வெள்ளி, 19 ஜூலை, 2019

தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தினமணி : தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு  இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். 22 ஆண்டுகளுக்கு முன்புவரை மாவட்டத் தலைநகர் என்ற பெருமையைப் பெற்றிருந்த செங்கல்பட்டு இப்போது மீண்டும் அந்தப் பெருமையை தக்க வைத்துக் கொண்டுள்ளது புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்:-
திருநெல்வேலி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிய மாவட்டங்களாக உள்ளன. இந்த மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து, நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.
இதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
பழம்பெரும் நகரம்: இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாக பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர பேரரசு ஆகியோரின் ஆதிக்கத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் இருந்தது. தொண்டை மண்டலம் என அழைக்கப்பட்ட அந்தப் பகுதியானது, 1997-ஆம் ஆண்டு வரையில் செங்கல்பட்டு-எம்.ஜி.ஆர். மாவட்டமாக இருந்தது. திமுக ஆட்சிக் காலத்தில் 1997-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதியன்று செங்கல்பட்டு மாவட்டமானது இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் என இரண்டு மாவட்டங்களாக உதயமானது. புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் இப்போது காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், செங்கல்பட்டு, தாம்பரம், திருக்கழுகுன்றம், மதுராந்தகம், செய்யூர்  ஆகிய எட்டு வட்டங்கள் உள்ளன. இந்த வட்டங்கள் இப்போது பிரிக்கப்பட்டு செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட உள்ளது. முதல்வர் பழனிசாமியின் அறிவிப்புப்படி,
22 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்டத் தலைநகர் என்ற பெருமையை செங்கல்பட்டு மீண்டும் பெறவுள்ளது.
தென்காசி மாவட்டம்: திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இருப்பது தென்காசி. இதனை தலைமையிடமாகக் கொண்டும் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தென்காசி நகரத்தில் 33 வார்டுகள் உள்ளன. 
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தென்காசி வட்டத்தில் 3.99 லட்சம் மக்கள்தொகை உள்ளது. தென்காசியைச் சுற்றிலும் மிகவும் புகழ்வாய்ந்த பாரம்பரியமிக்க இடங்கள் உள்ளன. செங்கோட்டை, கடையநல்லூர், சுற்றுலாத் தலமான குற்றாலம், ஆய்க்குடி, மேல் அகரம், சாம்பார் வடகரை, இலஞ்சி உள்ளிட்ட இடங்கள் உள்ளன. மேலும், கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதியாகவும் அது விளங்கி வருகிறது.
தென்காசியில் அண்மையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, தென்காசியை தனி மாவட்டமாக உருவாக்க அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். 
இதைத் தொடர்ந்து, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப் பேரவையில் வியாழக்கிழமை வெளியிட்டார்.
இனி மொத்த மாவட்டங்கள் 35
1. அரியலூர்
2.  சென்னை
3. கோயம்புத்தூர்
4. கடலூர்
5. தருமபுரி
 6. திண்டுக்கல்
7. ஈரோடு
8. காஞ்சிபுரம்
9. கன்னியாகுமரி
10. கரூர்
11. கிருஷ்ணகிரி
12. மதுரை
13. நாகப்பட்டினம்
14. நாமக்கல்
15. நீலகிரி
16. பெரம்பலூர்
17. புதுக்கோட்டை
18. ராமநாதபுரம்
19. சேலம்
20. சிவகங்கை
21. தஞ்சாவூர்
22. தேனி
23. தூத்துக்குடி
24. திருச்சி
25. திருநெல்வேலி
26. திருப்பூர்
27. திருவள்ளூர்
28. திருவண்ணாமலை
29. திருவாரூர்
30. வேலூர்
31. விழுப்புரம்
32. விருதுநகர்
33. கள்ளக்குறிச்சி
34. தென்காசி
35. செங்கல்பட்டு
விரைவில் தனி மாவட்டமாக கும்பகோணம்
விரைவில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
செங்கல்பட்டு, தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என்ற முதல்வர் பழனிசாமியின் அறிவிப்புக்கு வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர். எனவே, அந்த மக்களின் கோரிக்கையும் பரிசீலனையில் உள்ளது என்றார் அமைச்சர் உதயகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக