சனி, 13 ஜூலை, 2019

ராகுல் காந்தி : பண பலத்தை பயன்படுத்தி மாநில அரசுகளை பாஜ கவிழ்க்கிறது.. : வீடியோ


தினகரன் : அகமதாபாத்: ‘‘மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜ பண பலத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்துகிறது. இதுதான் உண்மை நிலவரம்,’’ என  காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார்.கடந்த 2016ம் ஆண்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டு அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டன. அப்போது, ரூ.750 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை குஜராத் மாநிலம், அகமதாபாத்  மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் அஜய் படேல் உதவியுடன் பாஜ.வினர் மாற்றியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதை எதிர்த்து ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது அஜய் படேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கில் ஆஜராவதற்காக அகமதாபாத் வந்த ராகுல், தான் நிரபராதி என்று நீதிபதியிடம் குறிப்பிட்டார். பின்னர், இந்த வழக்கில் அவருக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


இந்த வழக்கில் ஆஜராக அகமதாபாத் வந்தபோது ராகுல் அளித்த பேட்டியில், ‘‘மாநில அரசுகளை கவிழ்க்க பண பலத்தையும், அதிகாரத்தையும் பா.ஜ பயன்படுத்துகிறது. இதுதான் உண்மை. முதலில் கோவா, அடுத்து வடகிழக்கு மாநிலங்களில்  ஆட்சியை கவிழ்த்தனர். தற்போது, அதே பாணியை கர்நாடகாவில் பின்பற்றுகின்றனர். ஆனால், காங்கிரஸ் உண்மைக்காக போராடுகிறது. உண்மைதான் காங்கிரசை வலுப்படுத்துகிறது.  என்னை அச்சுறுத்தும் முயற்சியாக இந்த அவதூறு வழக்கு  தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் நான் பயப்படவில்லை. நான் தொடர்ந்து போராடுவேன். இது நாட்டின் எதிர்காலத்துக்கான போராட்டம். ஊழல் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான பேராட்டம். இது தொடரும்,’’ என்றார். மேலும் அவர் டிவிட்டரில் வெளியிட்ட தகவலில், ‘ மக்கள் மத்தியில் கொள்கை ரீதியாக போராட எனக்கு வாய்ப்பு அளித்த, பா.ஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த எதிர்ப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என  குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக