புதன், 3 ஜூலை, 2019

தமிழ்நாடு செய்தி ஊடக முதலாளிகளுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை

Subaguna Rajan : பாஜக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளாது என்ற மிரட்டல் பல கிண்டல்களால் எதிர்கொள்ளப்படுவதைக் காண
முடிகிறது. எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் இதனை ஒரு சவாலான ஆபத்தாகவே கருதுகிறேன் .
ஏற்கனவே அவர்களது மக்கள் ஆதரவு சக்திக்கும் மீறிய விகிதத்தில் அவர்கள் பங்கு பெற்றனர். நெறியாளர்களையும், சக விவாத அரங்கின் பங்கேற்பாளர்களையும் மிரட்டுவதை நாராயணன் போன்றவர்கள் பலமுறை வழக்கமாக கொண்டுள்ளது ஊரறிந்த செய்தி. இது கருதியே ஊடக நெறியாளர்கள் விவாதம் முற்றிலும் பாஜக வை நோகடிப்பதாக இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவார்கள் .அது கார்ப்பரேட் ஊடக தர்மம் . நெறியாளர்களைப் பிழை சொல்லிப் பயனில்லை.
இதுதான் நிலை எனும் போது ஏன் இந்தக் கோப ஆவேசம்?
சிலநாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற மேலவையில் பேசிய திரிணமுள் காங்கிரஸ் உறுப்பினர் மொஹூவா மோய்த்ராவின் அனல் பறந்த உரையில் ஒன்றைக் குறிப்பிட்டார். இந்தியாவின் ஐந்து பெரிய ஹிங்லிஷ் செய்தி ஊடகங்களும், பெரும்பாலான இந்தி ஊடகங்களும் பாஜக/ மோடி 24/7 துதி பாடுகின்றனர் என்று. அது முற்றிலும் உண்மை என்பதை தினமும் அந்த வதையை ஏற்க வேண்டியவனாக இருக்கும் நானே சாட்சி.

 டைம்ஸ் நவ் , ரிபப்ளிக், நியுஸ் எக்ஸ், இந்தியா டுடே, சிஎன்என் நியுஸ் 18 ஆகியவையே அவை. எப்போது வேண்டுமானாலும் பாருங்கள் ஒரு மணி நேர விவாதம், செய்தி analysis எதுவானாலும் எதிர்க் கட்சிகளை, குறிப்பாக காங் / ராகுலை பந்தாடியபடி இருப்பார்கள். அவர்களது விமர்சனம் எதிர்க்கட்சிகளின் தோல்வி, கொள்கைக் குழப்பம், உட்கட்சி சண்டை அக்கப்போர் அல்லது எதிர்க்கட்சிகளிற்குள்ளான மோதல் என்பதாகவே இருக்கும். மத்தியப் பிரதேசத்தில் கிரிட்கெட் மட்டையால் நகராட்சி அதிகாரியை அடித்த எம்எல்ஏ வானாலும், அந்த நபரை ‘தனியாக’ வைத்துச் செய்வார்கள். அதன் உட்பொருள், ‘ நாயே உன்னால் உன்னதமான பாஜக விற்கு கெட்ட பேர் ‘ என்பதாகவே இருக்கும்.
அமித் ஷா /மோடியின் ரணகள வேலை இனி தமிழ்நாட்டில்தான் என்பதால் ,இந்த மிரட்டல். பாஜக விற்கு ஒன்று தெரியும் , தங்கள் கட்சியினரால் எதையும் நகர்த்த முடியாது. கூட்டணி ஓபிஎஸ் /இபிஎஸ் கட்சியோ கும்பிட்டுக் காலில் விழுந்து துட்டுப் பார்ப்பதையே குறியாக கொண்டது என்று .
எனவே தமிழ்நாடு செய்தி ஊடக முதலாளிகளுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை இது. இனி ஊடகங்கள் வடக்கத்திய மாதிரியை பின்பற்ற வலியுறுத்தப்படுவார்கள். ஒரே எதிரியாகத் தெரியும் திமுக குறி வைக்கப்படும். (ஏற்கனவே பல சேனல்கள் அப்படித்தான் என்பவர்கள் இனி கூடுதலான விவகாரங்களைப் பார்க்கலாம் ) . திமுக வை குறிவைப்பதையே திராவிட எதிர்ப்பு எனப் பேசினால் பல நாதக உள்ளிட்ட தமிழ்தேசியர்கள் வரிசைகட்டி நிற்பார்கள். தோழமை கட்சிகளும் திராவிட ஒவ்வாமையால் கொஞ்சம் மனங்கனிந்து மகிழ வாய்ப்புள்ளது. உதாரணமாக உ. பி , பீகார் எதிர்க்கட்சிகள் தோல்வியை மண்டல் அரசியல்/ சாதிகளின் அரசியல் தோல்வி என இன்றும் பேசுவது தொடர்கிறது. விளைவு மாயாவதி/ அகிலேஷ் பிரிவு. இதுதான் இவர்கள் பாதை. ஏற்கனவே மம்தாவே வங்கத்தில் பாஜக வை எதிர்கொள்ள காங்கிரஸ் / கம்யூ கூட்டணி பேசுகிறார் . ஆனால் காரத் ‘ பாசிசம் இல்லை அதன் சாயல் ‘ என சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கிறார். திரிணமுளை விட பாஜக மேல் என்ற வாதம் மார்க்சிய நிலைப்பாடு என்ற அவலம் அங்கே .
இந்தக் கூத்துகளை இங்கேயும் அரங்கேற்ற ஆரம்பமாகும் மிரட்டல் நாடகம் இது. தமிழக இடதுசாரிகள் நிச்சயமாக ‘ காரத்கள் ‘ இல்லை என்பதில் ஐயமில்லை. தலைவர் திருமாவிடமும் இந்தவேளை செல்லாது. வைகோ மேலவையில் முழங்கும் போது இது ஆகாது என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
அ இ அதிமுக வை ஷாகாவுக்கு அழைத்துப் போகும் திட்டம் வலுக்கும். ‘ அதிவரதர் ‘ கொண்டாட்ட விழா பொதுவிடுமுறை நாளாவது ஆரம்பம். ஓபிஎஸ் காவியுடை அணிய எப்போதும் தயார். பார்க்கலாம் . தீர்மானமான முடிவுகளை தற்காலிகமாக தள்ளி வைத்து ‘ வேடிக்கை ‘ பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக