வெள்ளி, 19 ஜூலை, 2019

கர்நாடகா சபாநாயகர் : வாக்கெடுப்புக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை

ஓட்டெடுப்புக்கு உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை -  கர்நாடக சபாநாயகர் அறிவிப்புமாலைமலர் : நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் கூறியுள்ளார். பெங்களூர்: கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டசபையில் காங்கிரஸ் 79 இடங்களையும், மதசார் பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் பெற்றுள்ளன. ஒரு பகுஜன் சமாஜ் உறுப்பினரும், 2 சுயேட்சைகளும் குமாரசாமி அரசுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கொடுத்தனர். 2 சுயேட்சைகளும் ஆதரவை வாபஸ் பெற்று பா.ஜனதா பக்கம் சாய்ந்தனர்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவால் குமாரசாமி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

அதிருப்தி எம்.எல். ஏ.க்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் தலைவர்கள் ஈடுபட்டனர். இது தோல்வியில் முடிந்ததால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தங்களது ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, “ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் என்றும் 15 எம்.எல்.ஏ.க்களையும் சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு கட்டாயப் படுத்தக் கூடாது என்றும், அவர்கள் விரும்பினால் சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் அல்லது விலகியும் இருக்கலாம்” என்றும் தீர்ப்பு அளித்தது.
இதற்கிடையே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க தயார் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார். அதன்படி நேற்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதல்-மந்திரி குமாரசாமி கொண்டு வந்து பேசினார்.
அப்போது சட்டசபையில் காங்கிரஸ்- பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே விவாதமும், அமளியும் ஏற்பட்டது. வாக்கெடுப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கேட்டுக் கொண்டார். பல முறை அமளி ஏற்பட்டதால் சட்டசபை கூட்டம் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நம்பிக்கை தீர்மானத்தின் மீது உடனடியாக ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தினார். ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்பட வில்லை. இதனால் எடியூரப்பா மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் விடிய, விடிய தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அங்கேயே படுத்து தூங்கினார்கள்.
முன்னதாக ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் சென்ற பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனு கொடுத்தனர்.


இன்று பகல் 1.30 மணிக்குள் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கர்நாடக சபாநாயகருக்கு கவர்னர் உத்தரவிட்டு உள்ளார். அந்த உத்தரவை சபாநாயகர் ஏற்பாரா என்று தெரியவில்லை.
நேற்று ஒத்திவைக்கப்பட்ட சட்டசபை கூட்டம் இன்று காலை கூடியது. அப்போது 2-வது நாளாக நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. முதல்-மந்திரி குமாரசாமி பேசும்போது கூறியதாவது:-
ஆட்சிக்கு வந்த 14 மாதங்களுக்கு பிறகு நாங்கள் இறுதி கட்டத்துக்கு வந்து இருக்கிறோம். நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும். உங்களால் (பா.ஜனதா)ஆட்சி அமைக்க முடியும். அதற்காக அவசரப்பட வேண்டாம்.
நேற்றோ அல்லது இன்றுகூட உங்களால் அதை செய்ய முடியும். நான் எனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்த மாட்டேன்.
நான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எனக்கு இந்த ஆட்சி நீண்ட நாட்கள் இருக்காது என்பது நன்றாக தெரியும். நீங்கள் எவ்வளவு நாட்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க போகிறீர்கள் என்பதையும் உங்களுக்கு உதவி செய்தவர்களுடன் (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்) ஆட்சி அமைத்து மக்களுடன் எப்படி இணைக்கமாக இருக்கப்போகிறீர்கள் என்பதையும் நான் இங்கிருந்து பார்க்கத்தான் போகிறேன்.
மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு சரியான நேரத்தில் ஆட்சிக்கு வந்தது. அதை அகற்றுவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
உங்களுக்கு போதுமான உறுப்பினர்கள் இருக்கும் பட்சத்தில் நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்தை ஒரே நாளில் முடிக்க வேண்டும் என்று ஏன் அவசரப்படுகிறீர்கள்.
எங்கள் கூட்டணி உறுப்பினர்களுக்கு ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் கள் சபையில் பேச அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் பேசியதாவது:-
எங்களை ரூ. 5 கோடி முதல் 10 கோடி வரை கொடுத்து விலைக்கு வாங்க பா.ஜனதா கட்சியினர் முயற்சித்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் தரப்பில் இருந்து எங்களை தொடர்பு கொண்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்கள். இது அவமானகரமான செயலாகும். இதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் ரமேஷ்குமார் பேசியதாவது:-
காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் பா.ஜனதாவின் செயல் மோசமானது ஆகும். இதை நாம்அனுமதிக்க கூடாது. இன்றைக்கு நானும், எம்.எல்.ஏ.க்களும் பேசிய பேச்சுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மாட்டோம். அவை கட்டாயம் அவைக்குறிப்பில் இடம்பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் குமாரசாமி பேசும் போது, “எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் பா.ஜனதாவின் செயல்களை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ள ஒரு பாடமாக இருக்க வேண்டும். அதற்காக விவாதங்கள், சட்டசபை குறிப்பில் இடம் பெற வேண்டும்” என்றார்.
நம்பிக்கை ஓட்டெடுப்பை முதல்-மந்திரி குமாரசாமி கொண்டு வந்து உள்ளார். இந்த தீர்மானம் என்பது சட்டசபையின் சொத்தாகும். இதில் தலையிடயாருக்கும் அதிகாரம் இல்லை.
இந்த தீர்மானத்தின் மீது சட்டசபையில் விவாதம் நடக்கிறது. இந்த சபை நடவடிக்கையில் குறுக்கிட்டு கெடு விதிப்பதற்கு கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை. சபை செயல்பாடுகளில் தலையிடவும் அவருக்கு அதிகாரம் கிடையாது.
எனவே இதில் அவர் கெடு விதிக்க வேண்டியது இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு உரிய நேரத்தில் நடத்தப்படும்.
இவ்வாறு சபாநாயகர் ரமேஷ்குமார் கூறியுள்ளார்.
மதியம் 1.30 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டதை காங்கிரஸ் தலைவர்களும், மத சார்பற்ற ஜனதாதள தலைவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கர்நாடக அரசியலில் மிகவும் குழப்பம் நீடிக்கிறது.
சபை நடவடிக்கைகள் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பும் கேள்வி குறியும் இன்று மதியம் அதிகரித்தது. இதையடுத்து கர்நாடக சட்டசபை வளாக பகுதியில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. இதனால் கவர்னர் உத்தரவிட்டபடி நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நடைபெறுவது சந்தேகம்தான். இது மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக