினரானவுடன் ரசிகர் மன்றப் பதவியில் இருந்து விலகினார். அதன் பின் தலைவர் என யாரும் இல்லை. பொருளாளராக இருந்த சேலம் ராஜாதான் மன்றப் பணிகளை கவனித்துக் கொண்டார்.
உதயநிதியே மன்றத்தின் விழாக்களில் பேசும்போது, ‘என் மன்றத்துக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் ரசிகர்கள் அதிமுகவிலும் இருக்கிறார்கள், திமுகவிலும் இருக்கிறார்கள். எனவே இந்த மன்றம் அரசியலுக்கு அப்பாற்பட்டது’ என்று பேசியிருந்தார். ஆனால் இப்போது ரசிகர் மன்றங்களை நேரடியாக திமுகவில் இணைப்பது என்று திட்டமிட்டிருக்கிறார்கள். மன்றத்து நிர்வாகிகள் ஏற்கனவே திமுகவில் இல்லையெனில் அவர்களை திமுகவில் சேர்த்து இளைஞரணியில் பதவியும் கொடுத்து அவர்கள் மூலம் ரசிகர்களையும் திமுக உறுப்பினர் ஆக்குவது என்று திட்டமிட்டிருக்கிறார் உதயநிதி” என்ற மெசேஜை போஸ்ட் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக