செவ்வாய், 30 ஜூலை, 2019

அப்போது ரெய்டு.. இப்போது சொத்துக்கள் முடக்கம்.. குட்கா வழக்கில் விஜயபாஸ்கருக்கு மீண்டும் சிக்கல்!

By Shyamsundar  tamiloneindia :  சென்னை:  குட்கா ஊழல் வழக்கு விசாரணையில் சிபிஐ வேகம் காட்ட தொடங்கி உள்ளது அமைச்சர் விஜய் பாஸ்கருக்கு மீண்டும் சிக்கலை
ஏற்படுத்தி உள்ளது. இதில் சிக்கி இருக்கும் முக்கிய தலைகளின் சொத்துக்கள் வரிசையாக முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற வருடம் செப்டம்பர் மாதம் குட்கா ஊழல் தமிழகத்தில் முக்கிய தலைப்புச்செய்தியாக இருந்தது. குட்கா ஊழலில் அடுத்தடுத்து நிறைய ரெய்டுகள் நடந்தது.
 ஆனால் அதன்பின் அப்படியே இந்த ஊழல் வழக்கு குறித்த செய்திகள் அடங்கி போனது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திமுக வழக்கு தொடுத்தது. சென்ற வருடம் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிய சிபிஐ அதில் பெரிய முன்னேற்றம் எதுவும் அடையவில்லை.
குட்கா ஊழல்.. ரூ.248 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அதிரடி முடக்கம்.. மாதவராவிற்கு இடி கொடுத்த ஈடி!
கடந்த 2013ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்கவும் தடை விதித்தது.
அனால் தடையை மீறி தமிழகத்தில் குட்கா பொருட்கள் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது.

இதற்காக பலருக்கு, பல கோடிகளில் லஞ்சம் வழங்கப்பட்டது. குட்கா நிறுவன தொழில் அதிபர்கள் பலர் இதற்காக கோடிகளை வாரிக்கொடுத்தனர்.
குட்காவை வைத்து நடந்த இந்த ஊழல்தான் தற்போது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு பின் முக்கிய தலைகளின் பெயர்கள் அடிபட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் லஞ்சம் வாங்கி இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் தொடர்ந்து அப்போது பலரது வீடுகளில் ரெய்டு நடந்தது.
 இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்ட புள்ளிகளின் வீடுகளில் சிபிஐ சோதனை நடந்தது. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் குட்கா ஊழல் நடந்தது உண்மைதான் என்று வெளிப்படையாக பேட்டி அளித்தார்.

 இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய போகிறார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அப்போது அவர் ராஜினாமா செய்யவில்லை.இவருக்கு எதிராக அதிமுகவிலேயே சிலர் காய் நகர்த்தியதாகவும் செய்திகள் வந்தது. ஆனால் அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் எதற்கும் அசைந்து கொடுக்காமல் உறுதியாக இருந்தார்.

இப்போது என்ன இந்த நிலையில் இன்று திடீர் திருப்பமாக குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கும் மாதவராவ், சீனிவாச ராவிற்கு சொந்தமான ரூ.246 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டு பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதில் மேலும் சிலரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கும் என்றும் கூறுகிறார்கள்.

 குட்கா ஊழல் வழக்கு விசாரணையில் சிபிஐ வேகம் காட்ட தொடங்கி உள்ளது அமைச்சர் விஜய் பாஸ்கருக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதில் சிக்கி இருக்கும் முக்கிய தலைகளின் சொத்துக்கள் வரிசையாக முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அமைச்சர் விஜய் பாஸ்கர் மீண்டும் தமிழக அரசியலில் லைம் லைட்டிற்கு திரும்பி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக