புதன், 31 ஜூலை, 2019

வேலூர் ... அதிமுகவினரின் கரன்சி வெள்ளம் ... தாக்கு பிடிக்க திணறும் துரைமுருகன்

மின்னம்பலம :  டிஜிட்டல் திண்ணை:  காந்தியை நம்பும் ஏசிஎஸ்- சித்தரை நம்பும் துரைமுருகன் -விரக்தியில் திமுகவினர்!மேலும் தேர்தல் பிரச்சாரத்திலேயே சில விஷயங்களை ஜாடைமாடையாக பேசிவிடுகிறார் துரைமுருகன். ‘நான் ரொம்ப சாதாரணமான குடியானவன். ஒரு கையில வெங்காயத்தையும் ஒரு கையில கூழையும் வச்சுக்கிட்டு குடிச்சுட்டு சேத்துல வேலை பார்த்தவன். நான் தொழிலதிபர் கிடையாது. மேல் சாதிக்காரன் கிடையாது’ என்றெல்லாம் பேசுகிறார் துரைமுருகன். இதைப் பக்கத்திலிருந்து பார்க்கும் மாவட்டச் செயலாளர்கள், ‘இது மக்களுக்காக பேசற பேச்சு மாதிரி தெரியலை. மாவட்டச் செயலாளர்களுக்காக பேசுறது மாதிரியே தெரியுது. ஒரு கையில வெங்காயமும், ஒரு கையில கூழும் பிடிச்சுகிட்டு எதுக்காக எம்பி தேர்தல்ல நிக்கணும்?’ என்று புலம்பித் தள்ளுகிறார்கள்.
மொபைல் டேட்டா ஆன் செய்ததும், புது லொக்கேஷன் காட்டியது வாட்ஸ் அப். டைப்பிங் மோடு சில நிமிடங்கள் நீடிக்க, அடுத்தடுத்து செய்திகள் வந்து விழுந்தன.
“வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை ஒட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டப்படி 3 நாட்கள் பரப்புரையில் இரண்டு நாட்கள் செய்து முடித்துவிட்டார். ஆகஸ்டு 2 ஆம் தேதி மூன்றாம் நாள் பரப்புரை மேற்கொள்கிறார் எடப்பாடி.

ஜூலை 27,28 தேதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி 27 ஆம் தேதி இரவு வேலூரில் ஏ.சி. சண்முகத்துக்கு சொந்தமான ஹோட்டலில்தான் தங்கினார். அன்று இரவு முக்கிய அமைச்சர்கள், வேட்பாளர் ஆகியோருடன் நெடுநேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர். அமைச்சர்களுக்கென பிரித்தளிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியிலும் தேர்தல் வேலை எப்படி நடைபெறுகிறது என்று ஆய்வு செய்ததோடு, நிர்வாகிகளுக்கு தேவையானதெல்லாம் கிடைக்கிறதா என்றும் கேட்டுள்ளார்.
முதல்வர் நடத்திய இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு அதிமுகவில் கடந்த சில நாட்களாக கரன்சி வெள்ளமும் கரைபுரண்டு ஓடுகிறது. ஒவ்வொரு அமைச்சரும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியிகளில் தாராளமாக நிர்வாகிகளுக்கு செலவழிக்கிறார்கள். அதனால் அதிமுக நிர்வாகிகள் தெம்பாகியிருக்கிறார்கள். வாக்காளர்களுக்கு, எப்போது செய்ய வேண்டும், எவ்வளவு செய்ய வேண்டும் என்பதையும் அதிமுகவில் மிகமிக பக்காவாக திட்டமிட்டிருக்கிறார்கள். கடந்த முறை பணப் பட்டுவாடா காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்ட தொகுதி என்பதால் வேலூரில் இம்முறை தேர்தல் ஆணையத்தின் கவனம் இரு மடங்கு கூர்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேலூரில் தேர்தல் ஆணையம் இருக்கிறதா இல்லையா என்பதையே தேடவேண்டியதாகியிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி தலைக்கு 1,500 ரூபாய் கொடுக்க அதிமுக தரப்பினர் தயாராகியிருக்கிறார்கள். இதற்கு அதிமுக வேட்பாளர் ஏசி எஸ்சும் ஒப்புக் கொண்டுவிட்டார் என்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
இதே நேரம் கேமராவை திமுக பக்கம் திருப்பினால் ’லயன் தி கிங்’ படத்தில் தந்தை சிங்கம் முஃபாசா இறப்புக்குப் பின் வறண்டு கிடக்கும் காட்டைப் போல, வறண்டு கிடக்கிறது திமுகவின் ஏரியா. தேர்தல் பணிகள் ஆரம்பிக்கும்போதே திமுக மாவட்டச் செயலாளர்கள் பலர் வேலூரில் தங்கள் சொந்தப் பணத்தைப் போட்டு வேலை செய்யத் தயாராக இல்லை என்பதை, துரைமுருகனுக்கு திமுக தந்த அதிர்ச்சி - வேலூர் திருப்பம்! என்ற தலைப்பில் ஏற்கனவெ டிஜிட்டல் திண்ணையில் வெளியிட்டிருந்தோம். திமுகவில் நிலைமை இப்போது இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கிறது.
இதுவரைக்கும் துரைமுருகன் தனது தரப்பில் இருந்து தேர்தல் செலவுக்கென்று பணம் எதையும் கொடுக்கவில்லை. ஒரு வாரத்துக்கும் மேலாக சொந்தப் பணத்தைப் போட்டு செலவழித்து நொந்து போன திமுக மாவட்டச் செயலாளர்கள் சிலர் துரைமுருகனிடமே இதுபற்றிக் கேட்டிருக்கிறார்கள். ‘இன்னும் ரெண்டு மூணு நாள்தாண்ணே பிரச்சாரமே இருக்கு. அதிமுக சைடுல வாக்காளர்களுக்கு பணம் கொடுக்குற அளவுக்குப் போயிட்டிருக்காங்க. நாம வேலை பார்க்குற நிர்வாகிகளுக்கே செலவு பண்ண முடியாம கஷ்டப்படுறோம். நீங்க கொஞ்சம் கொடுங்க’ என்று மாசெக்கள் கேட்டதற்கு துரைமுருகனோ, ‘ஏற்கனவே நடந்த தேர்தல்லையே நான் என்னோட முழு சக்தியையும் செலவு பண்ணிட்டேம்ப்பா. இப்ப எதுவும் இல்லை. தலைமை கொடுக்குமானு பாக்குறேன். கொடுத்தா தர்றேன்’ என்று சொல்லியனுப்பியிருக்கிறார். இதனால் மாவட்டச் செயலாளர்கள் ஏமாற்றமாகியிருக்கிறார்கள்.
மாவட்டச் செயலாளர்களின் இந்தப் புலம்பலை துரைமுருகனின் குடும்பத்தினர் சிலரே வீடு தேடிச் சென்று அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு துரைமுருகன் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘இதப் பாருங்க. மஹாமஹா ஆனந்த சித்தரே சொல்லிட்டாரு, யார் என்ன சொன்னலும் யார் என்ன செஞ்சாலும் உம் பையந்தான் வேலூர்லேர்ந்து டெல்லிக்கு போகப் போறான்னு சொல்லிட்டாரு. சித்தரே சொல்லிட்டாரு அப்புறம் என்னய்யா?’ என்ற துரைமுருகனின் பதிலைக் கேட்டு அவர்கள் ஆடிப் போய்விட்டார்கள்.
காட்பாடியிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் 19 ஆவது கிலோட்டரில் மகாதேவ மலை என்ற சிறு மலையிருக்கிறது. அங்கே இருப்பவர்தான் ஸ்ரீலஸ்ரீ ஆனந்த சித்தர். இவருக்கு துரைமுருகன் பல ஆண்டுகளாக பழக்கம். துரைமுருகனையே வாடா போடா என்று அழைக்கும் அளவுக்கு உரிமையானவர் அந்த சித்தர். திமுகவினர் பலரிடமும் இந்த சித்தர் பற்றி சொல்லி அவர்களையும் சித்தரின் பக்தர்களாக்கியிருக்கிறார் துரைமுருகன். இப்போது துரைமுருகனின் அறிமுகத்தால் அதிமுகவில் பலரும் இந்த சித்தரை நோக்கிச் சென்று வருகிறார்கள்.
அதிமுகவினர் காந்தி நோட்டுகளுடன் களேபரம் செய்துகொண்டிருக்க, திமுகவினரோ துரைமுருகனின் மகன் வெற்றியை சித்தரே பார்த்துக் கொள்ளட்டும் என்று சோர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இதுதான் வேலூரின் இன்றைய அப்டேட்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக